- இலங்கை எதிர்கொள்ளும் மின்சார நெருக்கடிக்கு பிரதான காரணம் எரிபொருள் மற்றும் நீர்வளம் போதுமானளவு இல்லாமை

- மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்ய, தெற்கு மின்கட்டமைப்பில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்க்க உடனடி நடவடிக்கை அவசியம்

- நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவசரகாலத்தில் மின்சாரத்தை கொள்வனவு செய்ய கொள்கையளவில் அனுமதி



மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமானளவு எரிபொருளை வழங்குவதன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள மின் தடையை உடனடியாக தீர்க்க முடியும், இதனால் தேசிய மின்கட்டமைப்பிற்கு 200-400 மெகாவாட் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக மின்சாரத் துறையின் ஒழுங்குறுத்துகை நிறுவனமான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“இலங்கையிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் இயங்க போதுமான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு நிதி இல்லாததே இலங்கையின் பெரும்பகுதிகளில் மின்சாரம் தடைப்படுவதற்கு முக்கிய காரணம். நாங்கள் நீர்த்தேக்கங்களை வறண்டுபோக விட்டோம், மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி மாதங்களில் மின்சார விநியோகத்திற்காக சேமிப்பிலிருந்த நீர் அதிகமாக பயன்படுத்தப்பட்டது.

எரிபொருள் விநியோகம் இல்லாத காரணத்தால் கடந்த இரண்டு வாரங்களாக 350 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையங்களை மூடவேண்டிய கட்டாயத்துக்கு மின்சார சபை தள்ளப்பட்டது. இந்த மாதத்தில் இதுவரை மின்சாரத்தை அனல் மின் நிலையங்களிலிருந்து 76 சதவீத மின்சாரத்தையும்,  19 சதவீத மின்சாரத்தை நீரினூடாகவும் புதுப்பிக்கத்தக்க சக்தியினூடாக 5 சதவீத மின்சாரத்தையும் உற்பத்தி செய்துள்ளோம். கடந்த ஆண்டு இதே மாதத்தில் 18 சதவீதமாக இருந்த அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாமையினால் இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் நீர் உற்பத்திக்கான கேள்வி 22 சதவீதமாக அதிகரித்துள்ளது.

"எரிபொருள் பற்றாக்குறையைத் தவிர, தென்பகுதி மின்கட்டமைப்பில் ஒரு தொழில்நுட்பக் கோளாறு உள்ளது, அதனை 2017 ஆம் ஆண்டிலிருந்தே உடனடி தீர்வைக் காணுமாறு இலங்கை மின்சார சபைக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம் ஆனால் இன்னும் நடைமுறைப்படுத்தப் படவில்லை,"

தற்போது நாடு எதிர்நோக்கும் நாணய நெருக்கடியால் எரிபொருள் இறக்குமதியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும் "நாங்கள் தற்போது அந்நிய செலாவணி நெருக்கடியில் இருக்கிறோம், அங்கு எரிபொருள் வாங்குவதற்கு போதுமான நிதி இல்லை. எங்கள் மின் உற்பத்தி நிலையங்களை இயக்க போதுமான எரிபொருள் இருப்பு இருந்தால் இந்த மின்வெட்டை முடிவுக்கு கொண்டு வர முடியுமென ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்தார்.

மேலும், இலங்கை மின்சார சபை எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சினை குறித்தும் எமது ஆணைக்குழு அறிந்திருக்கிறது.

"மின்சார சபைக்கான நிதிச் சுமையை ஓரளவு குறைக்கும் வகையில் மின்சார நுகர்வோர்கள் உரிய நேரத்தில் தமது மின்சார பாவனைக்கான கட்டணத்தைச் செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். ஆனால் பிரச்சினையானது மிகவும் பாரதூரமானது. கடந்த மின்சார கட்டண உயர்வை விட மின் உற்பத்தி செலவு 120 வீதம் அதிகரித்துள்ளது. தற்போது ஒரு மின் அலகுக்கான உற்பத்தி செலவு 37 ரூபாய். ஆனால் மின்சார அலகு சராசரியாக 16 -17 ரூபாய்க்கே வழங்கப்படுகிறது, இது சரியான உற்பத்தி செலவை பிரதிபலிக்கவில்லை. மேலும், இந்த ஆண்டு உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 113 டொலர்களாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியும் தற்போது அதிக சந்தை ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்திய தற்போதைய பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் ரூபாயை மிதக்கும் நிலையில் வைக்க தீர்மானித்துள்ளது. இந்த காரணங்கள் அனைத்துமே மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செலவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.மின்சார நுகர்வோர் மீது சுமையை ஏற்படுத்தாத அதே வேளையில் மின்சாரசபை மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு செலவு பிரதிபலிப்பு கட்டணத்தை நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.

தென்பகுதி கட்டமைப்பு பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த ஆணைக்குழுவன் தலைவர், தற்போது 100-150 MW திறன் குறைவாக உள்ள பிரச்சினைக்கு நீண்ட கால தீர்வுகளை காணுமாறு மின்சார சபைக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறினார்.

களனிதிஸ்ஸ, சபுகஸ்கந்த மற்றும் கெரவலப்பிட்டிய ஆகிய இடங்களில் உள்ள அனைத்து அனல் மின் நிலையங்களும் நீண்டகாலமாக வலுக்கட்டாயமாக செயலிழந்ததாலும் நீர்த்தேக்கங்களில் நீர் வளம் கடுமையாக குறைந்துள்ளதனாலும் நாட்டில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்சாரசபையின் மின்சாரத் திறன் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு மின்சார பாவனையாளர்கள் நாளாந்தம் 7 மணித்தியாலங்களுக்கு மேலாக மின்வெட்டை அனுபவிக்கும் வகையில் இருப்பதனாலும் இலங்கை மின்சாரச் சட்டத்தின் 43(4) (c) (ii) பிரிவின் கீழ் தேவைப்படும் ஆற்றல் துறையில் “அவசர நிலை” ஒன்றை அமைச்சரவை பிரகடனப்படுத்தியுள்ளது. இது 2022 மார்ச் 02 அன்று அதிமேதகு ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதனுடன், நீண்ட நேர மின்வெட்டை உடனடியாகக் குறைக்கும் வகையில், 6 மாதங்களுக்கு ACE பவர் (எம்பிலிபிட்டிய) மின் உற்பத்தி நிலையத்திடமிருந்து குறுகிய காலத்திற்கு மின்சாரத்தை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தின் கீழ் 93 MW கொள்ளளவிற்கு அனுமதி கோரியுள்ளது.

"மின்சாரசபையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். அதே நேரத்தில், இலங்கைக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான நிலையான நீண்ட கால திட்டத்தை நாங்கள் கொண்டுள்ளோம். நாங்கள் ஏற்கனவே 600 மெகாவாட் கொள்ளளவு கொண்ட திரவ இயற்கை மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க அனுமதி வழங்கியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

தினகரன்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.