(அஷ்ரப் அலீ)
தற்போதைய நிலையில் இனிமேலும் அரசாங்கத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்பது ராஜபக்ஷ குடும்பத்துக்கு தௌிவாக விளங்கிவிட்டது.
தற்போதைய நிலையில் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே பெரும்பான்மையாகக் கொண்டுள்ள அரசாங்கத்தின் பலம் எந்த நேரமும் நொறுங்கி விழலாம் என்ற பட்டவர்த்தனமான நிலை ஏற்பட்டுள்ளது.117 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐந்து பேர் ஆதரவை விலக்கிக் கொண்டால் அடுத்த நிமிடமே அரசாங்கம் கவிழ்ந்துவிடும்.
எனினும் தங்கள் குடும்பத்தினர், தங்களுக்கு மிக நெருக்கமானவர்கள் ஆகியோர் அவரவர் சொத்துக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு நாட்டை விட்டும் பாதுகாப்பாக வௌியேறும் வரை தாங்கள் பலமாக இருப்பதுபோலக் காட்டிக் கொண்டு அரசாங்கத்துக்கு சேலைன் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டிய இக்கட்டான நிலையில் அவர்கள் இருக்கின்றார்கள். அதன் காரணமாகவே ஒரு மாத கால அவகாசம் எடுத்துக் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவையின் பதவிகளை பொறுப்பேற்றுக் கொண்டவர்களுக்கு கூட கோடிக்கணக்கில் வாரி இறைத்து அவர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில் இனியும் தாமதித்தால் பொதுமக்களின் பலத்த எதிர்ப்புக்குள் தாம் சிக்கிக் கொள்ள நேரிடும் என்று ஆளுங்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது விழித்துக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். ராஜபக்ஷ குடும்பமும் அவர்களுக்கு நெருக்கமானவர்களும் தப்பியோட எடுக்கப்படும் முயற்சிகள், திரைமறைவு நடவடிக்கைகளை அவர்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளார்கள்.
அவ்வாறு அரச குடும்பம் தப்பிச் சென்ற பின் தாங்கள் மட்டும் இந்நாட்டின் பொதுமக்களின் எதிர்ப்பை தனியாக சமாளிக்க முடியாது என்ற அச்சம் அவர்களை ஆட்கொண்டுவிட்டது.
இதன் காரணமாக பிரதமர் மஹிந்த உடனடியாக பதவி விலக வேண்டும் , இடைக்கால அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்றும் இல்லாத பட்சத்தில் தாம் அரசாங்கத்தை விட்டு விலகி சுயாதீனமாக இயங்கும் முடிவுக்கு வரப் போவதாகவும் ஆளுங்கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதியிடம் நேரில் சென்று துணிச்சலாக எடுத்துரைத்துள்ளார்கள்.
வசந்த யாப்பா பண்டார, உதேனி கிரிந்திகொட, சுதத் மஞ்சுள, உபுல் கல்லபதி, குமாரசிறி ரத்நாயக்க, அகில எல்லாவல, ராஜித விக்கிரமசிங்க, லலித் எல்லாவல, அஜித் ராஜபக்ஷ, கே.பி.எஸ். குமாரசிறி உள்ளிட்ட குழுவே இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே எதிர்வரும் வாரங்களில் முன்னாள் அமைச்சர் டளஸ் அலஹப்பெரும, மொட்டு கட்சியின் முக்கிய பதவியொன்றுக்கு நியமிக்கப்பட்டு, தங்களுக்கு சாதகமான சூழல் ஒன்று மீண்டும் ஏற்படும் அவரை முன்னிறுத்தி அரசியல் செய்யவும் ராஜபக்ஷ தரப்பினர் தீர்மானித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.