தர்ஹா நகர் தேசிய கல்வியற் கல்லூரி
NATIONAL COLLEGE OF EDUCATION Dharganagar
இலங்கை முஸ்லிம் பெண்களின் கல்வி பற்றி அவர் ஒவ்வொரு நாளும் சிந்தித்துக்கொண்டே இருந்தார். முஸ்லிம் யுவதிகளை கல்வியில் வலுவூட்டத் தவறினால் அது பாரிய ஆபத்தாக அமையும் என்பதை அவரது உள்ளம் சொல்லிக்கொண்டே இருந்தது. 1915 கலவரத்தை கண்களால் கண்டவர் அவர். உடன் பிறந்த சகோதரியும் கலவரத்தின் இறுதியில் உயிர் தப்பியவர். இவையெல்லாம் பெண்கள் மீதான அவரது கரிசனைக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.
இலங்கைப் பாராளுமன்றத்தின் செனட் சபையில் அடிக்கடி ''இலங்கை முஸ்லிம்களின் கல்வி'' என்ற வார்த்தை ஒலித்துக்கொண்டே இருந்தது. பாட்டனார் கட்டிய கட்டடங்கள் கொழும்பில் இருந்தன. வாப்பா வாங்கிய நூற்றுக்கணக்கான ஏக்கர் தென்னங்காணிகள் குருநாகலில். இன்னும் பல கோடி பெறுமதியான சொத்துக்கள். ஆனால் இந்த மனிதனோ '' எங்கட சோனகப் பொண்டுகள படிக்க வைக்கோனும்' என்று தான் சொல்லிக்கொண்டிருந்தார்.
இதே காலப் பகுதியில் முஸ்லிம் பெண் மாணவிகளுக்கான ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை அமைப்பதற்கான காணியைத் தேடிக்கொண்டிருந்தார்.
வெலிகம நகரின் கடற்கரையோரத்தில் 2 ஏக்கர் காணி இருந்தது . அது S.D மாக்கான் மாக்காரின் மனைவிக்குச் சொந்தமான காணி . "எமது பெண் பிள்ளைகளுக்காக Training College அமைக்க உத்தேசம். உங்கள் காணி அதற்கு பொருத்தமான இடமாக இருக்கும் என்பதே எனது உத்தேசம்'' என்றார். ஆனால் காணி சொந்தக்காரர்களிடமிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை . அழுதுவிட்டார் அவர். ஆனால் உடைந்துபோகவில்லை.
ஒரு நாள் நிகழ்வில் பங்கேற்பதற்காகச் தர்ஹா நகர்சென்றார். இறப்பர் வியாபரியான I.L.Mமஹ்மூது ஹாஜியாரும் அங்கு வந்திருந்தார். தனது திட்டத்தை ஹாஜியாரிடம் விபரித்தார்.
உடனே ஹாஜியார் '' Sir எனது காணியில் எவ்வளவு தேவையோ எடுத்துக்கொள்ளுங்கள். 1915 கலவரத்தின் போது அழிந்த எனது வர்த்தகத்தை கட்டியெழுப்ப உங்களது தந்தையார் அப்துர் றஹ்மான் அவர்களே உதவினார்கள்'' என்றார். இந்த வார்த்தைகளை கேட்டவுடன் உடனடியாக கொழும்பு திரும்பினார். கல்வி அமைச்சர் கண்ணங்கரவை சந்தித்து 2 ஏக்கர் காணி கிடைத்ததை அறிவித்தார். கல்வி அமைச்சர் இதற்கு தனது பூரண ஆதரவை வழங்கினார். அமைச்சர் கண்ணங்கரவோடு இணைந்து அவரும் கல்லூரிக்காகான அடிக்கலை நாட்டி வைத்தார். அந்தக் கட்டமே இன்று தர்ஹா நகர் தேசிய கல்வியற் கல்லூரியாக பெண் ஆசிரியர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
இந்த சாதனைக்கெல்லாம் சொந்தக்காரர் இலங்கை முஸ்லிம்களின் முடிசூடா மன்னன் ராஸிக் பரீத் அவர்கள்
பஸ்ஹான் நவாஸ்