இன்றைய புதிய தலைமுறையின் ஆதர்ச வாசகம் ‘System Change’ என்பது. புழுத்துப் போய், ஊழலும், முறைகேடுகளும் மலிந்திருக்கும் இந்த அரசியல், சமூக கட்டமைப்பை தலைகீழாக புரட்டிப் போட வேண்டும் என்றார்கள் அவர்கள். 

இலங்கையில் இதே விதத்தில் சீரழிந்து போயிருந்த மிக முக்கியான ஒரு துறையில் இந்த ‘System Change’ ஐ ஒருவர் ஏற்கனவே வெற்றிகரமாக சாதித்திருக்கிறார் என்ற விடயத்தை இந்தத் தருணத்தில் நினைவூட்ட வேண்டும்.

2011 - 2015 காலப் பிரிவில் பிரதம தேர்தல் ஆணையாளராகவும், 2015 - 2020 காலப் பிரிவில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராகவும் பணியாற்றிய மஹிந்த தேசப்பிரிய தனிபராக நின்று இலங்கையின் தேர்தல் முறையில் ஏற்படுத்திய புரட்சிகரமான பல மாற்றங்களை புரிந்து கொள்ள வேண்டுமானால் 1977 - 2010 காலப் பிரிவில் எமது நாட்டின் தேர்தல் முறை எப்படியிருந்து வந்தது என்பதனை பார்க்க வேண்டும்; மாதிரிக்கான சில உதாரணங்கள் கீழே: 

- 1982 அக்டோபர் 20 இலங்கையின் முதலாவது ஜனாதிபதி தேர்தல் தினம். பிரதான எதிர்க்கட்சியான SLFP இன் வேட்பாளர் ஹெக்டர் கெப்பேகடுவ ஆதரவாளர்கள் புடை சூழ, தனது வாக்கை பதிவு செய்வதற்காக காலை 9.00 மணியளவில் கொழும்பு 3, லின்ட்சே மகளிர் கல்லூரி வாக்குச் சாவடிக்கு வருகிறார்.

அங்கு கடமையில் இருக்கும் உத்தியோகத்தர்கள் மிகவும்  பவ்வியமாக அவரிடம் சொல்கிறார்கள்:

‘சேர், மன்னிக்க வேண்டும். ஏற்கனவே ஒருவர் வந்து, உங்கள் வாக்கை பதிவு செய்து விட்டுப் போயிருக்கிறார்’!

- ஜே ஆர் ஜயவர்தனவை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதான எதிர்க்கட்சி வேட்பாளருக்கு இந்தக் கதி. ஏமாற்றத்துடன் அவர் வீடு திரும்புகிறார். கொழும்பு நகரில் மற்றொரு வாக்குச் சாவடிக்கு வாக்களிக்கச் சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் பீட்டர் கெனமனுக்கும் அதே நிலை. 

- அத்தனைக்கும் அவ்விருவருடைய பெயர்களும் இலங்கையில் மிகவும் அரிதாக பயன்படுத்தப்படும் பெயர்கள்.

- 1983 மே 18. மஹர தொகுதிக்கான இடைத்தேர்தல் மிகவும்  பரபரப்பான சூழலில் நடக்கிறது. SLFP வேட்பாளர் ஜே ஆருக்கு துளியும் பிடிக்காத ஜனரஞ்சக நடிகர், இளம் அரசியல்வாதி விஜய குமாரதுங்க (1994 - 2005 காலப் பிரிவில் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்காவின் கணவர்).

கம்பஹா கச்சேரியில் வாக்குச்சீட்டுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து இழுத்தடிக்கப்படுகிறது. நீண்ட தாமதம் (அதற்கான காரணம் அப்பொழுது ஓரளவுக்கு வெளியில் கசிந்திருந்த போதிலும், அண்மையில் ஒரு யூடியூப் உரையில் உப்புல் சாந்த  சன்னஸ்கல அதை உறதிப்படுத்தியிருந்தார்). வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் ஜனாதிபதியுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருக்கிறார்கள். நடு இரவில் ஜே ஆரின் அழைப்பு வருகிறது. 

சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் விஜய குமாரதுங்க வெற்றியீட்டியிருப்பதாக சொல்கிறார்கள் அதிகாரிகள். 

“அந்த ஆள் தோற்கும் வரையில் மீண்டும் மீண்டும் வாக்குகளை எண்ணுங்கள். இனி என்னை தொடர்பு கொள்ள வேண்டாம்” என்று உறுதிபடக் கூறிவிட்டு, தொலைபேசியை துண்டிக்கிறார் ஜனாதிபதி. 

அடுத்த நாள் பகல் மஹர தொகுதியின் பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படுகின்றன. யூஎன்பி வேட்பாளர் 45 அதிகப்படியான வாக்குகளால்  வெற்றியீட்டியிருக்கிறார்.

- ஜனவரி 1999 வயம்ப மாகாண சபைத் தேர்தல். இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரையில் பதிவாகியிருக்கும் படு கேவலமான நிகழ்வு. தேர்தல் தினத்தன்று மட்டும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை 895. (இங்குள்ள முரண்நகை என்னவென்றால், இந்தக் கேலிக்கூத்தை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அப்போதைய ஜனாதிபதி CBK இப்பொழுது ‘System Change’ பற்றிப் பேசுவது தான்).

- ஒதுக்குப் புறமான பிரதேசங்களில் அமைந்திருக்கும் வாக்குச் சாவடிகளில் அமைச்சர்கள் ஆயுதம் தாங்கிய தமது அடி ஆட்களுடன் வாக்கெடுப்பு முடியும் தருணத்தில் அத்துமீறி பிரவேசித்து, அதுவரையில் பதிவாகாமல் இருக்கும் வாக்குச் சீட்டுகளை பலவந்தமாக பிடுங்கி எடுத்து, புள்ளடியிட்டு பெட்டிகளில் திணித்த சம்பவங்கள் எண்ணற்றவை. 

- 1977 - 2010 காலப் பிரிவில் இலங்கை மக்கள் தேர்தல்கள் மீது முழுவதும் நம்பிக்கை இழந்திருந்ததுடன், இனிமேல் நிலைமை மாறும் என எவரும் கனவு கூட கண்டிருக்கவில்லை. 

ஆனால், 2011 தொடக்கம் இந்த நிலைமையில் படிப்படியாக ஒரு மாற்றம் நிகழ்கிறது.  சட்டத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டிருக்கும்  அதிகாரங்களை எவ்வித தயக்கமும்  இல்லாமல் உச்ச மட்டத்தில் பயன்படுத்திக் கொள்கிறார் மஹிந்த தேசப்பிரிய. பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் உயர் மட்டத் தலைவர்களுடன் கடுமையாக முரண்படும் நிலைமைகளையும் எதிர்கொள்கிறார். 

2015 ஜனாதிபதித் தேர்தலின் போது வன்முறைகள் உச்சகட்டத்தில் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவர் துணிச்சலுடன் எடுத்த ஒரு முடிவு வரலாற்றில் முன்னுதாரணங்கள் இல்லாதது. வாக்குச் சாவடிகளில் எவரேனும் பலவந்தமாக நுழைந்து, வன்முறையில் ஈடுபட முயன்றால் பொலிஸாரின் துப்பாக்கிகள் அந்த நபர்களின் தலைகளை பதம் பார்க்கும் என்று  சொல்லக்கூடிய ஓர்மையும், துணிச்சலும் அவருக்கு இருந்தது. 

அதனையடுத்து 2015, 2018, 2019 மற்றும் 2020 ஆகிய காலப் பிரிவுகளில் நடந்த நான்கு தேர்தல்கள்  இலங்கையின் தேர்தல் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒழுங்குவிதிகள் முழுமையாக பின்பற்றப்பட்ட தேர்தல்களாக இருந்து வந்தன. அத்தேர்தல்களில் படுதோல்வியடைந்த கட்சிகள் கூட முறைகேடுகள் குறித்து எத்தகைய முறைப்பாடுகளையும் முன்வைத்திருக்கவில்லை.

இப்பொழுது பதவியிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் அவர் தனது Legacy ஆக விட்டுச் சென்றிருக்கும் முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லாத இந்தத் தேர்தல்  முறை (Fool proof  Electoral  System)  தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். தேர்தல் திணைக்களத்தில் இப்பொழுது இருக்கும் அதிகாரிகள் அதனை பின்பற்றுவார்களா, இல்லையா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.