மொஹமட் ஆஸிக்


பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகராக பெண் ஒருவரை நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை பொருத்தமானது என சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (CaFFE)  தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை  வலுப்படுத்த இது ஒரு காரணமாக அமையும் என அந்த அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏழாவது பாராளுமன்றத்தில் பெண் உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆறு வீதத்திற்கும் குறைவாக காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மற்றும் தேசியப்பட்டியல் ஆசனங்களை வழங்குவதில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் பிரதான கட்சிகளின் தலைவர்கள் அக்கறை காட்டாத காரணத்தால் இம்முறை பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பதின்மூன்றாக  மட்டுப்படுத்தப்பட்ட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு தயாரிக்கும் நடவடிக்கையில் பெண்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற சட்டம் இருந்த நிலையில், தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் 23 சதவீத பெண் பிரதிநிதித்துவம்  இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 எவ்வாறாயினும், மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றத்தை கருத்தில் கொள்ளும்போது, இந்த நிலைமை மிகவும் துரதிஷ்டவசமானது. எனவே, இலங்கையின் சட்டமியற்றும் செயற்பாட்டில் பெண்களுக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு ஏனைய கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.