M.L.M.மன்சூர்

என்னதான் ‘நிர்பாக்ஷிக’ (கட்சி சாராத) என்று சொல்லிக் கொண்டாலும், கோல்பேஸ் திடல் ‘அறகல பூமியில்’ (குமார் குணரத்னத்தின் முன்னிலை சோசலிசக் கட்சியைச் சேர்ந்த) ‘பெரட்டுகாமி’ இளைஞர்களே முதன்மையான ஒரு வகிபாகத்தை வகித்து வருகின்றார்கள். அக்கட்சியின் கருத்தியலை ஒட்டிய விதத்திலேயே அங்கு காட்சிப்படுத்தப்படும் பதாகை வாசகங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

 ‘225 பேரும் வேண்டாம்’ என்ற சுலோகத்தின் மூலம் ஒரு பெரும் கட்டமைப்பு மாற்றத்தையே அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது, இலங்கை ஒரு சோசலிச அரசை நோக்கி அதன் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. 

ஆனால், அறகலயவுக்கு ஆதரவளித்து வருபவர்களில் பெரும்பாலானவர்கள் எந்த விளக்கமும் இல்லாமல் ஒரு மோஸ்தராக ‘System Change’ என்ற வார்த்தையை உச்சரித்து வருகிறார்கள். பலர் அரசாங்கத்திற்கு எதிரான தமது கடும் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரு வடிகாலாகவே அதனைப் பார்க்கிறார்கள். சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த பலரும், அதேபோல சிறுபான்மை சமூகங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு சில கட்சிகளின் ஆதரவாளர்களும் ராஜபக்சகளைத் தொலைத்துக் கட்டுவதே ‘System Change’ என பிழையாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இங்குள்ள சுவாரசியம் இந்தக் கட்டமைப்பு மாற்றத்தை துளியும் விரும்பாத, அதற்கு எதிர்த் திசையில் செயற்பட்டு வரும் பலரும் அந்தக் கோஷத்தை சுவீகரித்துக் கொண்டிருப்பது தான். இந்த இளைஞர் எழுச்சியை தமது இரகசிய அஜென்டாக்களை நிறைவேற்றிக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது அந்த ஆட்களின் திட்டம். 

உதாரணமாக, விமல் வீரவன்ச, அத்துரலியே ரதன தேரர் போன்ற கோட்டாபய ராஜபக்சவின் சிங்கள பெருந்தேசியவாத செயல்திட்டத்தின் ஆதரவாளர்கள், தமது அரசியல் எதிரியான பெரட்டுகாமி கட்சியினர் இதன் பின்னணியில் இருந்து வருகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டே ‘அறகலயவை’ ஆதரிக்கிறார்கள். காரணம் பசில் மீதான தீராத வன்மம். பசில் ராஜபக்சவை (பசில் ராஜபக்சவை மட்டும்) நாட்டிலிருந்து துரத்தியடிக்க வேண்டுமென்ற  தமது நீண்ட நாள் கனவை கோல்பேஸ் இளைஞர்கள் நனவாக்கிக் காட்டுவார்கள் என்பது இவர்களுடைய நப்பாசை.

ஆனால், இந்த எழுச்சித் தருணம் (Momentum) பல வழிகளில் முக்கியத்துவம் பெறுகிறது. இலங்கையில் இதுவரையில் சாத்தியப்படாதிருந்த – அப்படி நிகழ்வதற்கு அறவே வாய்ப்பில்லை என பலர் நினைத்திருந்த – ஒரு சில முக்கியமான கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை எடுத்து வருவதற்கு உசிதமான ஒரு சூழ்நிலை இப்பொழுது தோன்றியிருக்கிறது.

அரசியல், சட்டம் ஒழுங்கு, நீதித்துறை, அரச நிர்வாகம், கல்வி, சுகாதாரம் போன்ற முக்கிய துறைகளில் எமக்கு உடனடி மாற்றங்கள் தேவைப்படுகின்றன. 

முதலில் மிக முக்கியமான அரசியல் துறையைப் பார்க்கலாம்.

ஒரு ‘சிஸ்டத்தை’ மாற்றுவதற்கு முன்னர் அதன் தற்போதைய நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். ஆராய்ச்சியாளர்கள் அதனை ‘Baseline’ என அழைப்பார்கள். அதாவது> நிலைமை இப்பொழுது எப்படி இருக்கிறது என்பதனை முதலில் தெரிந்து கொள்வது அவசியம். அதன் பின்னர் இந்த நிலைமையை எப்படி மாற்றுவது> அந்த மாற்றத்துக்கு உதவக் கூடியவர்கள் யார் போன்ற விடயங்களைக் கவனத்தில் எடுக்க வேண்டும். 

- முதலீடு எதுவுமில்லாமல் செய்யக் கூடிய ஒரு தொழிலாக இப்பொழுது அரசியல் மாறியிருக்கிறது. சரியாக காய்களை நகர்த்தினால் ஓர் இரவில் கூட கோடி கோடியாக சம்பாதிக்கலாம். 

- 1970 கள் மற்றும் 1980 கள் வரையில் இலங்கையில் அரசியல் பெரும் இலாபமீட்டக் கூடிய ஒரு தொழிலாக இருந்து வரவில்லை. அரசாங்க தொழில்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு இலஞ்சம் வாங்கும் வழக்கம் மட்டும் ஒரு சில அரசியல்வாதிகளிடம் காணப்பட்டது. இதில் தரகர்களாக செயற்பட்ட அந்தந்த அரசியல்வாதிகளின் நெருங்கிய ஆதரவாளர்கள் அவ்விதம் செலுத்தப்பட வேண்டிய இலஞ்சத் தொகைகளை நிர்ணயித்திருந்தார்கள் (உதாரணம்: அரச வங்கிகளில் இலிகிதர் வேலை ரூ. 200,000, CO எனப்படும் வகா நிலதாரி ரூ. 100,000, ஆசிரிய நியமனம் ரூ. 100,000 என்ற விதத்தில்).

-  கிழக்கு மாகாண வட்டார வழக்கில் அதை ‘பந்தம் வாங்குவது’ என்று சொல்வார்கள். ஆனால், கடந்த 30 வருட காலத்தில் இதில் ஒரு பெரு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்காக அரசியல்வாதிகள் இலஞ்சம் வாங்குவது இப்பொழுது குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு ஊழல் துறையாக இருந்து வரவில்லை. அதற்குப் பதிலாக, பல கோடிகளில் பணம் சம்பாதிப்பதற்கென இப்பொழுது எண்ணற்ற பல கதவுகள் அவர்களுக்கென திறந்து விடப்பட்டுள்ளன. 

- அதற்கேற்றாற் போல, அரசியல்வாதிகள் முறைகேடுகள் மூலம் பணம் சம்பாதிப்பதை குறிப்பதற்காக இப்பொழுது கிழக்கில் ‘உழைப்பு’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.

- ‘A’ என்ற கட்சி மக்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தேர்தலில் வெற்றியீட்டி, ஆட்சிக்கு வருகின்றது. ஆனால், அவர்களுடைய ஆட்சியில் எல்லாம் தலைகீழ். ஊழல்களும், முறைகேடுகளும் எக்கச்சக்கம். அடுத்த தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான ‘B’ பல கோடி ரூபா செலவு செய்து (உபயம்: கட்சி ‘A' க்கு நிதியளிப்புக்களைச் செய்யும் அதே கம்பனிகள், பெரு வணிகர்கள் மற்றும் கருப்புப் பண முதலைகள்) ‘A’ க்கு எதிரான ஒரு தீவிர பிரசாரத்தை முன்னெடுக்கிறது.

- தேர்தலில் ‘B’ கட்சி வெற்றியீட்டுகிறது. பின்னர் ‘A’ விட்ட இடத்திலிருந்து தனது கைவரிசையை ஆரம்பிக்கின்றது. தலைகள் மட்டும் தான் வித்தியாசம். சில சந்தர்ப்பங்களில் ‘A’ கட்சி ஆட்சியின் போது அமைச்சர்களாக இருந்தவர்கள் ஏதேதோ சாக்குப்போக்குகளைச் சொல்லி கட்சி மாறி, ‘B’ அரசாங்கத்திலும் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.

- ‘A’ உம் ‘B’ உம் தேசியக் கட்சிகள். ‘X’  ஒரு சிறிய பிராந்தியக் கட்சி. முன்னைய தேர்தலில் ‘A’ உடன் கூட்டணி சேர்ந்து அது தேர்தலில் போட்டியிட்டது. தேர்தல் வெற்றியை அடுத்து கட்சி ‘A’ ஆட்சியமைத்த பொழுது, ‘X’ கட்சி ஒரு கெபினெட் அமைச்சர், இரண்டு ராஜாங்க அமைச்சர்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் என்பவற்றில் தனது ஆட்களுக்கு (வாகனங்கள் மற்றும் பிற வசதிகளுடன் கூடிய) ஒரு சில பதவிகள் மற்றும் இன்ன பிற சலுகைகள் என்பவற்றை பெற்றுக் கொண்டது. 

- அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் ‘X’ கட்சி, ‘A’  உடன் சேர்ந்து ‘B’ ஐ கடுமையாக வசைபாடி போட்டியிட்டது. மீண்டும் அக்கட்சிக்கு நான்கு ஆசனங்கள் கிடைக்கின்றன. தனக்கு கிடைக்கும் தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்றை தருவதாகவும் ‘A’  வாக்களித்திருந்தது. 

- அந்தத் தேர்தலில் கட்சி ‘B’ அதிகளவிலான ஆசனங்களைப் பெற்றுக் கொள்கிறது. ஆனால், ஆட்சியமைப்பதற்கு இன்னும் மூன்று எம் பி களின் ஆதரவு தேவை. ‘X’ கட்சியின் கிராக்கி திடீரென அதிகரிக்கின்றது. தொழில்முறை தரகர்கள் களமிறங்கி, கொழும்பு ஹோட்டல்களில் இரகசிய பேரங்களில் ஈடுபடுகிறார்கள்.

- பேரம் படிகிறது. ‘நாட்டின் அரசியல் ஸ்திரத் தன்மையைக் கருத்தில் கொண்டு ‘B’ கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கப் போவதாக’ ‘X’  கட்சியின் தலைவர் திடீர் அறிக்கை விடுகிறார்.   பணம் கோடிக் கணக்கில் கைமாறுவது மட்டுமன்றி, முன்னரைப் போலவே கெபினெட் அமைச்சு, ராஜாங்க அமைச்சுக்கள், ஏனைய சலுகைகள் என அனைத்தும் ‘X’ க்கு கிடைக்கின்றன.

- யார் ஆட்சிக்கு வந்தாலும் சில விஷயங்கள் மாறுவதேயில்லை. மருந்துச் சாமான்களை இறக்குமதி செய்வதில் ஏகபோக உரிமையை அனுபவித்து வரும் (மாபியா இயல்பிலான) ஒரு சில கம்பனிகளின் நெருங்கிய கூட்டாளியாக மாறுகிறார் சுகாதார அமைச்சர். சீனி, கிழங்கு, பருப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் என்பவற்றை இறக்குமதி செய்யும் புறக்கோட்டை பெரு வணிகர்களுடன் கள்ளக் கூட்டு வைத்திருக்கிறார் வர்த்தக அமைச்சர். இவை சாம்பிளுக்கான இரு உதாரணங்கள் மட்டும் தான்.

- அடுத்தது ‘Procurement’ என்றழைக்கப்படும் அரசாங்கத்தின் கொள்வனவு நடைமுறை. அதாவது, அரசாங்கத்துக்கு தேவையான சாமான்களையும், சேவைகளையும் கொள்வனவு செய்வதற்காக பின்பற்றப்பட்டு வரும் பல பில்லியன் ரூபா தொகைகளுடன் சம்பந்தப்பட்ட டெண்டர் நடைமுறை. அரசியல்வாதிகளுக்கு இவற்றுக்கூடாகவும் பல்வேறு விதமான அனுகூலங்கள் கிடைக்கின்றன என்பதை எல்லோரும் அறிவார்கள். 

- 1989 தேர்தலின் பின்னர் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் என ஒரு புதிய முறை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட்டு, அடிதடிகளில் இறங்கி பாராளுமன்றத்துக்கு வர முடியாதிருக்கும் துறைசார் வல்லுனர்கள், புத்திஜீவிகள் போன்றவர்களை பாராளுமன்றத்துக்குள் எடுத்து வர வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ஒரு முறை இது.

- ஆனால், முதல் தடவையே அது மிக மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதுடன், பதவி ஆசைக்காக எவ்வளவு பெரிய தொகையையும் இழக்கத் தயாராக இருக்கும் ஆட்களிடமிருந்து கோடிக் கணக்கில் பணத்தைக் கறப்பதற்கான ஓர் உத்தியாக பல கட்சிகள் அதனைப் பயன்படுத்திக் கொண்டிருந்தன. 

- பெரிய கட்சிகளும், சிறிய கட்சிகளும் தேர்தலின் போது தமது பிரச்சாரத்திற்கு பண உதவி செய்த (Campaign Funding) ஆட்களை ‘கவனிக்கும்’ ஒரு வழிமுறையாக தேசியப் பட்டியலைப் பயன்படுத்தி வருகின்றன. 1989 தொடக்கம் ஒவ்வொரு கட்சியும் நியமனம் செய்த தேசிய பட்டியல் எம் பி களின் பெயர் விபரங்களை மேலோட்டமாக பார்த்தாலே இதனைப் புரிந்து கொள்ள முடியும். 

- சுருக்கமாகச் சொன்னால், தேசிய பட்டியல் எம் பி முறை அந்தந்தக் கட்சிகளின் தலைவர், செயலாளர் போன்ற முக்கிய புள்ளிகள் ‘காசு பார்ப்பதற்கான’ மேலும் ஒரு வழியைத் திறந்துவிட்டிருக்கின்றது என்பது தான் யதார்த்தம்.

-  இந்த முறையின் மற்றொரு சுவாரசியம் குறிப்பிட்ட ஒரு கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் பாராளுமன்றத்துக்கு வர விரும்பும் பொழுது, ஏற்கனவே இருக்கும் தேசிய பட்டியல் எம் பி ஒருவரை ‘சுய விருப்பில்’ ராஜினாமா செய்ய வைக்கும் கூத்து. கோடிக் கணக்கில் கறுப்புப் பணம் கைமாறும் மற்றொரு கேவலமான ஒரு பேரம்.

- பாராளுமன்றத் தேர்தல்களில் மட்டுமல்லாமல் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றத்  தேர்தல்கள் போன்றவற்றுக்கு வேட்பு மனுக்களை வழங்கும் விடயத்திலும் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து ஒரு சில கட்சிகள் பணம் பறிப்பதை வழமையாகக் கொண்டுள்ளன. 

- அரசியல்வாதிகள் பணம் சம்பாதிப்பதற்கென புதிய புதிய வழிகள் திறந்து கொண்டே இருக்கின்றன. உதாரணம், பூகோள அரசியல் காய் நகர்த்தல்கள். அவற்றுக்கு ஊடாக உள்ளுர் அரசியல்வாதிகள் பயனடைந்து வருவதை சாதாரண வாக்காளர்களால் ஒரு போதும் கண்டு கொள்ள முடியாது. 

- 1987 இந்திய - இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அடுத்து இலங்கை அரசியலில் ஏற்பட்ட குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு மாற்றம், நாட்டின் உள் விவகாரங்களில் அதிகளவில் ஏற்பட்ட வெளித் தலையீடுகளாகும். குறிப்பாக, 1988 இல் நடாத்தப்பட்ட முதலாவது மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் அதனை அடுத்து வடக்கு கிழக்கில் தோன்றிய மிக மோசமான பதற்ற நிலைமைகள் என்பவற்றின் போது பல கட்சிகள் கொழும்பில் இயங்கிய வெளிநாட்டு தூதுவராலயங்களின் அஜென்டாக்களின் பிரகாரம் செயற்பட்டதுடன், அதன் போது பல கோடி ரூபா பணம் கைமாறியதாகவும் கூறப்படுகின்றது. பல அரசியல்வாதிகள் திடீர் பணக்காரர்களாக மாறினார்கள். 

- 1987 இல் தொடங்கிய அந்தப் போக்கு இன்று வரை நீடிக்கிறது. தேசிய மட்டத்தில் நிகழும் பல முக்கியமான அரசியல் நகர்வுகளின் பின்னணியில் பலம் வாய்ந்த நாடுகளின் தூதுவராலயங்கள் இருந்து வருகின்றன என்பது பகிரங்க இரகசியம். 

- இலங்கையில் காலூன்றுவதற்கென இரண்டு வல்லரசு நாடுகளுக்கிடையில் திரை மறைவில் ஒரு போட்டி இடம்பெற்று வருகிறது என வைத்துக் கொள்வோம். அது நமது அரசியல்வாதிகளுக்கு ஒரு கூடுதல் போனசாக மாறுகிறது. இலங்கை அரசாங்கம் அந்த இரு நாடுகளில் ஒன்றுக்கு தனது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம் ஒன்றை குத்தகைக்கு விடுவதற்கு முடிவு செய்கின்றது. எப்படியாவது அதனைத் தடுக்க வேண்டும் என போட்டி நாடு திட்டம் போடுகின்றது. காரியத்தை கச்சிதமாக முடித்து வைக்கும் பொருட்டு, வழமையாக தேசியவாத உணர்வுகளை தூண்டும் விதத்தில் செயற்பட்டு வரும் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியையும், சமயத் தலைவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு பலம் வாய்ந்த அமைப்பையும் தேவையான ‘காணிக்கைகளுடன்’ தன்பக்கம் வளைத்துப் போடுகிறது அந்த நாடு.

- அடுத்த நாள் தொடக்கம் அந்த தரப்புக்களின் தேச பக்தி உச்ச கட்டத்தில் எகிறுகிறது. கொழும்பில் நடக்கும் ஊடக மாநாடுகளில் ‘எமது தாய் மண்ணை காப்பாற்றிக் கொள்வதற்காக இன்னுயிரையும் கூட தியாகம் செய்யத் தயார்’ என்ற கோஷங்கள் விண்ணதிர எழுகின்றன. 

- இதை தான் ‘74 வருட கால சாபம்’ என்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்.

- ஆனால், இங்குள்ள முக்கியமான கேள்வி இலங்கை அரசியலில் ஆழமாக வேரூன்றியிருக்கும் இந்த ‘சிஸ்டத்தை’ மாற்றியமைப்பதற்கு அரசாங்க கட்சி மற்றும் எதிர் கட்சி உறுப்பினர்கள் முன்வருவார்களா என்பதாகும். இலங்கையில் இன்று இந்த கட்டமைப்பு மாற்றத்திற்காக உண்மையிலேயே குரல் கொடுத்து வரும் தனி நபர்களும், மக்கள் இயக்கங்களும் எதிர் கொண்டு வரும் மிகப் பெரிய சவாலாக இது இருந்து வருகின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.