(பா. நிரோஸ்) 

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியிலும் நாடு முழுவதும் 10,193 பாடசாலைகளில் 9,567 பாடசாலைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன, அந்த பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை முன்னேற்றமாகவே இருக்கின்றது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

தற்போதைய நெருக்கடி நிலைமையில்  மாணவர்கள் இழக்கும் பாடசாலை கல்வி காலத்தை அவர்களுக்கு முறையாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கின்றோம். மாணவர்களுக்கு இந்த வருட இறுதிக்குள் பாடத் திட்டங்களை பூர்த்தி செய்ய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். 

ஒக்டோபர், நவம்பரில் உயர் தரப் பரீட்சையை நடத்த திட்டமிடப்பட்டிருந்தாலும் அது சில காலம் ஒத்தி வைக்கப்படலாம். எனினும் இந்த வருடத்திற்குள் மாணவர்களுக்கு பாடத் திட்டங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்போம். இதன்படி ஆகஸ்ட், டிசம்பர் விடுமுறைகள் குறைக்கப்படும் என்றார்,

பாராளுமன்றத்தில் நேற்று (22) அமைச்சர் இதனை தெரிவித்தார். அதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

கொவிட் காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்ட போது தகவல் தொழில்நுட்பம் அதிகமாக உள்ள பிரதேசங்களை தவிர மற்றைய பிரதேசங்களில் முறையாக தொலைக் கல்வியை முன்னெடுப்பதில் சிக்கல்கள் காணப்பட்டன. 

இதனால் இம்முறை எரிபொருள் நெருக்கடியால் பாடசாலைகளை மூடும் போது அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி போக்குவரத்து வசதிகள் உள்ள கிராம பிரதேசங்களில் பாடசாலைகள் நடைபெறுகின்றன. அங்குள்ள பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை முன்னேற்றகரமாக இருக்கின்றது.

இதன்படி நாடு முழுவதும் 10,193 பாடசாலைகளில் 9,567 பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. 110 பாடசாலைகள் பரீட்சை விடைத்தாள் திருத்தும் நிலையங்களாக பயன்படுத்தப்படுகின்றன. இதன்படி 67 வீதம் ஆசியிர்களும் 64 வீத மாணவர்களும் செவ்வாய்க்கிழமை பாடசாலை வந்துள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு அடுத்த வாரத்தில் மேலும் முன்னேற்றத்தை காண முடியும்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.