ஆடம்பரத்தையும் வீண் விரயத்தையும் தவிர்ந்து கொள்வதில் கூடிய கவனம் செலுத்துவோம்

- ஊடக அறிக்கையில் பைஸர் முஸ்தபா தெரிவிப்பு( மினுவாங்கொடை நிருபர் )

   இலங்கை வாழ் மக்களாகிய நாம், அன்பும் மனித நேயமும் மிகவும் வேண்டப்படுகின்ற ஒரு துக்ககரமான கால கட்டத்தில் இருக்கின்றோம்.

   இந்நிலையில் நாம் இலங்கையர் என்ற வகையில், பிறர் நலம் பேணுவதில் அதிக அக்கறை செலுத்துவோம். அத்துடன், ஆடம்பரத்தையும் வீண் விரயத்தையும் தவிர்ந்து கொள்வதில் கூடிய கவனம் செலுத்தக்  கடமைப்பட்டுள்ளோம் என்பதையும் மறந்து விடக்கூடாது என, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

   குறிப்பாக,  செல்வந்தர்கள் தமது திருமண நிகழ்வுகள், விருந்துபசாரங்கள் போன்றவற்றில் இது விடயமாக சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   பைஸர் முஸ்தபா நற்பணி மன்றம் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

   அந்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

   குறைந்த வருமானம் பெறும் கொழும்பு நகரத்தின் சனத் தொகையில் சுமார் 60 வீதமானவர்கள் உணவுப் பற்றாக்குறையினால் பாதிக்கப்படும் சாத்தியம் உள்ளதாகத்  தெரிவிக்கப்படுகிறது.

   இவ்வாறான நிலையிலும்,  கொழும்பில் நாளாந்தம் 350 மெட்ரிக் தொன் உணவு வீணடிக்கப்படுகிறது.

   மேலும், முச்சக்கர வண்டிச் சாரதிகள் உட்பட அன்றாடம்  வருமானம் ஈட்டும் பலர் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

   எனவே, ஆடம்பரமாக திருமண விருந்துகளுக்காகச்  செலவு செய்து, இறைவனின் கோபத்தையும்,  மனிதர்களின் சாபத்தையும் தவிர்ந்து கொள்ளுங்கள்.

   இயலுமான வரையில் சிறார்கள், தொழில் இழந்தோர், விதவைகள் மற்றும்  நோயாளிகள் போன்றோருக்கு உதவி உபகாரங்களைச்  செய்து முன் மாதிரியாக நடந்து கொள்வதுடன், மனித நேயத்துடனும் வாழ்ந்து பழகுவோம்.

    நிரந்தர வருமானம் இல்லாத அண்மைய  நாட்களாக உணவு எதுவும் கிடைக்காமல்  பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இவ்வாறான கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

   குழந்தைகள் வெறும் வயிற்றில் நித்திரைக்குச்  செல்கின்றனர். பல குழந்தைகள் தினமும் பாடசாலைகளுக்குச் சமூகமளிப்பதில்லை. 

தற்போதைய நெருக்கடிக்கு முன்னதாகவே தெற்காசியாவில் இலங்கை அதிக ஊட்டச்சத்து குறைப்பாடு விகித கணக்கெடுப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

11/06/2022

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.