2015ஆம் ஆண்டு வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைதண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, இன்று (06) தீர்ப்பளித்தார்.

மேலும், அமைச்சர் பிரசன்னவுக்கு இரண்டரைக் கோடி ரூபாய் அபராதமும் செலுத்தத் தவறின் கடூழிய சிறைதண்டனையுடன் 9 மாதங்கள் சிறைதண்டனை அனுபவிக்க நேரிடும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட வரத்தகருக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும் செலுத்தத் தவறின் கடூழிய சிறையுடன் 3 மாதங்கள் சிறைதண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் கட்டளை பிறப்பித்துள்ளார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரின் மனைவி மற்றும் நரேஜ் பரீக் என்பவர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதிக்கும் 2015 ஜுன் 2ஆம் திகதிக்கும் இடையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரால் 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

மேல் மாகாண முதலமைச்சராக பிரசன்ன ரணதுங்க இருந்தபோது, கொலன்னாவை மீதொட்டமுல்லையிலுள்ள 2.5 ஏக்கர் சதுப்பு நிலத்தை நிரப்ப அனுமதி வழங்கியமை, வசித்த அனுமதியற்ற ஆக்கிரமிப்பாளர்களை அகற்றியமை ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், ஜி. மென்டிஸ் என்ற வர்த்தகரிடம் 64 மில்லியன் ரூபாய் பணம் கோரி மிரட்டியதாகவும் பிரசன்ன ரணதுங்க, அவருடைய மனைவி மொரின் ரணதுங்க, நரேஜ் பரீக் ஆகியோருக்கு எதிராக, சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மிரர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.