கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தலினை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு நேற்று மாலை மின்னஞ்சல் ஊடாக அனுப்பிவைத்தார்.

சிங்கப்பூரில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாகவே குறித்த கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கடந்த 09 ஆம் திகதி கொழும்பு உட்பட நாட்டில் பல பகுதிகளிலும் போராட்டம் வெடித்தது.

பெருந்திரளான மக்கள், கொழும்பு நோக்கி படையெடுத்து வந்ததால் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். ஜனாதிபதி மாளிகை, செலயகம் என்பன போராட்டக்காரர்கள் வசமானது.

இந்நிலையில் 13 ஆம் திகதி ஜனாதிபதி பதவி விலகுவார் என 09 ஆம் திகதி மாலை சபாநாயகர் அறிவித்தார்.

இதற்கிடையில் இலங்கையிலிருந்து மாலைதீவு தப்பியோடினார் ஜனாதிபதி கோட்டா. அங்கிருந்து சிங்கபூர் சென்ற பிறகே, அவ இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

அதன் சட்டப்பூர்வ தன்மை குறித்து சட்டாமா அதிபருடன் கலந்துரையாடி – உறுதிப்படுத்திய பின்னர், சபாநாயகரால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்தக் கடிதத்தின் மூலப் பிரதியை சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் கொழும்புக்கு இராஜதந்திரி ஒருவர் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையிலேயே தற்போது பதவி விலகல் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவித்தலினை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக இன்று பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதம நீதியரசர் முன்னிலையில் அவர் பதவியேற்பார் என தெரியவருகின்றது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.