கடந்த சனிக்கிழமை (09.07.2022) பிரதமரின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிப்பதோடு, இதில் ஈடுபட்டவர்கள் சரியாக அடையாளம் காணப்பட்டு சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றது.

மக்கள் தமது கருத்துக்களை ஜனநாயக ரீதியாக முன்வைப்பது அவர்களது உரிமையாகும். எனினும், ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளும் போது உயிர் மற்றும் உடைமைகளுக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலும், வன்முறையில் ஈடுபடாமலும், இது தொடர்பான நாட்டுச் சட்டங்களைப் பேணியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடந்து கொள்ள வேண்டுமென்று நாம் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் நேற்றைய ஆர்ப்பாட்டக் களத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், அதில் காயமடைந்தவர்களின் ஆரோக்கியத்திற்காக பிரார்த்திக்கின்றோம்.

அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையிலும் எரிபொருள், மின்சாரம், பால்மா, உணவு வகைகள், மருந்துகள் போன்றன இன்றியும் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருப்பதை இந்நேரத்தில் ஒவ்வொருவரும் எண்ணிப்பார்த்து, தேவையுடையவர்களுக்கு உதவுவதற்கு முன்வர வேண்டும்.

நம் தாய் நாட்டில் அமைதியைக் கட்டியெழுப்பி, அபிவிருத்தியின் பால் அதனை இட்டுச் செல்ல நாம் ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

அஷ் ஷைக் எம். அர்கம் நூறாமித் பொதுச்செயலாளர்                        அகில இலங்கை ஜம்மியதுல் உலமா 

 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.