பெண் எழுத்தாளர் 

தல்ஙஸ்பிடிய
சஹீரா சமீர்

வளர்ந்து வரும் இளம் எழுத்தாளரான சஹீரா சமீர்  கேகாலை மாவட்டத்தில் அரனாயக பிரதேச செயலகப்பிரிவிற்குற்பட்ட  தல்ஙஸ்பிடிய எனும்  கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் .

கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொடர்பாடலும் ஊடகக் கற்கை டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்துள்ள இவர் தற்போது இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழிப் பீடத்தில் முதலாம் ஆண்டு பயிலும் பட்டதாரியாக கல்வி நடவடிக்கையை தொடர்கிறார்.

இவரின் இலக்கியப்பயணம் பற்றி கேட்கப்பட்ட போது இவ்வாறு பதிலளித்தார். 10வது வயதிலேயே 
அம்மா என்ற தலைப்பில் எட்டு வரிகளில் எழுதப்பட்ட தனது முதலாவது கவிதையை தந்தையிடம் வாசித்துக் காட்டியபோது முகம் மலர்ந்த புன்னகையோடு தன் கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்தியது தனக்கு இன்னும் ஞாபகத்தில் பதிந்திருக்கிறது.
எழுத்து துறையில் தொடர்ந்து பயணிக்க வேண்டுமென்ற உறுதி அன்று தன் தந்தை தந்த அங்கீகாரத்தில் இருந்து தான் ஆர்ப்பரித்தது.
ஆரம்ப நாட்களில் தன் எழுத்துத்துறை ஆசான் தன் தந்தை தான்.
அவரிடம் இயல்பாகவே இருக்கும் எழுத்தாற்றல் என்னை நான்  வளப்படுத்திக்கொள்ள பெரிதும் துணை நின்றது எனக் கூறினார். 
 
பாடசாலை காலங்களில்  போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி சான்றிதழ்களை பெற்றுக் கொண்டதோடு கவிதை எழுதுதல், மேடைப் பேச்சு, மேடை அறிவிப்பு என  பங்குபற்றிய ஒவ்வொரு போட்டிகளுக்கு பின்னாலும் தன் ஆசிரியர்களின் முறையான பயிற்றுவிப்பு இருந்தமையை நன்றியோடு நியாயப்படுத்த வேண்டும்.
எனினும் பாடசாலை காலத்திற்கு பின்னர் போட்டிகளில் பங்கு பற்றுவதை இயன்றளவு தவிர்த்து கொண்டேன்.
குறிப்பாக சமூகவலைத்தளங்களை அடிப்படையாக வைத்து நடாத்தப்படும் போட்டிகளில் பங்குபற்றுவதை முழுமையாகவே தவிர்த்து விடுவேன்.
என் தேடலை அதிகப்படுத்தி புதிய பாடங்களை கற்றுத்தராத ஒன்றின் ஊடாக கிடைக்கும் சான்றிதழ்களும் , விருதுகளும் என்னை பொறுத்தவரையில் பெருமதிப்புக்குரியதல்ல என்றே கருதுகிறேன்.
"விருதுகளின் பின்னால் நடக்க ஆரம்பிக்கும் போது புகழ் மீதான மோகம் எம்மை ஆட்கொண்டு விடும். இறுதியில் அந்த மோகமே எம்மை சமூகத்திற்கு பிரயோஜனம் அற்றவராக மாற்றிவிடும்." என் ஆசிரியர் ஒருவர் கூறிய வார்த்தைகளை முன்னிருந்தியே தான் இன்னும் செயற்படுவதாக கூறுகிறார்.

2016 ஆம் ஆண்டில் தனது 15ஆவது வயதில் "ஒளிக்கீற்று" என்ற பெயரில் முதலாவது கவிதை நூலை வெளியிட்டுள்ளார். இரண்டாவது கவிதை நூலான "ஓயாத ஓலங்கள்" கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்தது.  கா.பொ.த உயர்தர கல்வியை பூர்த்தி செய்த மடுல்போவை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 75ஆம் ஆண்டு நிறைவு விழாவின் ஒரு அங்கமாகவே தனது புத்தகம் வெளியிடப்பட்டது. நான் எழுதினேன் எனது பாடசாலையும், மடுல்போவை கிராமத்தை சார்ந்த பலரும் தந்த ஆதரவால் அது புத்தகமாக உருப்பெற்றது என்று சொல்வதே சாலப்பொருந்தும் எனக் கூறுகிறார்

மேலும் ஒரு கவிதை என்பது குறுகிய சொற்களில் ஆழமான விடயங்களை வெளிப்படுத்தும் விதமாக  அமைய வேண்டும். 
வர்ணனைகளால் மட்டுமே நீண்டு செல்லும் கவிதைகள் வாசிப்பவருக்கு அலுப்பை ஏற்படுத்திவிடும்.
கவிதை எழுதுபவருக்கு சொற்களில் தட்டுப்பாடு இருக்கக் கூடாது.
பொருத்தமான சொற்களை பொருத்தமான முறையில் கோர்த்து விடயம் கெடாத வண்ணம் வெளிப்படுத்தும் போதே சிறந்த கவிதை உருவாகும்.
கற்பனையில் இயல்புக்கு பொருந்தாத பொய்யான விடயங்களை கவிதையாக வடிப்பதை எப்போதும் செய்துவிடக் கூடாது.
அல்குர்ஆன் அப்படியான கவிஞர்களை கடுமையாக கண்டிக்கிறது.

மேலும் எழுத்துத் துறையில் எதிர் நோக்கிய சவால்களாக எழுத்துத்துறை தன் மனதுக்கு மிகவும் நெருக்கமானதொன்று என்பதால் இதுவரைக்குமான சவால்களை தான் சந்தோஷமாகவே எதிர்கொண்டதாகவும் எமக்கு பிடித்த ஒன்றிற்காக போராடுவதென்பது எப்போதும் உற்சாகத்தையே தரும். 
அடிக்கடி ஆய்வுக் கட்டுரைகளை எழுவது தனக்கு பிடித்தமான செயல்.
அவ்வாறு எழுதும் போதெல்லாம் நான் புத்தங்களுக்குள் மூழ்கிக் கிடப்பேன். பொதுவாக என் வயதை ஒத்தவர்கள் ஆர்வம் செலுத்தும் விடயங்களை விட்டும் நான் ஒதுங்கியே நிற்பேன். அதன் காரணமாகவே பலரின் அசட்டுப் பேச்சுக்களை கேட்க வேண்டி ஏற்பட்டது. எனினும் ஆரம்பத்தில் இருந்தது போன்று இப்போதெல்லாம் புறக்கணிப்புகளை கண்டு நான் கவலை கொள்வதில்லை. ஏனெனில் புறக்கணிக்கப்பட்ட இடங்களில் இருந்து தான் நான் முன்னோக்கி பயணிக்கும் உந்து சக்தியை பெற்றுக்கொள்கிறேன். ஆதலால் தான் என்னை காயப்படுத்துபவர்களை நான் அதிகமதிகமாய் நேசிக்கிறேன்.
புத்தகம் ஒன்றை வெளியிட வேண்டுமென ஆசை கொண்டு அதற்கான முயற்சிகளில் இறங்கிய போது நான் எதிர்நோக்கிய சவால்கள் தான் என்னை அதிகம் செதுக்கியது.

உங்கள் வெறுப்புக்களின் வழியே நான் பெரும் தடைகளை தாண்டும் தைரியசாலியாக என்னை வடிவமைத்துக் கொண்டேன்.
அல்ஹம்துலில்லாஹ்.

மேலும் சவால்களை எதிர்கொள்ளாமல் சரித்திரம் படைக்க இயலாது.
 வயதில் இளையவள் என்பதால் உங்களில் பலர் எதிர்கொண்டு வென்ற சாவால்களில் பாதியைக் கூட நான் இன்னும் காணவில்லை என்பதே நிஜம்.
எனினும் சிலதை பதிவு செய்து கொள்கிறேன்.

"Book எழுதி என்னத்த செய்ய. O/l ஆச்சும் Pass ஆவுறான்டு பாக்கலாமே." என முதுகின் பின்னால் ஒளிந்து கொண்டு கதை கூறியவர்களுக்கு,
'15 வயசுல இதெல்லாம் தேவையா. மிச்சம் ஆடாத எழும்பேலாம போய்டும்' என அறிவுரை கூறிய தீர்க்கதரிசிகளுக்கு,
உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
அந்த வார்த்தைகளை நீங்கள் வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால் , அந்த தருணங்களை நான் எதிர்கொள்ளாமல் இருந்திருந்தால் நானும் தோல்விகளில் துவண்டு காணாமல் போயிருப்பேன்.
தடையாக நிற்பவர்களை கண்டு கொள்ளாமல் கடந்து செல்லுங்கள்.
அவர்கள் அங்கேயே நின்று கொண்டு இன்று உங்களையும் நாளை இன்னொருவரையும் குறை கண்டு கொண்டே இருப்பார்கள்.
நீங்கள் வெற்றியை எட்டிப் பிடித்த பின்பும் அவர்கள் அங்கேயே தான் நின்று கொண்டிருப்பார்கள்.
அவர்களுக்கெல்லாம் புரியவைக்க முயற்சி செய்து கொண்டிருந்தால் எமது பயணம் வீணே தாமதமாகிவிடும்.
"பிரச்சினை, கவலை என்ற சொற்களை எந்த சூழ்நிலையிலும் உபயோகப்படுத்தாதே. சாவால் என்றே கூறப் பழகிக்கொள். அனைத்து சூழ்நிலைகளையும் சவாலென ஏற்று எதிர்கொள்ள முற்படு. இலகுவாக தடைதாண்டும் வழியை கண்டறிந்து விடுவாய்." என்று நண்பர் ஒருவர் என்னிடத்தில் அடிக்கடி சொல்வதுண்டு. இந்த வார்த்தைகளை நான் ஆழமாக நம்புகிறேன் எனக் கூறுகிறார்.

மேலும்  கவிதை எழுதுவதால் என்ன பயன் கிடைக்கின்றது என பலராலும் இன்று கேட்கப்படும் கேள்வியாய் உள்ளது . இதுபற்றி பின்வருமாறு கூறுகிறார்
வாசிப்பு பழக்கம் நாளுக்கு நாள் குறைவடைந்து கொண்டே செல்லும் துரதிர்ஷ்டவசமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த தலைமுறையினரிடம் இருந்து இவ்வாறான கேள்விகள் முன்வைக்கப்படுகின்றமை ஆச்சரியமான விடயமல்ல. எனினும் எதிர்காலம் அர்த்தமற்றதாக மாறிவிடாது பாதுகாக்க வேண்டுமாயின் புத்தகங்களை எம் பிள்ளைகளின் நெருங்கிய வட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும். கவிதையை பொருத்தவரையில் குறுகிய சொற்களில் பாரிய விடயங்களை முன்வைக்கும் சக்தி அதற்கு இருக்கின்றது. 300 சொற்களை கொண்ட ஒரு கட்டுரையில் பதிவு செய்யும் கருத்தை நான்கு அடிகளை கொண்ட கவிதையில் சொல்லிவிடலாம். கவிதைக்கே உறிய நியதிகளை புரிந்து கொண்டு எழுத ஆரம்பிக்கும் போது மக்களை ஈர்த்தெடுக்கும் சக்தியை அது பெற்றுக்கொள்ளும் என மனம் திறந்து தனது இலக்கியப்பயணத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

மஜினா உமறு லெவ்வை
மாவடிப்பள்ளி

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.