கோத்தாபே ராஜபக்ஷவின் இராஜினாமாவோடு இந்த நாட்டில் சிறுபான்மை சமூகத்திற்கான விடிவு கிடைத்துவிடுமென்றும், இனவாதம் முற்றாக இல்லாமல் ஆகிவிடும் என்று நாம் அவசரப்பட்டு  சந்தோஷப்பட்டுவிட முடியாது காரணம் மழை மட்டுமே விட்டுள்ளது - தூவானம் இன்னும் மிச்சமிருக்கு.

தனது இரத்தம், நாடி,நரம்பு, நாளம் ஆகியவற்றில் முற்றாக இனவாதம் ஊறிப்போன பலர் இன்னும் பசுத்தோல் போர்த்திக்கொண்டு வலம்வருகின்றனர். ராஜபக்சக்களைவிடவும் மோசமான இந்த இனவாதிகளின் பிடியில் அதிகாரம் மாறுமேயானால் சிறுபான்மை சமூகமான தமிழ் முஸ்லிம் சமூகம் இன்னும் பல நெருக்குவாரங்களை அனுபவிக்க நேரிடலாம்.

டலஸ் அழகப்பெருமா, பாட்டாளி சம்பிக்கரணவக்க, சரத் பொன்சேகா இவர்கள் மூவரும் இனவாதத்தை வெளிப்படையாக காட்டாவிட்டாலும் இவர்களுக்குள் புரையோடிப்போயிருக்கும் இனவாத பேய்கள் பலதடவைகள் வெளியே வந்துள்ளன. அதிலும் பாட்டாளி சம்பிக்க நவீன இனவாதத்தின் தந்தை எனலாம்.  . 

விமல்வீரவன்ச, உதயகம்மன்பில, அதுரலிய ரத்னதேரர், சன்ன ஜயசுமன இவர்கள் நால்வரும் வடிகட்டிய இனவாதிகள் இவர்களிடம் ஆகக்குறைந்தது 1% வீதம்கூட மதநல்லிணக்கத்தையோ, சமூக ஒற்றுமையையோ ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. ஈஸ்டர் தாக்குதல் மற்றும் டொக்டர் ஷாபி விடயம், முஸ்லிம்களின் மையத்துக்களை எரித்தல் போன்ற விடயங்களில் இவர்கள் செயற்பட்ட விதம் கலப்படமில்லாத இனவாதமாகும். 

அவ்வாறே தயாசிரி, துமிந்த திசானாக்க, ஜோன்சன் பெனார்ன்டோ, மகிந்தானந்த அலுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, நிமல் லான்சா, சரத்வீரசேகர ஆகியோரின் இனவாத முகங்கள் அவ்வப்போது வெளிப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் இன்னும் பாராளுமன்ற உறுப்பினர்கள்தான்.

மேலேசொன்ன இனவாதிகளின் கைக்கூலிகள் ஞானசார, டான் பிரியசாத், சத்துர, விராஜ், நாமல்குமார மற்றும் இன்னும் சில பௌத்த பிக்குகள் இன்னும் இந்தநாட்டில் வாழ்கிறார்கள். இவர்களின் இனவாத செயற்பாடுகளை ஏந்திச்சென்று பிரச்சாரம் செய்ய தெரண மற்றும் ஹிரு ஆகியன இன்னும் இயங்குகின்றன. இவர்களின் தேர்தல் மூலதனம் பணமும், இனவாதமும் மட்டுமே!

நாட்டில் ஏற்பட்ட அசாதாரணமான பொருளாதார வீழ்ச்சி, தொழிலின்மை, வாழ்க்கைச்செலவின் அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் சடுதியான விலையேற்றம், வறுமானமிழப்பு, வறுமை, பொருளாதார சுமை என்பனதான் பெரும்பான்மை சமூகத்தை போராட்டத்தின் பக்கம் தள்ளின. பின்னரே இந்தப்போராட்டத்தில் சிறுபான்மை சமூகங்களும் இணைந்து கொண்டன.  போராட்டக்காரர்களின் அர்ப்பணம், விடா முயற்சி, தன்னம்பிக்கை இனமத பேதமற்ற திறந்த செயற்பாடு திறனற்ற ஐனாதிபதியை ஓடி ஒளியவைத்ததே தவிர இந்த இனவாதப்பேய்களுக்கு சரியான மருந்தினை இன்னும் கட்டவில்லை.

கோட்டாவின் ஆட்சியை கொண்டுவருவதில் பங்காளியாக செயற்பட்ட மைத்திரிபால இப்போது பத்தினி வேசம் போடுகிறார். இந்த எல்லா சீரழிவுகளுக்கும் மைத்திரியும் பிரதான காரணமே என்பதை அவர் வசதியாக மறந்துபோனார்.

நிலையான அரசொன்று அமைந்து மக்களின் அன்றாடப்பிரச்சினைகள் தீர்ந்தால் அத்தோடு போராட்டம் முடிந்து விடுமோ என்ற ஐயம் இருக்கிறது. முஸ்லிம் ,தமிழ் சமூகம் எத்துனை நெருக்குவாரங்களுக்கு அகப்பட்டாலும் மகிந்தவின்  விசுசிகளாக அதாவுல்லாஹ் ,முஷர்ரப், அலி சப்ரி, அலி சப்ரி ரஹீம், மர்ஜான் பளீல், காதர் மஸ்தான், ஹாபீஸ் நசீர் ஆகியோரும் தமிழர் வாக்கினால் பாராளுமன்றம் சென்ற டக்லஸ் தேவானந்தா, வியாழேந்திரன், அங்கஜன் இராமநாதன், பிள்ளையான், ஜீவன் தொண்டமான் ஆகியோர் ஒருபோதும் மனதளவில் மாறப்போவதில்லை. 

இதேவேளை முஸ்லிம் சமுகத்தின் மீதான வீண்பழிகளின் போது பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திசானாயக, ராஜித சேனாரத்ன, குமார் வெல்கம, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, ஹரீன் பெனார்ன்டோ போன்றோர் குரல் கொடுத்துள்ளனர். ஏன் மகிந்தகூட ஈஸ்டர் தாக்குதலின் பின்னரும் ஜனாசா எரிப்பின் போதும் முஸ்லிம் சமூகத்திற்க்கு ஆறுதலான கருத்தை வெளியிட்டார் ஆனால் அவரின் குரல் எடுபடவில்லை அல்லது ஓங்கி ஒலிக்கவில்லை. 

எனவே சிறுபான்மை சமூகமான தமிழ் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதிப்படுத்தும் போராட்ட களத்திலிருந்த தோழர்கள் அவ்வாறே போராட்டக்காரர்களோடு சாமாந்திரமான போக்கினை கையாளும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், முஜிபர் ரஹ்மான், மனோ கணேஷன், மரைக்கார், பழனி திகாம்பரம் போன்றோர் இனவாதம் பேசி சமூகங்களை துருவப்படுத்திய இன்னும் துருவப்படுத்த சந்தர்பம் பார்த்து காத்திருக்கும் பேய்கள் தொடர்பில் தெளிவு படுத்த வேண்டும்.

யார் ஜனாதிபதி ஆனாலும், யார் பிரதமரானாலும் எமக்கு பிரச்சினையில்லை வருகிறவர்கள் சிறுபான்மை சமூகங்களான தமிழ், முஸ்லீம்களை சீண்டாமல் நிம்மதியாக வாழவிட்டாலே கோடி புண்ணியம்.

மழைவிட்டது போலவே இனவாத தூவானமும் விரைவில் விடுபட்டு சகல இனமும் ஒற்றுமையான நிம்மதியான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்வோம். எல்லோருக்கும் பொதுவான இறைவன் நமது நாட்டுக்கு நல்லருள் புரிவானாக.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.