ஜனாதிபதி செயலகத்திற்கு கடந்த 09ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை வருகை தந்தவர்கள் குறித்து அத்துமீறிய பிரவேசம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதற்கமைய, ஜனாதிபதி மாளிகையிலுள்ள யன்னல் திரைச் சீலைகளை தொங்க வைப்பதற்காக சுவரில் அமைக்கப்பட்டிருந்த தங்க நிறத்திலான 40 பித்தளை பந்துகளை திருடி, அதனை பழைய பொருட்களை விற்பது போன்று விற்க முயன்ற மூவரை பொலிஸார் நேற்று (24) கைது செய்துள்ளனர்.

வெலிக்கடை பொலிஸாரினால் கைதான இவர்கள் இராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியைச் சேர்ந்த, 28,34, 37 வயதுடைய, போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்திற்குள் போராட்டக்காரர்களுடன் நுழைந்த சிலரால் அங்கிருந்த பல பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஜூலை மாதம் 09 ஆம் திகதி கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தி அங்கிருந்த சில பொருட்களை திருடிச் சென்றவர்களை அப்பகுதியில் உள்ள சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் அடையாளம் கண்டுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்புகளை உறுதிப்படுத்தும் வகையில், வெடிபொருட்கள் உள்ளதா என்பதை கண்டறிய வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கொழும்பு மத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸின் மேற்பார்வையில் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.