ஜனாதிபதி பதவி தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக வெளியிடபப்பட்டிருந்த ஊடக அறிக்கை தொடர்பில் விளக்கம் கோரி அக்கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இது குறித்து தாம் அதிருப்தியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பீரிஸ், சாகர காரியவசமிடம் 6 விடயங்கள் தொடர்பில் விளக்கம் கோரியுள்ளார்.

1. யாருடைய அதிகாரத்தின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது?
2. இந்த முடிவை எடுப்பதில் பங்குபற்றியதாகக் கூறப்படும் நபர்களின் பெயர்கள் எவை?
3. அந்த நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அடிப்படை என்ன?
4. குறித்த கூட்டம் இடம்பெற்ற இடம், திகதி, நேரம் என்ன?
5. குறித்த கூட்டத்தை கூட்டுவதற்காக அறிவிக்கப்பட்ட திகதி, நேரம் உள்ளிட்ட தொடர்பான தகவல்கள்?
6. ஶ்ரீ.ல.பொ.பெ. கட்சியின் அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ள எதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது?

இந்த விடயங்கள் தொடர்பில் மிக விரைவில் பதிலை பெற்றுக்கொள்ளும் உரிமை தனக்கு இருப்பதாகவும் ஜீ.எல். பீரிஸ் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தங்களால் குறித்த அறிவிப்புக்கு வழங்கப்பட்ட விளம்பரப்படுத்தலின் அடிப்படையில் இக்கடிதத்தையும் நான் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு வெளியிடுகின்றேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.