போராட்டம் எனும் பெயரில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் வெளிநாடு செல்ல முடியாது எனவும் அவர்களுக்கு அரச வேலையும் கிடையாது என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வன்முறைகளில் ஈடுபட்ட பலரது கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்டு அவை விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன, அவர்கள் வெளிநாட்டுக்குசெல்ல முடியாது, அதுமட்டுமல்லது அரச தொழில் உட்பட தொழில் வாய்ப்புகளைபெற்றுக் கொள்ளவும் முடியாதென தெரிவித்துள்ளார்.

மேலும், வன்முறைகளில் ஈடுபடுபவர்களே அவசரகாலநிலை தொடர்பில் பயப்பட வேண்டும், சாதாரண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அது தொடர்பில் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாதென்றும் சரத் வீரசேக்கர தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகிச்செல்லுமாறு கோரியே காலி முகத்திடலில் ஆரம்பத்தில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்புவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அவர் பதவி விலகி அரசியலமைப்பின்படி புதிய அதிபரும் தெரிவுசெய்யப்பட்டார்.

எனினும், தமது நோக்கம் நிறைவேறிய பின்னரும் போராட்டம் தொடர்கிறது இது நியாயமற்றது எனவும் தெரிவித்தார்.

நாட்டை சீர்குலைத்து, ஆட்சி கவிழ்ப்புக்கு வழிவகுக்கும் இடமாக அது இருக்கக்கூடாது. அமைதி போராட்டக்காரர்களுக்கு பின்னால் ஒழிந்துகொண்டு இந்த போராட்டத்தை பாதாள உலக குழுவினரும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுமே முன்னெடுக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய போராட்டங்களை பார்க்கும் வெளிநாட்டினர் முதலீட்டுக்கு தகுதியற்ற நாடாக எம்மை கணிக்கக்கூடும்.

தற்போது, உண்மையான பேராட்டக்காரர்கள் விலகியுள்ளனர் என்றும் போதைப்பொருள் வர்த்தகர்களும், பாதாள உலகக்குழுவினருமே தற்போது போராட்டத்தை வழிநடத்துகின்றனர் எனவும் தெரிவித்தார்.

கடந்த வார சம்பவத்தின் பின்னர் சிலர் இராணுவத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கின்றனர் எனினும் அவர்கள் மக்களையும் எம்மையும் பாதுகாப்பதற்காகவே போராடுகின்றனர், விடுதலைப் புலிகளுடன் போராடி இராணுவத்தினர் தோற்கடித்தனர், அமைதிப் போராட்டங்களுக்கு அவர்கள் மதிப்பளித்தனர் இருந்த போதும் இறுதியில் மிகவும் கேவலமாக அவர்களை போராட்டக்காரர்கள் நடத்தினர்.

அவசரகால நிலையை நீடிக்க அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் அவ்வாறு செய்யாதவர் பயங்கரவாதத்துக்கு ஆதரவு வழங்குவோராக கருதப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.