ஜூலை 9 ஆம் திகதி  ஜனாதிபதி மாளிகையில் இருந்து  மீட்கப்பட்டு பின்னர் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட 1,78,50,000 ரூபா பணம் நேற்று நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட உத்தரவிற்கு ஏற்ப இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டது.

கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் உள்ள கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரால் இந்த பணம் நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டது.

கடந்த 9 ஆம் திகதி கோட்டை பொலிஸ் நிலையத்தில் குறித்த பணம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், மூன்று வாரங்களாக அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக நீதவான் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பணம் கொம்பனித்தெரு பொலிஸ் நிலைய விசேட பிரிவு ஊடாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றமைக்கு நியாயமான காரணம் இருக்கிறதா என்பது நீதிமன்றத்திற்கு தெரியாது எனவும் கூறியுள்ளார்.

பணத்தை கையளிப்பதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு  நீதவான் திலின கமகே பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.