இலங்கை அரசாங்கம் எதிர்வரும் 12 மாதங்களுக்கு எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்துவதால், அன்றாட தேவைகளுக்கு போதுமான பெற்றோலை பெற்றுக்கொள்ள முடியாமல் போகலாம் என உலக உணவு திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக இலங்கையர்களுக்கு வேலை தேடும் அல்லது வேலைக்குச் செல்லும் திறன் குறையும் என்றும் பாடசாலைகள் மற்றும் பொதுச் சேவைகளின் இயல்பான செயல்பாடுகள் தடைபடும் என்றும் உலக உணவுத் திட்டம் எதிர்வுகூறியுள்ளது.
 
உலக உணவுத்திட்டம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

6.3 மில்லியன் இலங்கையர்களுக்கு உணவுப் பாதுகாப்பு இல்லை என்றும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ள உலக உணவுத் திட்டம், 6.7 மில்லியன் இலங்கையர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய உணவை உண்பதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

உணவு மற்றும் நுகர்வுப் பொருட்களின் அதிக விலை காரணமாக உணவு மற்றும் நுகர்வுப் பொருட்களை மிகக் குறைந்த அளவிலேயே கொள்வனவு செய்வதற்கு இலங்கையர்கள் பழகியுள்ளதாகவும் இதனால் இலங்கையர்கள் கடைகளுக்குச் செல்வது அதிகரித்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

சத்தான உணவுகள் மற்றும் காய்கறிகளின் விலைகள் பொருளாதார நெருக்கடிக்கு முன்னர் இருந்ததை விட இரண்டு முதல் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் உணவு இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகை மாதாந்தம் 130 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 50 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்காக, 20.74 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உலக உணவுத் திட்டத்திடம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஜூலை முதல் டிசெம்பர் வரை 3.4 மில்லியன் இலங்கையர்களுக்கு உதவுவதற்கு, உலக உணவுத் திட்டத்துக்கு 63 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் 42.3 மில்லியன் டொலர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Tamil Mirror 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.