ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்தவுடன் அச்சந்தர்ப்பத்தில் பிரதமர் பதவியை வகிப்பவர் உத்தியோகபூர்வமாக பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவாரென நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

அச்சந்தர்ப்பத்தில் பிரதமர் பதவி வெற்றிடமாகவிருக்குமானால் பாராளுமன்ற சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவாரென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ஜனாதிபதி இன்றைய தினம் தமது பதவியை இராஜினாமா செய்த பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதம நீதியரசர் அல்லது உச்ச நீதிமன்றத்தின் எந்தவொரு நீதிபதியின் முன்னிலையிலும் அவர் பதில் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள முடியும். அதற்கு பிரதம நீதியரசர் அழைப்பு அவசியமில்லையென்றும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

பதில் ஜனாதிபதி ஒரு மாத காலத்துக்குள் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மூலம் ஜனாதிபதி பதவிக்காக தெரிவுசெய்ய முடியும் என்பதுடன் அதற்காக அவர் வழங்கப்பட்டுள்ள செல்லுபடியான வாக்குகளில் 50% பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

ஜனாதிபதி பதவிக்காக இன்னுமொருவரது பெயர் முன்வைக்கப்படுமானால் அந்த வாக்கெடுப்பு முறையாக அமையுமென்றும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்போது குறைந்தளவு வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் வேட்பாளர் போட்டியிலிருந்து விலக்கப்பட்டு 1, 2, 3, 4 ரீதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட விருப்பு வாக்குகள் ஏனைய வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டு நூற்றுக்கு ஐம்பது கணக்கிடப்பட வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். எவரும் 50% பெற்றுக்கொள்ளாவிட்டால் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்படுவாரென்றும் வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்படும்போது அரசியல் கட்சி ரீதியில் அன்றி தனிநபர் என்ற ரீதியில் தெரிவுசெய்ய முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அவ்வாறு தெரிவுசெய்யப்படும் வேட்பாளர்களின் பெயர் பாராளுமன்ற உறுப்பினரொருவரால் முன்வைக்க முடியும். ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களில் வாக்கெடுப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதுதொடர்பில் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க முன்வைத்த கேள்வியொன்றுக்கு சட்ட மாஅதிபர் சஞ்சய் இராஜரத்னம் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுறுவதற்கு முன்பதாக அந்த பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டால் அந்தத் தினத்திலிருந்து புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும் வரை அரசியலமைப்பின் 38 (1) இற்கிணங்க பிரதமர் பதில் ஜனாதிபதியாக செயற்படுவார். அதன்பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஜனாதிபதி பதவிக்காக ஒருவரை தெரிவுசெய்யும் வகையில் பாராளுமன்ற உறுப்பினரொருவர் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதிக வாக்குகளால் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார். அவ்வாறு நியமிக்கப்படுபவர் ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் மீதமான காலத்திற்கு மட்டும் அந்தப் பதவியை வகிப்பார். அந்தத் தெரிவு பதவி வெற்றிடமாகி ஒரு மாதத்துக்குள் இடம்பெறவேண்டுமென்றும் சட்ட மாஅதிபர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெறும் வாக்கெடுப்பில் பெற்றுக்கொள்ளப்படும் பெரும்பான்மையை ரணில் விக்கிரமசிங்க தற்போது ஏற்படுத்திக்கொண்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லோரன்ஸ் செல்வநாயகம் - தினகரன் 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.