றிப்தி அலி

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பாராளுமன்றத்தின் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் முதலாவது அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை (22) நியமிக்கப்பட்டது.

இதன்போது 28 அமைச்சுக்களுக்காக 18 பேர் நியமிக்கப்பட்டனர். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக செயற்பட்ட போது நியமிக்கப்பட்ட அதே அமைச்சர்களே இந்த புதிய அமைச்சரவையிலும் அதே பதவிகளுடனேயே நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் நியமிக்கப்படுகின்ற புதிய அமைச்சரவை, பல்வேறு மாற்றங்களுடன் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என நாட்டு மக்கள் எதிர்பார்த்திருந்தனர். எனினும், குறித்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை.

எனினும், இதுவொரு இடைக்கால அமைச்சரவை எனவும், அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வ கட்சி அமைச்சரவையொன்று விரைவில் நியமிக்கப்படும் என அரசாங்க தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். எவ்வாறாயினும், சர்வ கட்சி அமைச்சரவை எப்போது நியமிக்கப்படும் என்ற விடயம் இன்று வரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவின் இந்த அமைச்சரவையில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மாத்திரம் புதுமுகமாகக் காணப்படுகின்றார். அமைச்சரவைக்கு இவர் பழையவர் என்றாலும், ரணில் தலைமையிலான அமைச்சரவைக்கு இவர் புதுமுகமாகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளரும், மூத்த அரசியல்வாதியான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவினை எதிர்த்து போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமவினை ஆதரித்திருந்தார். இதனால், மிக நீண்ட காலமாக வெளிவிவகார அமைச்சராக செயற்பட்டு வந்த ஜீ.எல். பீரிஸ், குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இப்பதவிக்கு பொருத்தமான கல்வித் தகைமையுடைய ஒருவரை நியமிக்க வேண்டியிருந்ததது. அந்த இடத்தினை நிரப்புவதற்காகவே அலி சப்ரி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தின் மூலம், 28 வருடங்களுக்கு பின்னர் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரொருவர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மாமாவான ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் கண்டி மாவட்டத்தின் ஹாரிஸ்பத்துவ (அக்குறணை) தேர்தல் தொகுதியின் பாராளுமுன்ற உறுப்பினரான ஏ.சி.எஸ். ஹமீட் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இலங்கை முதலாவது முஸ்லிம் வெளிவிவகார அமைச்சரான அவர், 1977 முதல் 1989ஆம் ஆண்டு வரையும், 1993 முதல் 1994 வரையும் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றியிருந்தார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிகவும் நம்பிக்கையானவராக செயற்பட்ட அலி சப்ரி, அவரின் விசேட சிபாரிசின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

அது மாத்திரமல்லாமல், பாராளுமன்ற அரசியலில் எந்தவித முன் அனுபவமுமற்ற அவர், முதற் தடவையிலேயே நீதி மற்றும் நிதி ஆகிய விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சராக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.
எனினும், கடந்த மே 9ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தமையினால், அலி சப்ரியும் தனது அமைச்சர் பதவியினை இழக்கஅவேண்டியேற்பட்டது.

இதன் பின்னர், பாராளுமன்றத்தில் அவர் விசேட உரையாயொன்றினை நிகழ்த்திய போது, "மீண்டும் இந்தப் பாராளுமன்றத்திற்கு வரவுமாட்டேன், எந்தவித பதவிகளையும் எடுக்கமாட்டேன்" என அறிவித்திருந்தார்.

இவ்வாறன நிலையில், வெளிவிவகார அமைச்சர் பதவியினை  தற்போது இவர் பொறுப்பேற்றுள்ளமை மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த 2005ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து நாட்டுக்கு வந்து பாதுகாப்பு செயலாளர் பதவியினை பொறுப்பேற்றது முதல் அவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படும் வரை அவரது சட்ட ஆலோசகராக அலி சப்ரியே செயற்பட்டார்.

இந்த நிலையில் தற்போது சிங்கப்பூருக்கு தப்பியோடியுள்ள தனது சேவை நாடியான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை பாதுகாத்து அவரை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவருவதற்காகவே இந்த பதவியினை இவர் பொறுப்பேற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.  

இது தொடர்பில் அலி சப்ரிக்கு எதிராக பல விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த விமர்சனங்களை மறுக்கும் வகையில் எந்தவொரு அறிக்கைகளையும் அவர் இதுவரை வெளியிடவில்லை.  

இதேவேளை, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினால் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முக்கிய தகவல்களை அப்போதைய சட்டம் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் சாலக ரத்னாநயக்க, அலி சப்ரியுடன் பகிர்ந்தாக சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதனால், கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்படுவதை பல தடவைகள் அலி சப்ரியின் சட்ட நுணுக்களின் ஊடாக தடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அது போன்று, சிங்கப்பூரிலோ அல்லது வேறு நாடுகளிலோ முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்படுவதனை இராஜதந்திர ரீதியாக தடுக்கும் நோக்கிலேயே இவர் இந்த அமைச்சர் பதவியினை பொறுப்பேற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு, அமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அவர் நிச்சயமாக பதில் வழங்க வேண்டும். அவ்வாறில்லாத பட்சத்தில் குறித்த விமர்சனங்கள் அனைத்தும் உண்மையாகி விடும்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை, தனது வெளிவிவகார அமைச்சர் பதவியின் ஊடாக அலி சப்ரி பாதுகாப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கருத்துரையிடுக

Blogger இயக்குவது.