சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் செம்பியன்ஷிப் தரவரிசைப்பட்டியலில் இலங்கை அணி மீண்டும் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்றைய தினம் வெற்றி பெற்றதன் மூலம் இவ்வாறு டெஸ்ட் செம்பியன்ஷிப் தரவரிசைப்பட்டியலில் இலங்கை அணி மீண்டும் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த தர வரிசைப் பட்டியலில் தென் ஆபிரிக்க அணி தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.

இதுவரை உலக டெஸ்ட் செம்பியன்ஷிப்பில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள தென் ஆபிரிக்க அணி, அதில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று 60 புள்ளிகளை பெற்றுள்ளது.

இதன்படி, தென் ஆபிரிக்க அணியின் வெற்றி சதவீதம் 71.43% ஆகும்.

இந்த தரவரிசையில் அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதுவரை 10 டெஸ்ட் செம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடியுள்ள அவுஸ்திரேலிய அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

அத்துடன், ஒரு போட்டியில் தோல்வியை தழுவியதுடன், மூன்று போட்டிகள் சமநிலையில் முடிவடைந்து அவுஸ்திரேலிய அணி 84 புள்ளிகளை பெற்றுள்ளது.

இதற்கமைய, அவுஸ்திரேலிய அணியின் வெற்றி சதவீதம் 70% ஆக காணப்படுகின்றது.

இதற்கிடையில், டெஸ்ட் செம்பியன்ஷிப்பின் தரவரிசைப்பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்தை பிடித்திருக்கும் இலங்கை அணி இதுவரை டெஸ்ட் செம்பியன்ஷிப்பில் 10 போட்டிகளில் விளையாடியுள்ளது.

இதில், ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன், நான்கு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

அத்துடன், ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இலங்கை அணி 64 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், அவர்களின் வெற்றி சதவீதம் 53.33% ஆகும்.

இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் பாகிஸ்தான் அணி தரவரிசைப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதுடன், இதுவரை அவ்வணி விளையாடிய 9 போட்டிகளில் 4 வெற்றி, 3 போட்டிகளில் தோல்வி, 2 போட்டிகளில் சமநிலை கண்டுள்ளது.

பாகிஸ்தான் அணியின் வெற்றி சதவீதம் 51.85%.

இந்த தரவரிசை பட்டியலில் இந்திய அணி நான்காவது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணி 6 ஆவது இடத்திலும், இங்கிலாந்து அணி ஏழாவது இடத்திலும் உள்ளன.

இந்த பட்டியலில் நியூசிலாந்து அணி 8 ஆவது இடத்திலும், பங்களாதேஷ் அணி 9 ஆவது இடத்திலும் உள்ளன.

தமிழன் ரேடியோ 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.