காலி சர்வதேச விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுபெற்ற அவுஸ்திரெலியாவுடனான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வரலாற்றுச் சாதனைகளுடன் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 39 ஓட்டங்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட வோர்ன் – முரளிதரன் டெஸ்ட் தொடர் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் 1 – 1 என சமநிலையில் முடிவடைந்தது.

அறிமுக சுழல்பந்துவீச்சாளர் ப்ரபாத் ஜயசூரய பந்துவீச்சிலும் மூத்த வீரர் தினேஷ் சந்திமால் துடுப்பாட்டத்திலும் வரலாற்றுச் சாதனைகளை நிலைநாட்டி இலங்கையின் வெற்றியில் பிரதான பங்காற்றினர்.

ப்ரபாத் ஜயசூரிய தனது அறிமுகப் போட்டியில் 10 விக்கெட் குவியலைப் பதிவு செய்ததுடன் தினேஷ் சந்திமால் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் இரட்டைச் சதம் குவித்தார்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 190 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த அவுஸ்திரேலியா, 2ஆவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 151 மாத்திரம் பெற்று தொல்வி அடைந்தது.

இலங்கையின் சுழல் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அவுஸ்திரெலியா திணறியதுடன் அவ்வணியில் 2 வீரர்கள் மாத்திரமே 25 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

டேவிட் வோர்னரும் உஸ்மான் கவாஜாவும் 49 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 10 விக்கெட்களை இழந்த அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது.

அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்தில் மார்னுஸ் லபுஸ்சான் 32 ஓட்டங்களையும் உஸ்மான் கவாஜா 29 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

அறிமுக வீரர் ப்ரபாத் ஜயசூரிய 59 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றி, இலங்கையின் அறிமுக வீரராக இன்னிங்ஸ் ஒன்றில் அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியை பதிவு செய்து வரலாற்று சாதனையை நிலைநாட்டினார்.

முதல் இன்னிங்ஸிலும் 6 விக்கெட்களைக் கைப்பற்றிய ப்ரபாத் ஜயசூரிய முழுப் போட்டியிலும் 177 ஓட்டங்களுக்கு 12 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றினார். இலங்கை சார்பாக அறிமுக வீரர் ஒருவர் டெஸ்ட் போட்டி ஒன்றில் பதிவு செய்த அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதி இதுவாகும்.

போட்டியின் நான்காம் நாளான இன்று திங்கட்கிழமை (11) காலை தனது முதல் இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 431 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தொடர்ந்த இலங்கை, பகல்போசன இடைவேளையின் பின்னர் சகல விக்கெட்ளையும் இழந்து 554 ஓட்டங்களைப் பெற்றது.

இதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 30 வருடங்களின் பின்னர் இலங்கை 500 ஓட்டங்களுக்கு மேல் குவித்தது இதுவே முதல் தடவையாகும்.

எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் 1992இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்களுக்கு 547 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டிருந்தது.

இந்த எண்ணிக்கையே இதற்கு முன்னர் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரெலியாவுக்கு எதிராக இலங்கையினால் பெறப்பட்ட 500க்கும் மேற்பட்ட மொத்த எண்ணிக்கையாகும்.

காலியில் இன்று நிறைவுபெற்ற டெஸ்ட் போட்டியில் தினேஷ் சந்திமால் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 208 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

326 பந்துகளை எதிர்கொண்ட தினேஷ் சந்திமால் 16 பவுண்டறிகளையும் 5 சிக்ஸ்களையும் அடித்திருந்தார்.

இலங்கையின் முதல் இன்னிங்ஸில் 9ஆவது விக்கெட் வீழ்ந்தபோது மொத்த எண்ணிக்கை 505 ஓட்டங்களாக இருந்ததுடன் தினேஷ் சந்திமால் 159 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

அதன் பின்னர் இரட்டைச் சதத்துக்கு குறிவைத்து அதிரடி ஆட்டத்தில் சந்திமால் இறங்கி இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

கடைசி விக்கெட்டில் 49 ஓட்டங்கள் பகிரப்பட்டபோதிலும் அந்த 49 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் அதிரடியாக பெற்றமை விசேட அம்சமாகும். கடைசி ஆட்டக்காரர் கசுன் ராஜித்த ஓட்டம் பெறாமல் ஆட்டமிழந்தார்.

தினேஷ் சந்திமாலின் ஆக்ரோஷமான துடுப்பாட்டம் மூலம் 37 பந்துகளில் பெறப்பட்ட கடைசி 49 ஓட்டங்களில் 4 சிக்ஸ்கள், 3 பவுண்ட்றிகள் அடங்கியிருந்தன.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க் 89 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மிச்செல் ஸ்வெப்சன் 103 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் 364 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.