(லத்தீப் பாரூக்)

1995 ஜுலை 11ல் தொடங்கி மூன்று தினங்களாக இடம்பெற்ற சேர்பிய படைவீரர்களினால் மேற்கொள்ளப்பட்ட பொஸ்னிய முஸ்லிம்களின் செரப்ரனிகா கொலைப் படலத்தின் 27வது வருட நினைவு தினம் கடந்த 11ம் திகதி பொஸ்னிய முஸ்லிம்களால் உணர்வுபூர்வமாக நினைவு கூறப்பட்டது.

செரப்ரனிகா நகரையும் அனைச் சூழவுள்ள பகுதிகளையும் சேர்ந்த முஸ்லிம்கள் ஈவு இரக்கமின்றி சேர்பிய படைகளால் வேட்டையாடப்பட்ட சம்பவமே முஸ்லிம்கள் மீதான செரப்ரனிகா இன ஒழிப்பு சம்பவம் என வரலாற்றில் பதிவாகி உள்ளது.

அன்றைய பொஸ்னியாவின் தலைநகரான சரயேவோவில் அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்ட ஐந்து முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை அடுத்தே இந்த இனவெறி கொண்ட இனஒழிப்பு வேட்டை தொடங்கியது.

ஐரோப்பா கண்டத்தில் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற முதலாவது இன ஒழிப்பு நடவடிக்கை இதுவாகும்.

இந்த வெறி ஆட்டத்தில் மூன்று இலட்சம் முஸ்லிம்கள் வேட்டையாடப்பட்டதாக சில மதிப்பீடுகள் தரிவிக்கின்றன. ஆனால் அவை இன்று வரை மதிப்பீடுகளே தவிர உண்மையான எண்ணிக்கை இதுவரையில் யாருக்கும் தெரியாது.

இதில் மிகவும் கவலைக்குரிய விடயம் எதுவென்றால் உலகின் மனித உரிமை காவலர்கள் என தங்களைத் தாங்களே போற்றிக் கொள்ளும் அமெரிக்கா, பாரிஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் எதுவுமே இந்தப் படுகொலைகளை கண்டு கொள்ளாமல் விட்டதுதான்.

முஸ்லிம் அகதிகளின் பாதுகாப்பு யாருடைய கரங்களில் ஒப்படைக்கப்பட்டதோ, அதே ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானப் படையினராக அங்கு சென்ற டச்சுப் படை வீரர்கள் தான் இந்தப் படுகொலைகளுக்கு பக்கபலமாக இருந்தனர்.

அவர்கள் முஸ்லிம்களைக் கொன்று குவிக்க உதவுவார்கள் என்று நன்கு தெரிந்திருந்தும் கூட அவர்களிடம் முஸ்லிம்களின் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டது மிகவும் கவலைக்குரியதாகும்.

1995 ஜுலை 11ல் தொடங்கிய இந்தப் படுகொலை படலம் சில தினங்கள் நீடித்தன. சேர்பிய இனப் படைகள் செரப்ரனிகா நகர் முழுவதும் கண்ட கண்ட இடத்தில் எல்லாம் முஸ்லிம் ஆண்களையும் சிறுவர்களையும் சுட்டுக் கொன்று தமது இனவெறியை தீர்த்துக் கொண்டனர்.

துப்பாக்கி ரவைகளால் சிதறுண்ட உடல்கள் பல வீதி ஓரங்களிலும் வெட்ட வெளிகளிலும் வீசப்பட்டுக் கிடந்தன. இன்னும் பல உடல்கள் பாரிய புதை குழிகளுக்குள் ஒன்றாகப் புதைக்கப்பட்டன.

இந்தப் பாரிய இனச் சுத்திகரிப்பு செயற்பாடுகள் இடம்பெற்ற பின்னர்தான் உலகின் கண்கள் அந்தப் பக்கம் நோக்கி பலவந்தமாகத் திருப்பப்பட்டது.

இந்த திட்டமிடப்பட்ட படுகொலைகள் பற்றி ஐக்கிய நாடுகள் சபை ஏற்கனவே அறிந்து வைத்திருந்தது. பொஸ்னிய சேர்பியர்களின் முன்னேற்றம் அதனால் சிவிலியன்கள் எதிர்நோக்கும் ஆபத்து என்பன பற்றி ஐ.நா எச்சரிக்கைகளையும் விடுத்திருந்தது.

ஆனால் முஸ்லிம்களைப் பாதுகாக்க எந்த விதமான உருப்படியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

மாறாக ஐ.நா. படைப்பிரிவில் நிலைகொண்டிருந்த டச்சு படை வீரர்கள் ஐ.நா அகதி முகாம்களில் தங்கியிருந்த பொஸ்னிய முஸ்லிம்களை அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று நன்கு தெரிந்திருந்தும் கொலைகாரர்களிடம் பலிக்கடாக்களைப் போல் ஒப்படைத்தனர்.

1945ல் பொஸ்னியா ஹெர்ஸகோவினா யூகோஸ்லாவிய சோஷலிய கூட்டாட்சியின் கீழ் ஒரு குடியரசானது.

அன்றைய யூகோஸ்லாவிய ஜனாதிபதி மார்ஷல் டிட்டோவின் கீழ் முஸ்லிம்கள் ஒரு தனி தேசியமாக வகைப்படுத்தப்பட்டனர்.

அந்த நாட்டில் ஏனைய பிரஜைகளுக்கு இருந்த எல்லா உரிமைகளும் அவர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தன. 1991ல் யூகோஸ்லாவிய கட்டமைப்பு வீழ்ச்சி அடையும் வரை இந்த நிலை காணப்பட்டது.

ஐரோப்பாவின் இருதய பகுதியில் அமைந்திருந்த பொஸ்னியா ஹெர்ஸகோவினாவின் பல் இன சனத்தொகையில் முஸ்லிம்கள் தான் ஆகக் கூடிய தொகையினராக இருந்தனர்.

அவர்களின் எண்ணிக்கை 44வீத, பழமை வாத சேர்பியர்கள் 31வீத, கத்தோலிக்க குரோஷியர்கள் 17வீத ஆகவும் காணப்பட்டனர்.

பல நூற்றாண்டுகளாக மேலை நாட்டு நாகரிக செல்வாக்கிற்கு கட்டுப்பட்டவர்களாகத் தான் பொஸ்னிய முஸ்லிம்கள் காணப்பட்டனர். அவர்கள் நீலக்கண்கள் கொண்ட ஐரோப்பியர்களாக இருந்தனர்.

அவர்களின் மிக முக்கிய தனித்துவ அடையாளங்களாக சமயமும் சமய பாரம்பரியங்களும் காணப்பட்டன.

இது தவிர அவர்களை கத்தோலிக்க குரோஷியர்களிடமிருந்தும் பழமைவாத சேர்பியர்களிடம் இருந்தும் பிரித்துப் பார்த்து அடையாளப்படுத்துவது கஷ்டமாகும்.

கம்யூனிஸத்தின் வீழ்ச்சியோடு தான் பிரச்சினைகளும் தலைதூக்கின. 1992 ஏப்பிரலில் இடம்பெற்ற சர்வஜன வாக்கொடுப்பை தொடர்ந்து பொஸ்னியா ஹெர்ஸகோவினா சுதந்திரப் பிரகடனம் செய்தது.

அத்தோடு அது ஒரு தனிநாடாக மாறியது. இங்கு வாழ்ந்த மூன்று சமூகங்களும் முரண்பாடான இலக்கினை கொண்டிருந்தன. உதாரணத்துக்கு மத்திய மயப்படுத்தப்பட்ட சுதந்திர பொஸ்னியா தேவை என்று முஸ்லிம்கள் விரும்பினர்.

சேர்பியர்கள் யூகோஸ்லாவியாவுடன் இணைந்திருக்க விரும்பினர். குரோஷியர்கள் சுதந்திர நாடாக உருவான குரோஷியாவுடன் இணைய விரும்பினர்.

இதில் முஸ்லிம்களுக்கும் குரோஷியர்களுக்கும் இடையில் ஒரு தந்திரோபாய உடன்பாடு எட்டப்பட்டது. இதில் இருந்து சேர்பியர்கள் விலக்கி வைக்கப்பட்டனர். இதனால் சேர்பியர்கள் ஆத்திரமடைந்தனர்.

இதில் பொஸ்னிய சேர்பியர்களை பாதுகாக்க முன்வந்த அன்றைய யூகோஸ்லாவியாவின் ஜனாதிபதி சுலோபடன் மிலோசவிக் பாரிய அளவில் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டார்.

ரடோவன் கராட்ஸிக் தலைமையிலான பொஸ்னிய சேர்பிய படைகள் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருந்த பொஸ்னிய தலைநகரைக் கைப்பற்றினர்.

இந்தப் படை முற்றுகையால் பொஸ்னியர்களால் சுற்றியிருந்த கிராமங்கள் எதையும் காப்பாற்ற முடியாத, யாருக்கும் உதவ முடியாத நிலை ஏற்பட்டது.

ஒரு காலத்தில் அமைதிப் பூங்காவாக இருந்த இடங்களில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

மூன்று சமூகங்களுக்கு இடையிலும் கடுமையான சண்டைகள் மூண்டு ஒருவருக்கொருவர் கழுத்தை நெறித்துக் கொள்ளும் நிலை தோன்றியது.

1992க்கும் 95க்கும் இடைப்பட்ட காலத்தில் வரலாற்றில் முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு மோசமான இனப் படுகொலைகள் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டன. முஸ்லிம்கள் பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு பாரிய புதை குழிகளில் புதைக்கப்பட்டனர்.

இன்னமும் அடையாளம் காணப்படாத பாரிய புதைகுழிகள் பல உள்ளதாகவே கூறப்படுகின்றது.

ஒரு காலத்தில் மிகவும் ஆரோக்கியமாகவும் செல்வத்தோடும் வாழ்ந்த முஸ்லிம்கள் அடித்து சித்திரவதை செய்யப்பட்டு பட்டினியில் வாட விடப்பட்டடு கால்நடைகளை அடைத்து வைக்கும் கொட்டில்கள் போன்ற இடங்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் படக் காட்சிகள் கூட வெளியாகியுள்ளன.

இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு அமெரிக்காவும் ஐரோப்பாவும் செயல் இழந்து நின்றன. இவற்றை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த மேற்குலகின் இந்த மௌனம் சேர்பியர்கள் தமது வெறியாட்டத்தை தொடர துணைநின்றன.

பொஸ்னியர்கள் என்ன நடக்கின்றது என்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றனர் காரணம் அவர்களின் வீடுகளையும் சொத்துக்களையும் அழித்து அவர்களின் உயிர்களைப் பறித்துக் கொண்டிருந்தவர்கள் எல்லோருமே நன்கு தெரிந்த நண்பர்களாகவும் அயல் வீட்டுக் காரர்களாகவும் காணப்பட்டனர்.

பரம்பரை பரம்பரையாக தம்மோடு அமைதியாகவும் இணக்கபூர்வமாகவும் வாழ்ந்தவர்கள் தான் தமது உயிர்களை சூறையாடிக் கொண்டிருப்பவர்கள் என்பது அவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இரண்டு வருடங்களின் பின் ஐ.நா பாதுகாப்பு வலயம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. செரப்ரனிகா பகுதி பொஸ்னிய சேர்பியர்களின் முற்றுகைக்கு ஆளானது.

இந்த அச்சுறுத்தல் காரணமாக சுமார் 15000 முஸ்லிம் பேராளிகள் ஆயுதங்களை கைவிட்டு ஐ.நா சமாதானப் படையிடம் சரணடைந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள அனுமதிக்குமாறு கோரினர்.

ஆனால் ஐ.நா இந்தக் கோரிக்கையை நிராகரித்தது. இது முஸ்லிம்களை சேர்பியர்களின் தயவில் தங்க வேண்டிய ஒரு சூழலை ஏற்படுத்தியது.

சுமார் 45000 பேர் இங்கு இருந்ததாக கண்ணால் கண்ட சாட்சிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இவர்களுள் அநேகமானவர்கள் சிவிலியன்கள். இவர்கள் தம்மை காப்பாற்றுமாறு ஐ.நா படை பிரிவில் உள்ள டச்சு படையினரிடம் மன்றாடினர். முகாம்களில் தங்கியிருக்க அனுமதிக்குமாறு அவர்கள் வேண்டினர்.

ஆனால் முகாம்களில் இருந்து அனைவருமே விரட்டப்பட்டனர். இவர்களை பிடித்து சேர்பியர்கள் தமது பலிபீடங்களுககு இழுத்துச் சென்றனர்.

முஸ்லிம்கள் மீதான உண்மையான அச்சுறுத்தலை புரிந்தும் கூட டச்சு படைவீரர்கள் இவ்வாறு நடந்து கொண்டனர்.

ஆயுதங்கள் அற்ற முஸ்லிம் சிவிலியன்களின் முதலாவது படுகொலைகள் கிராவிகா என்ற கிராமத்தில் உள்ள ஒரு களஞ்சியசாலையில் இடம்பெற்றது. பொஸ்னிய சேர்பிய படைகள் செரப்ரனிகாவை கைப்பற்றி ஐந்து தினங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான மிக மோசமான படுகொலைகள் இடம்பெற்றன.

தொடர்ந்து நான்கு தினங்களாக எவ்வித இடையூறும் இன்றி இந்த படுகொலை படலம் நீடித்தது. செரப்ரனிகா முழுவதுமே பலி பீடங்களாக மாறின. செரப்ரனிகாவை அண்டியிருந்த இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் பாரிய புதை குழிகளாக மாறின.

இவற்றுள் பல இன்னமும் அடையாளம் காணப்பட்டு தோண்டப்படாமல் உள்ளன.

செரப்ரனிகாவில் இருந்து ஏதோ ஒரு வழியில் நீண்டதூரம் பயணம் செய்து தப்பிவந்த ஒரு சிலர் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி வந்து சேர்ந்த பின்புதான் இந்தப் படுகொலைகள் பற்றிய தகவல்கள் பரவத் தொடங்கின.

இந்தப் படுகொலைகள் பற்றி பின்னர் கருத்து வெளியிட்டிருந்த சேர்பிய படை வீரர் ட்ராஸன் எர்டமோவிக் தான் மட்டும் சுமார் நூறு பேரை செரப்ரனிகாவில் சுட்டுக் கொன்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சுலோபடன் மிலாசவிக் மீதான யுத்தக் குற்றங்கள் பற்றிய விசாரணைகளின் போதுதான் அவர் இதனைத் தெரிவித்தார்.

முஸ்லிம் ஆண்களும் சிறுவர்களும் பல பஸ்களில் ஏற்றப்பட்டு பண்ணை வெளி ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் ஒரு கிரமமான முறையில் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் மீது இயந்திரத் துப்பாக்கிகளால் சுடப்பட்டது. அதற்கு பின் ஒவ்வொருவர் பக்கத்திலும் சென்று தலையில் கைத்துப்பாக்கிகளால் சுடப்பட்டது என்று அவர் இந்தக் கொடூரத்தை வர்ணித்துள்ளார்.

இவர்களில் பலரின் கண்கள் கட்டப்பட்டு கைகளும் பின்னால் சேர்த்து கட்டப்பட்டிருந்தன. அடையாளம் காணப்பட்டவர்களை முதலில் மிக மோசமாக நடத்தினர். அதன் பின்னர் பண்ணையில் வைத்து பலர் கொல்லப்பட்டனர்.

ஆனாலும் இவை எல்லாம் எதற்காக நடத்தப்பட்டன என்பது பற்றி எதுவும் எனக்கு தெரியாது என்று அந்தப் படை வீரர் விவரித்துள்ளார்.

சேர்பியர்களின் நோக்கம் என்ன அவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என்பதை அமெரிக்கா, ஐ.நா பாதுகாப்புச் சபை உட்பட முழு ஐரோப்பாவும் நன்கு தெரிந்து வைத்திருந்தன.

செரப்ரனிகா படுகொலை ஒன்று இடம்பெறவுள்ளது என்று தான் அறிந்து வைத்துள்ளதாக மிலோசவிக் தன்னிடம் கூறினார் என்று நேட்டோ படைகளின் தளபதி வெஸ்லி கிளார்க் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அதை தடுக்க எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல வருடங்களின் பின்னர் ஐ.நா இந்த விடயத்தில் தோல்வி அடைந்து விட்டது என்று ஏற்றுக் கொண்ட அதன் செயலாளர் நாயகம் கொபி அனன் செரப்ரனிகா முஸ்லிம்களின் படுகொலைகள் பற்றி தான் வெளியிட்ட 155 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

‘செரப்ரனிகாவில் முஸ்லிம்கள் மீதான படுகொலை ஐ.நா வை என்னென்றும் சோகத்துக்குள்ளாக்கும் ஒரு சம்பவமாகும். ஐ.நா பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்ற இந்தப் படுகொலகளுக்கு ஐ.நாவும் ஒரு வகையில் பொருப்பேற்க வேண்டும்.

இந்தப் பயங்கரம் இடம் பெறுவதைத் தடுக்க ஐ.நா. பாதுகாப்புச் சபை காத்திரமான பலவந்தமான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘இரண்டாம் உலக மகா யுத்த பயங்கரங்களின் பின் உலகம் இதுபோன்ற ஒரு சம்பவத்தை கண்டதும் இல்லை சந்தித்ததும் இல்லை.

செரப்ரனிகா கொடூரம் எமது வரலாற்றில் கறையை ஏற்படுத்தியுள்ளது. சேர்பியர்களின் தாக்குதலை அடுத்து ஐ.நா படையின் டச்சு பிரிவு அங்கிருந்து வாபஸ் பெற்றமைக்காக அவதானிப்பாளர்கள் பலர் அந்தப் படை பிரிவு மீது நேரடியாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஆனால் ஆகாய மார்க்கமாக தாக்குதல் நடத்த தாங்கள் அனுமதி கோரிய போது அது ஐ.நா உயர் பீடத்தால் மறுக்கப்பட்டதாக டச்சு படை பிரிவு தெரிவித்துள்ளது.

சேர்பியர்களுக்கு எதிராக நேட்டோ மட்டும் தான் ஆகாய மார்க்க நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டமை பெரும் தவறான முடிவாகும்.

ஒரு மக்கள் கூட்டத்தை ஒட்டு மொத்தமாக அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றி அவர்களைப் படுகொலை செய்ய திட்டமிட்ட முறையில் எடுக்கப்பட்ட செயற்பாடுகளுக்கு எதிராக தேவையான எல்லா வளங்களையும் பயன்படுத்தி தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

அரசியல் மனோதிடத்தின் மூலமாக தர்க்க ரீதியான முடிவுகளுக்கு வரக் கூடிய கொள்கைகளும் அவசியம் என்பதே சேர்பிய படுகொலைகள் உணர்த்தி நிற்கின்ற பாடமாகும்’.

அனன் இதுபற்றி மேலும் குறிப்பிடுகைளில் ‘சுமார் 2500 பேரின் உடல் எச்சங்கள் பாரிய புதைகுழிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

காணாமல் போனதாக நம்பப்படும் மேலும் ஆயிரக்கணக்கானவர்களின் உடல் எச்சங்களும் இதேபோல் ஏனைய இடங்களில் இருந்து கண்டு பிடிக்கப்படலாம்.

தோண்டி எடுக்கப்பட்ட சடலங்களுள் பல கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

சிலருக்கு பின்புறமாக சுடப்பட்டுள்ளது. பலருக்கு தலையில் சுடப்பட்டுள்ளது. ஐ.நாவும் நேட்டோவும் தம்மை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த பலரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

இது உண்மையில் கவலைக்கும் அதிர்ச்சிக்கும் உரிய விடயம். சேர்பிய படைகள் ஐ.நா பாதுகாப்புச் சபையை அலட்சியம் செய்துள்ளனர். ஐ.நா படைகளை ஓரம் கட்டிவிட்டு செரப்ரனிகாவை அவர்கள் இலகுவாகக் கைப்பற்றியுள்ளனர்.

இந்தக் கொலைகளைத் தடுக்க இராணுவ பலத்தை பிரயோகித்திருக்கலாம்’ என்று கூறியுள்ளார்.

பின்னர் டச்சு பாராளுமன்ற ஆணைக்குழு ஒன்று இந்த சம்பவங்கள் பற்றி விரிவான விசாரணை ஒன்றை நடத்தியது.

வெரப்ரனிகாவில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டமைக்கு டச்சு அரசாங்கம் அரசியல் ரீதியாக பொறுப்பேற்க வேண்டும் என்று அந்த ஆணைக்குழு முடிவு செய்தது.

ஆனால் இந்தப் படுகொலைகளை திட்டமிட்டு அரங்கேற்றியவர்கள் மற்றும் அவர்களுக்கு அனுசரணை வழங்கியவர்களும் அவர்களின் ஞானத் தந்தைகளும் இன்னமும் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.