ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் என்பனவற்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 150 பேரை குற்றப் புலனாய்வு திணைக்களம் தலைமையிலான விசாரணை குழுக்கள் அடையாளம் கண்டுள்ளன.

அடையாளம் காணப்பட்டவர்களுள் ஜனாதிபதி செயலகத்தை உடைத்து சேதப்படுத்திய 55 சந்தேக நபர்களும் பிரதமர் அலுவலகத்தை சேதப்படுத்திய சந்தேக நபர்கள் 15 பேரும் உள்ளனர். ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை என்பவற்றுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் அங்கிருந்த சொத்துக்களை திருடியமை தொடர்பில் 80 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் தினங்களில் இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும், சட்ட மாஅதிபருடன் கலந்தாலோசித்து பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் தொல்பொருள் சட்டம் போன்றவற்றின் கீழ் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை

எடுக்கப்படுமெனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் கொழும்பு உட்பட பிரதான நகரங்களில் போராட்டங்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. அதே போன்று கடந்த 09 ஆம் திகதி கொழும்பில் திரண்ட பெருந்திரளான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட கேந்திர இடங்களை ஆக்கிரமித்து அவற்றை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இந்த இடங்கள் அண்மையில் மீள ஒப்படைக்கப்பட்டதோடு ஜனாதிபதி செயலகம் பாதுகாப்பு நடவடிக்கையின் பின்னர் மீட்கப்பட்டது. அதேவேளை அவற்றுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குற்றப்புலனாய்வு திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட குழுக்கள் இந்த விசாரணைகளை நடத்தி வருகின்றன. இதன்படி மேற்படி சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.