Facebook சமூக வலைத்தளத்தில் இடப்பட்ட பதிவொன்றுக்கு வெறுப்புணர்வூட்டும் பின்னூட்டம் வழங்கிய சந்தேகநபர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (23) குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், Facebook சமூக வலைத்தளத்தில் இடப்பட்டிருந்த பதிவொன்றுறுக்கு பொதுமக்களிடையே அமைதியை சீர்குலைக்கும் வகையில், பொதுமக்கள் பாதுகாப்பிற்கு இடையூறை ஏற்படுத்தும் நோக்கில் பின்னூட்டங்களை (Comment) வழங்கிய நபர் ஒருவர் தொடர்பில், தென் மாகாண கணனி குற்றப் புலனாய்வு உப பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் (24) காலி கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 28 வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை 18ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்ட இல 2289/07 இலக்க அவசரகாலச் சட்ட நிலை தொடர்பான அதி விசேட வரத்த்தமானி அறிவிப்பின் 15ஆம் இலக்கத்தின் அடிப்படையிலும், குற்றவியல் சட்ட விதிமுறைகளின் கீழ், கணனி குற்ற விசாரணை பிரிவினால், குறித்த சந்தேகநபர்  கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சந்தேகநபர் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 08ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த பதிவை முதலில் வெளியிட்ட பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட அதற்கு தமது ஆதரவை வெளியிட்ட ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்வது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தென் மாகாண கணனி குற்றப் புலனாய்வு உப பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.