கலை இலக்கியவாதிகளின் அபிமானம் பெற்ற மூத்த அரசியல்வாதியும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஏ. எச். எம். அஸ்வர் ஹாஜியாரின் ஐந்தாவது நினைவு தினம் இன்று. சமூக சேவையாளர் இலக்கியவாதி, ஊடகவியலாளர், கிரிக்கெட் வர்ணனையாளர், நூலாசிரியர், அரசியல்வாதி, அமைச்சர்களின் செயலாளர், சபாநாயகரின் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர், இராஜாங்க அமைச்சர் என் பல்துறை ஆளுமை இவர்.

 “அஜீ” என்று அன்போடு அழைக்கப்படும் அஸ்வர் ஹாஜியார் இவ்வாறு பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தக்காரராக இருப்பினும் இவை எல்லாவற்றுக்கும் மேலாக இவர் ஒரு சிறந்த மனித நேயராவார் . 

கொழும்பு சாஹிரா கல்லூரி, மகரகமை கபூரிய்யா அரபுக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவர். தமிழ், சிங்களம், ஆங்கிலம் மும்மொழிகளிலும் ஒன்றுபோல் சிறப்பான புலமை பெற்றவர். சிறந்த மேடைப் பேச்சாளர், ஆற்றல்மிக்க மொழிபெயர்ப்பாளர்.

அகில இலங்கை முஸ்லிம் லீக், அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம், சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையம், மஹரகம கபூரியா அரபுக் கல்லூரி, கொழும்பு ஸாஹிரா கல்லூரி என பல சமூகசேவை இயக்கங்களிலும், அமைப்புகளிலும்  பொறுப்பான பதவிகள் வகித்து தொடர்ச்சியாக மக்கள் சேவை செய்தவர்.

1950ல்  லங்கா சமசமாஜக் கட்சியில் இணைந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர்,  1955ல்  ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து நீண்ட காலம் செயல்பட்டார். இறுதியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரானார். 

பலமுறை தேசிய பட்டியல் மூலமாகவே நாடாளுமன்ற உறுப்பினரான அஸ்வர் ஹாஜியார், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராகவும்,  நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சராகவும் செயலாற்றியுள்ளார்.

“வாழ்வோரை வாழ்த்துவோம்” எனும் மகுடத்தின் கீழ் ஏராளமான இலக்கியவாதிகளுக்கு  பட்டங்களும், பணமுடிப்புகளும் வழங்கி கெளரவப்படுத்தியமை இவரது சேவைகளில் தனித்துவமானது எனலாம். வாழ்வோரை வாழ்த்திய அஸ்வர் ஹாஜியாரை, அவர் வாழாதபோதும் மக்கள் வாழ்த்திக்கொண்டே இருப்பார்கள் என்பது உறுதி.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.