கொவிட் நோய் தொடர்பில் சுகாதார திணைக்களத்தினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் இறப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், நோயைத் தடுப்பதற்கு பொதுமக்களின் ஆதரவு மிகவும் அவசியமானது என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தேவைக்கு ஏற்ப முகக்கவசம் அணிந்து நோய்த்தடுப்பு மருந்துகளை பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது மற்றும் நான்காவது தடுப்பூசி போடாதவர்கள் அருகில் உள்ள மருத்துவமனை அல்லது சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகத்திற்குச் சென்று தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

தடுப்பூசி போடுவதால், மக்கள் கொவிட் நோயால் இறப்பதை முடிந்தவரை தடுக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ள அவர், சிக்கல்கள் மற்றும் இறப்பு அபாயத்தைக் குறைக்க தடுப்பூசி போடுவது முக்கியம் என்றும் கூறினார்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என அவர் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.