(ஹஸ்பர்)

குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் வறிய, பின்தங்கிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை நிலைபேறு கொண்டவையாக மேம்படுத்தும் நோக்குடன், விவசாய, மீன்பிடி மற்றும் சுயதொழில்களை மேற்கொள்வதற்கு அவசியமான பல இலட்ச ரூபாய்கள் பெறுமதியுடைய பலவகைப்பட்ட உபகரணங்கள் மற்றும் கருவிகளை முஸ்லிம் எய்ட் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் நிலாவெளி அல்-பத்தாஹ் மகாவித்தியாலத்தில் நடைபெற்றது.

முஸ்லிம் எய்ட் நிறுவனம் இந் நிகழ்ச்சித்திட்டத்தினை கடந்த இரண்டு வருடங்களாக குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவு கிராமங்களில் நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக இவ்வாழ்வாதார உதவிகள் அமைகின்றன. 


இக்கையளிப்பு நிகழ்வில், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ், பிரதம அதிதியாகவும் குச்சவெளி பிரதேச செயலாளர் கே.குணநாதன், திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன், முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா தேசிய பணிப்பாளர் ஏ.சீ. பைசர்கான் மற்றும் விவசாயத் திணைக்கள பிரதி பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் பங்கேற்று நிகழ்வினைச் சிறப்பித்தனர். 

மேலும், பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு பன்முகத் தன்மையுடைய விவசாயச் செய்கையினை ஊக்குவிக்கும் நோக்குடன், குச்சவெளிப் பிரதேசத்திலுள்ள சில பாடசாலைகளில் விவசாய முயற்சிகளை ஊக்குவிக்கும் திட்டத்திற்கான விவசாய உபகரணங்கள் மற்றும் நீண்டகாலப் பயிர்கள் விநியோகிக்கப்பட்டன.


பாடசாலை சமூகமும் முஸ்லிம் எய்ட் ஊழியர்களும் இணைந்து இவ் வினியோக நிகழ்வினைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

கொவிட் நெருக்கடிகள் மற்றும் கடந்த சில மாதங்களாக முழு நாட்டையும் பாதித்து வருகின்ற மோசமான பொருளாதார நெருக்கடிகள் விலையேற்றங்கள் போன்ற சவால்களைக் கடந்து மேற்படி வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்கள் சமூக பங்குபற்றுதல் மற்றும் அரசாங்க நிறுவனங்களின் ஒத்துழைப்பு வழிகாட்டலுடன் வெற்றிகரமான முன்னோக்கிக் கொண்டு செல்லப்படுகின்றது.

'உள்ளுர் உற்பத்தித் துறைகளில் நவீன முறைகளைப் புகுத்தி ஏழை விவசாயிகள், மீனவர்கள் மற்றும் இளைஞர்களின் வருமான மட்டத்தினை உயர்த்துவதற்கும் அவர்கள் கௌரவமான ஆரோக்கியமாக வாழ்வதற்கும் முஸ்லிம் எய்ட் தனது சக்திக்குட்பட்ட அளவில் கடந்த 17 வருடங்களாக நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றது. நவீன முறைமைகளை நமது நாட்டிற்குப் பொருத்தமான முறையில் பயன்படுத்தி பயனாளிகளின் குடும்பங்களின் வறுமை நிலையை மட்டுப்படுத்தியும் வருமானத்தை அதிகரித்தும் அவர்களின் வாழ்வில் சுபீட்சத்தினை ஏற்படுத்துவதே முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் பிரதான குறிக்கோளாகும் என முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா தேசிய பணிப்பாளர் ஏ.சி.பைசர்கான் தனது திட்ட அறிமுக உரையின் போது குறிப்பிட்டார்.


விவசாயத்திணைக்க பிரதி இயக்குனர் எம்.பரமேஸ்வரன் தனது உரையில் 'விவசாயக் குடும்பங்களின் உற்பத்தியில் நவீன முறைகளை அறிமுகம் செய்வதிலும், பெறுமானம் சேர் வழிமுறைகளில் பயிற்சிகளை வழங்குவதிலும் புதிய முறைகளை நடைமுறைப்படுத்துமாறு முஸ்லிம் எய்ட் நிறுவனம் விவசாயிகளை அது ஊக்குளிக்கின்றமை வரவேற்கத் தக்கது எனவும் ஒரு துண்டுக் காணியினையும் வெறும் நிலமாக விட்டு வைக்கக்கூடாது' எனவும் குறிப்பிட்டார்.


குச்சவெளி பிரதேச செயலர் கே. குணநாதன் தனது உரையில் 'மூன்று பிரதான துறைகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தில்தான் இப் பிரதேச செயலகப் பிரிவில் வாழும் 13,500 குடும்பங்கள் தங்கியுள்ளன. இவற்றில் முஸ்லிம் எய்ட் இரண்டு துறைகளில் மிகவும் சிறந்த பங்களிப்பினைச் செய்து வருகின்றது. மூன்றாவதாகிய சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்ட வருமானம் ஈட்டும் துறைகளிலும் இந் நிறுவனம் தனது கவனத்தைக் குவிக்க வேண்டும் என்பதுடன் உள்ளுர் உணவுற்பத்தினை ஊக்குவிப்பதில் நாம் அனைவரும் ஈடுபட வேண்டும், சிறார்கள் மத்தியில் போசாக்கு இன்மையை இல்லாமலாக்க அனைவருடனும் இணைந்து செயற்பட முஸ்லிம் எய்ட் தயாராக வேண்டும் என அந்நிறுவனத்தின் பணிப்பாளரிடம் நான் கேட்டுக் கொள்கின்றேன்' என அவர் கேட்டுக் கொண்டார்.

'முஸ்லிம் எய்ட் தற்போது வழங்கியிருக்கும் உதவிகள் காலப் பொருத்தமானது என்பதுடன் மிகவும் பெறுமதி மிக்கவை. இதனை முறையாகப் பயன்படுத்தி பயனாளிகள் முன்னேற்றம் அடையவேண்டும்' என்று மேலதிக அரச அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தெரிவித்தார்.




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.