இலங்கையில் 2022 ஏப்ரல் மாதம் தொடக்கம் முன்னெடுக்கப்பட்ட அறகலய மிகக் குறுகிய காலத்தில் ஈட்டிக் கொண்ட வெற்றிகளை விரிவாக பட்டியலிட்டுக் காட்ட வேண்டிய அவசியமில்லை. அது எல்லோரும் நன்கு  அறிந்த விஷயங்கள்.

ஆனால், அதன் இறுதி இலக்கை சாதித்துக் கொள்ளும் விடயத்தில் - அதாவது, இலங்கை அரசின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் தலைகீழாக மாற்றியமைக்கும் விடயத்தில் - அறகலய தோல்வி கண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. மக்களின் ஆவேசத்திற்கு அஞ்சி, சிறிது காலம் பதுங்கி வாழ்ந்து வந்த ‘225 ஆட்களில்’  சிலர்  இப்பொழுது பயம் தெளிந்து, வெளியில் வந்து அந்த மகத்தான மக்கள் எழுச்சியை கொச்சைப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். வரலாற்றுத் திருப்புமுனையான  அந்த நிகழ்வை சிறுமைப்படுத்தும் விதத்தில் இப்பொழுது சிங்கள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருவதனையும் பார்க்க முடிகிறது. அது மட்டுமன்றி, அறகல பூமியில் நிலவிய கிறிஸ்தவ, முஸ்லிம் பிரசன்னத்தை ‘இரகசிய சூழ்ச்சி’ ஒன்றின் ஒரு பாகமாக சித்தரிக்கும் முயற்சிகளும் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மறுபுறம், சஜித்திடமிருந்து மெதுவாக கழன்று போய் அமைச்சு, பிரதி அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளும் திசையை நோக்கி சிறு பங்காளிக் கட்சிகள் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளன. ஆளுநர்  பதவிகள் மற்றும் இன்ன பிற சலுகைகள் என்பவற்றுக்கான மறைமுகமான பேரங்கள் வேறு.

அறகலயவின் மூலம் இறுதியில் பயனடைந்திருப்பவர்  யார்  என்பதையும், அவர்  இப்பொழுது முக்கிய பதவிகளுக்கு நியமனம் செய்து வரும் ஆட்கள் யார்  என்பதையும்  பார்க்கும் பொழுது,  இலங்கையில் உடனடியாக ஒரு ‘System Change’ ஏற்படுவது அநேகமாக சாத்தியமில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

இத்தகைய ஒரு திரிசங்கு நிலைமை தோன்றுவதற்கான முக்கிய காரணம் அறகலயவில் காணப்பட்ட குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு குறைபாடு. அதாவது, அதனை முன்னெடுத்தவர்களால் ‘கோட்டாபய வேண்டாம் என்றால், யார்  வேண்டும்’ என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாதிருந்த சங்கடம். 

அறகலயவின் கருத்தியலை வடிவமைத்து, பின்னணியிலிருந்து அதனை நெறிப்படுத்திய முக்கியமான தரப்புக்களில் ஒன்றான ‘பெரட்டுகாமி’ (FSP) கட்சியினர்  எதிர்கொண்ட பிரச்சினை, சிங்கள மக்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு மாற்றுத் தலைவரை அடையாளம் காட்ட முடியாதிருந்தமையாகும். குமார்  குணரத்தினத்தையோ, துமிந்த நாகமுவவையோ அப்படி முன்வைக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதே நேரம் மைய நீரோட்ட  அரசியலில்  (Mainstream Politics) செயற்பட்டு வரும் ஒருவரை  தலைவராக அடையாளம் காட்டினால் அது அவர்கள் ஓங்கி ஒலித்து வந்த ‘System Change’ என்ற கோஷத்தை கேலிக்கூத்தாக்க முடியும் என்பதனையும் அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். 

மக்கள் மத்தியில் இன்னமும் வேரூன்றியிருக்கும் பழங்குடி உளவியல் கூறுகள் மிக நுட்பமானவை.  ஒருவரை தமது தலைவராக ஏற்றுக்கொள்வதில் அவை அதிக செல்வாக்குச் செலுத்துகின்றன. 1798 இல் ஸ்ரீராஜாதி ராஜசிங்க மன்னன் வாரிசு இல்லாமல் மரணமடைந்த பொழுது, பிரதம மந்திரியாக இருந்த மூத்த சிங்களத் தலைவர் பிலிமத்தலாவையை கண்டி இராச்சியத்தின் மன்னராக ஏற்றுக்கொள்வதற்கு கண்டியச் சிங்களவர்களும், அதே போல பிரதானிகளும் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக, நாயக்கர்  அரச வம்சத்தைச் சேர்ந்த தெலுங்கு மொழி பேசும் கண்ணுசாமி நாயுடு என்ற 18 வயது இளைஞரை ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் என்ற பெயரில் மன்னனாக முடி சூட்டி, மகிழ்ந்தார்கள். 


பண்டாரநாயக்காவின் மரணத்தின் பின்னர்  1960 மார்ச் மாதம் இடம்பெற்ற பாராளுமன்ற  பொதுத்  தேர்தலிலும் இதே மாதிரியான ஒரு நிலைமை தோன்றியது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூத்த அரசியல்வாதியான சீ பி டி சில்வாவை அதன் பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்தியிருந்த நிலையில் அத்தேர்தலில் அக்கட்சியினால் வெற்றியீட்ட முடியாது போய்விட்டது. டட்லி சேனநாயக்காவின் குறுகிய கால அரசாங்கத்தின் பின்னர்  1960 ஜூலை மாதம் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் புதிய தலைவியாக சிங்கள உயர்  குடியைச் சேர்ந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா நியமனம் செய்யப்பட்டு, தேர்தலில் களமிறக்கப்பட்டார் . அவர்  அத்தேர்தலில் ஈட்டிய அமோக வெற்றி இலங்கை மக்களின் உளவியல் செயற்படும்  விதத்தை  ஓரளவுக்கு எடுத்துக்காட்டும் ஓர்  விடயமாக இருந்து வந்தது.

இந்தப் பின்னணியில், அறகலய ஆகஸ்ட் 09 ஆம் திகதி அதன் இரண்டாவது கட்டத்தை இதே விதத்தில் முன்னெடுத்தால் - அதாவது, மாற்றுத் தலைவர்  ஒருவரை அடையாளப்படுத்தாத விதத்தில் இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தால் - முதலாவது கட்டத்திற்கு நேர்ந்த கதியே இதற்கும் நேர முடியும் என்பதனை சம்பந்தப்பட்ட தரப்பினர்  இப்பொழுது நன்கு உணர்ந்து கொண்டிருப்பது போல் தெரிகிறது. முன்னிலை சோசலிசக் கட்சி (FSP)   மற்றும் அறகலய செயற்பாட்டாளர்கள் ஒரு பிரிவினர்  ஆகிய தரப்புக்களுடன் சரத் பொன்சேகா ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருப்பதாக  ஊகிக்க முடிகிறது. அடுத்த கட்ட அறகலயவில் (மறைமுகமான விதத்தில்) அவரை ஒரு மாற்றுத் தலைவராக முன்வைக்கக்கூடிய சாத்தியப்பாடும் காணப்படுகிறது. 

இந்தத் தரப்புக்களின் ஆசீர்வாதத்துடன் சரத் பொன்சேகா இப்பொழுது ஒரு தீவிர ‘கலகக்காரராக’ எழுச்சியடைந்து வருகிறார். பொலிஸ் நிலையங்களுக்கு விஜயம் செய்து, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அறகலய செயற்பாட்டாளர்கள் தொடர்பாக கரிசனையுடன் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார். அசாதாரணமான துணிச்சலை வெளிப்படுத்திக்காட்டும் தொனியில், அதற்கேற்றாற் போன்ற உடல் மொழியுடன் ஆகஸ்ட் 09 ஆம் திகதி அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு இப்பொழுது மக்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார் .

பொதுவாக ஒரு சிங்கள வலதுசாரி அரசியல்வாதியாக கருதப்படும் அவர்  இப்பொழுது பாராளுமன்றம் குறித்தும், (SJB ஐயும் உள்ளிட்ட) பிரதான அரசியல் கட்சிகள் குறித்தும் அறகலய செயற்பாட்டாளர்கள் பேசும் அதே மொழியில் பேசத் தொடங்கியிருக்கிறார். இந்தப் பின்னணியில், கடந்த  ஜூலை 09ஆம் திகதி அறகலயவின் மிக நிர்ணயகரமான ஒரு கட்டத்தில் அவர்  மேடையேற்றப்பட்ட திடீர்  திருப்பத்தை ஒரு தற்செயல் நிகழ்வாக புறம் தள்ளிவிட முடியாது. 

தீவிர இடதுசாரி நிலைப்பாடுகளுடன் பொருந்திச் செல்லும் கருத்துக்களை துணிவுடன் முன்வைக்கும் ஒரு ‘கலகக்காரராக’ அவரிடம் ஏற்பட்டிருக்கும் இந்த நிலைமாற்றத்திற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்க முடியும். ஒன்று, இன்றைய நாட்டு நிலவரம், மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கயமை என்பவற்றை பார்த்து ‘இவை அனைத்தையும் நிர்மூலமாக்க வேண்டும்’ என்ற தார்மீகக் கோபம் அவருக்கு ஏற்பட்டிருக்க முடியும். அவ்வாறில்லாவிட்டால், ‘ஒரு தலைவரை அடையாளம் காட்டாத விதத்தில் அறகலய மக்கள் எழுச்சியை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல முடியாது’ என்ற யதார்த்த நிலையை தனக்குச் சாதகமான விதத்தில் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல் சந்தர்ப்பவாதமாகவும் அது இருக்க முடியும். 

சரத் பொன்சேகாவை போன்ற ஒரு மைய நீரோட்ட அரசியல் தலைவருடன் சமசரசம் செய்து கொள்வதில் தவறேதும் இல்லை என அறகலய செயற்பாட்டாளர்கள் இப்பொழுது சிந்தித்து வருவது போல் தெரிகிறது. இந்த எதிர்ப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை  ‘நமது குழந்தைகள்’ (அபே தருவோ) என்கிறார்  அவர். எப்படி பார்த்தாலும், இந்த இரண்டு தரப்புக்களுக்குமிடையில் ஒரு நெருக்கமான தொடர்பு (Rapport) உருவாகியிருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.  

சிங்கள மக்கள் மத்தியில் வேரூன்றியிருக்கும் தேசிய பாதுகாப்பு குறித்த இனம்புரியாத அச்ச உணர்வின் பின்னணியில்,  சரத் பொன்சேகாவுக்கு இருக்கும் ‘ரணவிரு’  பிம்பத்தை பயன்படுத்தி, அவரை ஒரு தலைவராக கட்டமைப்பது எளிதான ஒரு காரியமாக இருந்து வரும். அது இன்னொரு விதத்தில் இலங்கை இராணுவத்தை எதிர்கொள்வதற்கான மனோதிடத்தையும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழங்க முடியும். 

ஆகஸ்ட் 09 ஆம் திகதி ஆர்ப்பாட்டங்களை அரசாங்கம் எவ்வாறு கையாளப் போகிறது, அதற்கென ஜனாதிபதி வகுத்திருக்கும் வியூகங்கள் எவை என்பவற்றை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சட்டம் ஒழுங்கு நிலைமைகள் கைமீறிச் செல்லும் விதத்தில் சம்பவங்கள் அரங்கேறினால், ஜூலை 09ஆம் திகதி செய்ததைப் போல இந்தத் தடவை இராணுவம் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டாது என்பதனை மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடியும். 

ஏனென்றால்,   தனது  மாமாவான ஜே ஆர்  ஜயவர்தனவின்  11  வருட கால   (1977-1988) அடக்கு முறை ஆட்சியின் பெருமைமிகு ‘Legacy’ ஐ அதே விதத்தில் தன்னால் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்ற விடயத்தை ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே தெளிவாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார் .

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.