சவூதி அரசாங்கத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எழுதிய கடிதம்,
முடிக்குரிய இளவரசரும், பிரதிப்பிரதமரும் மற்றும் பாதுகாப்பு அமைச்சருமான முஹம்மட்பின் சல்மான்பின் அப்துல் அஸீஸிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இக்கடிதத்தை, முடிக்குரிய இளவரசர் சார்பாக, சவூதி அரேபியாவின் பிரதி வௌிநாட்டமைச்சர் வலீத்பின் அப்துல் கரீம் அல்குராஜி பெற்றுக் கொண்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விஷேட தூதுவராக நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு சவூதி அரேபியா சென்றுள்ள சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் இக்கடிதத்தை கையளித்தமை குறிப்பிடத்தக்கது. இரு தரப்பு உறவுகளின் மேம்பாடு மற்றும் இலங்கையரின் பல்துறை அபிவிருத்திகளுக்கு சவூதியின் உபாயங்கள் வழங்கும் பங்களிப்புக்கள் குறித்து ஜனாதிபதியின் கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் ரியாதில், சவூதி அரேபியாவின் பிரதி வௌிநாட்டமைச்சருடனான சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் நஸீர் அஹமட் நீண்டகால உறவுகள் மற்றும் இலங்கையில் அபிவிருத்தி மேம்பாடுகளை மேலோங்கச் செய்தல் பற்றிக் கலந்துரையாடினார்.