றிப்தி அலி
இலங்கை ஊடகவியலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவுள்ள ஊடகவியலாளர்களுக்கான ஓய்வூதிய செயற்திட்டத்தினை அமுல்படுத்துவதற்கு பொறுப்பான திணைக்களங்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் காணப்படுகின்ற  விடயம் தகவல் அறியும் விண்ணப்பத்தின் ஊடாக பகிரங்கமாகியுள்ளது.

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பொதுமக்களுக்கான செய்திகளை உடனுக்குடன் வழங்கிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களும் இந்நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் ஊடகவியலாளர்களுக்கான ஒய்வூதிய திட்டத்தினை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஊடகவியலாளராக இருந்து அரசியல்வாதியாக மாறிய டளஸ் அழகப்பெரும, கடந்த ஆட்சியில் ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்ட பின், ஊடகவியலாளர்களுக்கான பல்வேறு நலன் திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தார்.

குறிப்பாக ஒரு வருடத்திற்கான இலவச காப்புறுதித் திட்டம், ஊடக பட்டய கற்கை நிலையத்தினை ஸ்தாபித்தல் மற்றும் ஜனாதிபதி ஊடக விருது வழங்கல் போன்ற பல செயற்திட்டங்களை அறிவித்திருந்தார்.

இவற்றில் காப்புறுதித் திட்டத்தினை தவிர்ந்த வேறெந்த திட்டங்களும் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவ்வாறான நிலையில், ஊடகவியலாளர்களின் ஓய்வூதியத் திட்டமும் காணல்நீராகிப் போயுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் தகவல்களின் பிரகாரம் கடந்த 2019ஆம் ஆண்டு 6 ஆயிரத்து இருநூற்று 83 ஊடகவியலாளர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்திற்கு பாரிய நடவடிக்கையொன்றல்ல. எனினும் இந்த திட்டத்தினை அமுல்படுத்துகின்ற அரச நிறுவனங்கள் மத்தியில் வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.

இத்திட்டம் தொடர்பில் ஆராயும் முகமாக ஊடக அமைச்சு மற்றும் சமூக பாதுகாப்பு சபை ஆகியவற்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பங்களிற்கு கிடைக்கப் பெற்ற பதில்களின் ஊடாகவே இந்த விடயம் அறிய முடிந்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான  மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது வெளியிட்ட 'மஹிந்த சிந்தனையில்' ஊடகவியலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்திருந்தார்.

இத்தேர்தல் வெற்றியினை அடுத்து அப்போதைய வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அப்போதைய ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதற்கமைய, ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட 2006ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க ஊடக ஆளணியினருக்கான சமூக பாதுகாப்பு நலனோம்பல் சட்டம் 2006.09.05ஆம் திகதி பாராளுமன்றத்தினால் சட்டமாக்கட்டது.

இதனையடுத்து குறித்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் பொறுப்பாக சமூக பாதுகாப்பு சபை நியமிக்கப்பட்டது.

தேவையேற்படின் இந்த திட்டத்திற்கான ஆரம்ப மூலதனாமாக 100 மில்லியன் ரூபாவினை குறித்த சட்டத்தின் பிரிவு 3 இன் கீழுள்ள 13ஆவது பிரிவின் (3)ஆவது உப பிரிவிற்கமைய ஈட்ட நிதியத்திலிருந்து பெறுதவற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இது தொடர்பில் வெகுசன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சமூக சேவை மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்த ஆகியோர் இணைந்து 2006.05.30ஆம் திகதி சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

அத்துடன் இத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கும் ஊடகவியலாளர்களை உள்வாங்குவதற்கும் தேவையான அனைத்து ஆலோசனைகளையும், சிபாரிசுகளையும் 1987ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் கழகம் (கூட்டிணைத்தல்) சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்திடமிருந்து பெற வேண்டும் எனவும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த திட்டத்தினை செயற்படுத்துவதற்கான ஒழுங்கு விதிகளைக் கொண்ட 1543/36ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் அப்போதைய சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் 2008.04.04ஆம் திகதி வெளியிடப்பட்டது.

இதன் பிரகாரம் 2008.05.01ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்த இந்த ஓய்வூதியத் திட்;டத்திற்கு 18 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட ஊடக நிறுவனங்களில் நிரந்தரமாகவும், ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றும் ஊடகவியலாளர்களும், சுயாதீன ஊடகவியலாளர்களும் விண்ணப்பிக்க முடியும்.

எனினும், "சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஊடகவியலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு ஒரு ஊடகவியலாளரின் பங்களிப்பு ஒப்பீட்டளவில் அதிகமாகின்றமையினால் இந்த ஓய்வூதியத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு போதுமான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறவில்லை" என ஊடக அமைச்சு தெரிவித்தது.

எனினும் இந்த செயற்த்திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதாக சமூக பாதுகாப்பு சபை தெரிவிக்கின்றது. இதன் பிரகாரம், "இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் ஊடாக விண்ணப்பித்த 45 பேர் இந்த ஓய்வூதிய திட்டத்தின் உறுப்பினர்களாக தற்போது உள்ளனர்" என சமூக பாதுகாப்பு சபை கூறுகின்றது.

எவ்வாறாயினும், இந்த ஓய்வூதிய திட்டம் தொடர்பில் தற்போதுள்ள இளம் ஊடகவியலாளர்களுக்கு தெரியாதுள்ளது. இத்திட்டம் தொடர்பில் போதிய விழிப்புணர்வினை மேற்கொள்ள குறித்த இரண்டு அரச நிறுவனங்களும் தவறிவிட்டமையே இதற்கான பிரதான காரணமாகும்.  

இதேவேளை, குறித்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஊடக ஆளணியினருக்கான சமூக பாதுகாப்பு நலனோம்பல் நிதியமொன்று உருவாக்கப்பட வேண்டும் என இந்த சட்டத்தின் 13(1) ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் குறித்த நிதியம் இதுவரை உருவாக்கப்படவுமில்லை, அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் ஆரம்ப மூலதனாமாக 100 மில்லியன் ரூபா, இந்த ஓய்வூதிய திட்டத்திற்கு கிடைக்கவுமில்லை என சமூக பாதுகாப்பு சபை தெரிவித்தது.

எவ்வாறாயினும், இந்த செயற்திட்டம் இதுவரை பயன்படுத்தப்படாமையினால் ஈட்ட நிதியிலிருந்து ஆரம்ப மூலதனமாக தேவைப்பட்ட  100 மில்லியன் எடுக்கப்படவில்லை என ஊடக அமைச்சு கூறுகின்றது.

இதேவேளை, குறித்த செயற்திட்டம் இதுவரை வெற்றியளிக்காமை தொடர்பில் இச்செயற்திட்டத்தின் பங்காளர்களில் ஒரு நிறுவனமான இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் சிரேஷ்ட செயற்குழு உறுப்பினரான லசந்த ருகுனுகேயினை தொடர்புகொண்டு வினவிய போது,

"இந்த ஓய்வூதியத் திட்டம் சுய தொழில் போன்றதொன்றாகும். இதனால் ஊடகவியலாளர்களிடமிருந்து சேகரிக்கப்படுகின்ற நிதியின் ஊடாகவே அவர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது.

இதன் காரணமாக ஊடகவியலாளர்கள் செலுத்த வேண்டிய பங்களிப்பு அதிகமாகும். எனினும், இலங்கையிலுள்ள ஊடகவியலாளர்களுக்கு கிடைக்கின்ற சம்பளம் மிகக் குறைவானதாகும்.

ஏற்கனவே ஊழியர் சேமலாப நிதியத்திற்கு சம்பளத்தின் எட்டு சதவீதத்தினை செலுத்தும் ஊடகவியாலாளரொருவர் ஓய்வூதிய திட்டத்திற்கும் அதிக நிதி செலுத்துகின்ற போது அவருடைய சம்பளத்தின் 25 சதவீதத்தினை நலன்புரி சேவைகளுக்காக செலளிக்க வேண்டியுள்ளது. இதுவொரு பாரிய சுமையாகும்.

எவ்வாறாயினும், 60 வயதின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு மிகக் குறைந்தளவிலேயே ஓய்வூதியம் கிடைக்கின்றது. அத்துடன், இந்த செயற்திட்டத்திற்காக அரசாங்கம் உறுதியளித்த தொகையினையும் வழங்கவில்லை.

இவ்வாறன காரணங்களினால் ஊடகவியலாளர்கள் இந்த செயற்திட்டத்தில்  அக்கறை செலுத்தவில்லை. அதேவேளை, தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்கத்தினால் இந்த ஓய்வூதிய திட்டத்திற்கு நிதி வழங்குவதும் மிகக் கடினமாகும்.   

இந்த திட்டத்தினை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கு ஊடக அமைச்சு மற்றும் சமூக திணைக்களம் ஆகியவற்றுடன் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகள் எதுவும் வெற்றியளிக்கவில்லை.

இந்த ஓய்வூதியத்திட்டத்தினை ஆயுள் காப்புறுதி செயற்திட்டமாக மாற்றுவதே சிறந்ததாகும்.  இதனால், ஓய்வூதியத்தில் கிடைக்கும் நிதியை விட அதிக தொகை 60 வயதனாவுடன் ஊடகவியலாளர்களுக்கு கிடைக்கும். அத்துடன் ஊடகவியாளார்களின் உபகரணங்களுக்கான காப்புறுதியினையும் இதன் ஊடாக மேற்கொள்ள முடியும்" என்றார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த ருஹுனுகே கூறுவது போன்று இந்த ஓய்வூதிய திட்டத்தினை வினைத்திறனான செயற்திட்டமொன்றாக மாற்றிய அமைக்க வேண்டியது ஊடக அமைச்சின் முழுப் பொறுப்பாகும்.

இது விடயத்தில் தற்போதைய ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன அதிக கவனம் செலுத்தி ஊடகவியலாளர்களின் எதிர்கால நலனுக்காக சிறப்பான செயற்திட்டமொன்றை அறிவிக்க வேண்டும்.

நன்றி - விடியல் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.