சக்தி, சிரச, நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனத்திற்கு சொந்தமான கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தலைவர் சசி ராஜமகேந்திரனிடம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், சுமார் 8 மணி நேர விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக சசி ராஜமகேந்திரனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக கடமையாற்றிய தருணத்தில், கடந்த மாதம் 9ம் திகதி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அவரது பிரத்தியேக வீட்டை தீக்கிரையாக்கியிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், ஜனாதிபதியிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக கடந்த செவ்வாய்கிழமை முற்பகல் 10 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைத் தந்த சசி ராஜமகேந்திரனிடம், மாலை 6.30 வரை விசாரணைகள் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

குறித்த தினத்தில் நியூஸ் பெஸ்ட் ஒளிபரப்பு செய்த நேரடி ஒளிபரப்பில், ரணில் விக்ரமசிங்கவின் வீடு தொடர்பில் குறிப்பிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பிலே விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.