இப்போதெல்லாம் திருமணமாகி ஒரு வருடத்துக்குள் கணவன், மனைவிக்கு இடையே ஒரு வெறுமை ஏற்பட்டுவிடுகிறது. சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப் போன்ற விஷயங்கள் மனிதர்களிடமிருந்து நம்மை பிரித்துவிட்டன. ஓர் இன்பத்தையோ துன்பத்தையோ முழுமையாக, உணர்வுபூர்வமாக அனுபவிக்கவிடாமல் அடுத்தடுத்து மனதை ஆக்கிரமிப்பு செய்யக்கூடிய விஷயங்கள் உருவாகிவிட்டன.

கணவனோ மனைவியோ ஒருவருக்கு ஒருவர் கட்டாயத் தேவை இல்லை என்ற நிலைமை உருவாகிவிட்டது. ஒருவருக்கொருவர் கொடுக்கக்கூடிய விஷயங்கள் வெவ்வேறு நபர்களிடமிருந்து வெவ்வேறு வடிவத்தில் அவர்களுக்குக் கிடைக்கிறது.

 என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் கணவன்- மனைவி ஒருவருக்கு ஒருவர் அந்யோன்யமானவராக ஆக என்ன செய்யலாம் என்பதற்கான சிறுசிறு யுத்திகளாக இவற்றைச் கூறலாம்.

1.  யாராவது ஒருவர் பாடுவதில் திறமையானவராக இருக்கலாம். அவர் அதிக ராகமாகப் பாடி மற்றவருக்கு தாழ்வுமனப்பான்மையை உருவாக்கிவிடக் கூடாது. ஒரு மனிதனுக்கு அவன் இசைக்குரலைக் கேட்கப் பிடிக்கும். அதற்கொரு ரசிகர் இருந்தால் இன்னும் பிடிக்கும். இதுதான் இதற்குப் பின்னால் உள்ள உளவியல். கணவரும் மனைவியும் இப்படிப் பாடும்போது நிச்சயம் மனம் ஒன்றிணையும். இருவருக்கும் அது ஒரு நல்ல பொழுதுபோக்காகவும் அமையும். மனம் ஒருவரை ஒருவர் தேடும்.

2. பதற்றப்படும் சின்ன விஷயங்கள் பற்றியும் தெரிந்துகொண்டு அதைச் செய்யாமல் இருங்கள். 'உன் உணர்வுகளை இப்படி மதிக்கிறேன்' என்பதை வெளிக்காட்டியும் விடுங்கள்.

3. கணவருக்கும் மனைவிக்கும் ஒருவரிடம் ஒருவர் அவரவர் சிறுவயது, பள்ளி, கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆசையிருக்கும். பல நேரம் சொன்ன சம்பவங்களையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்போம். நமக்கும் தெரியும், பார்டனர் இதை ஏற்கெனவே நம்மிடம் பகிர்ந்திருக்கிறார் என்று. இருந்தாலும் துணை அதைச் சொல்ல ஆசைப்படும்போது ஆர்வமாகக் கேட்க வேண்டும். 

4. சின்னச் சின்ன விஷயங்களில் உங்களுக்கு இருக்கும் பயத்தை துணையிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

5. ஒரு வயதுக் குழந்தையை மடியில் போட்டு எப்படி கூச்சமில்லாமல் கொஞ்சுவீர்கள்... அப்படி உங்கள் துணையை உங்கள் மடியில் வைத்து அன்பாக கொஞ்சுங்கள். கொஞ்சுவதென்றால் அன்பான வார்த்தைகளை ஆங்காங்கே பன்னீர் தெளிப்பது போல் தெளிப்பது இல்லை. ஆள் மனதில் இருந்து வர வேண்டும்.

6. துணை தனது எதிர்பாலின நட்பைப் பற்றி பேசும்போது அதைக் காதுகொடுத்துக் கேளுங்கள். மனைவி தன் தோழன் பற்றியோ, கணவர் தன் தோழி பற்றியோ  பேசும்போது அவர் தன் துணையின் ரியாக்‌ஷனை கூர்ந்து கவனிப்பார். 

 'இவள்/ இவன் நாம் சொல்வதை சரியான நோக்கத்தில் எடுத்துக் கொள்கிறானா/கொள்கின்றாளா.... அல்லது நாம் பேசுவது பிடிக்கவில்லையா' என்று பார்ப்பார். 

அப்போது கேட்பவர் எரிச்சலான அல்லது சலிப்பான முகபாவனையை வெளிப்படுத்தினால் சுருண்டுவிடுவார். 

அதற்கு இடம் கொடுக்காமல், அவர் பேசுவதை ஆர்வமாகக் கேளுங்கள், சிரியுங்கள். ஏன் தேவையில்லாத விஷயத்த எல்லாம்  டிஸ்கஸ் பண்ற என்று சொல்லிவிட கூடாது. கணவன், மனைவி இருவருக்கும் பக்குவம் இருக்கும். எனவே, துணைக்கு யாரிடம் எப்படிப் பழக வேண்டும் என்று நிச்சயம் தெரிந்திருக்கும் என்பதான நம்பிக்கையிலேயே வாழ்க்கையை கொண்டு செலுத்துங்கள். நீங்கள் துணைக்கு சுவாரஸ்மானவராக நிச்சயம் தெரிவீர்கள்.

7. துணையின் சிறுசிறு அவமானங்களை 'பிறகு' பேசுங்கள். இந்த 'பிறகு' என்ற வார்த்தை முக்கியமானது. மனைவியும் கணவரும் ஒரு கடைக்கு போயிருப்பீர்கள். கணவருக்கும் கடையில் உள்ளவருக்கும் சண்டை வருகிறது. கணவரை ஏதோ திட்டிவிடுகிறார்கள். கணவருக்கு அவமானம். சம்பவம் முடிந்த பிறகு அது பற்றியே மனைவியிடம் பேசிக் கொண்டு வருவார். 'ஆமா நீங்க செய்ததுதான் சரி. அவன் தப்பா நடந்துகிட்டான்' என்றுதான் மனைவி சொல்ல வேண்டும். துணை சொல்வதை காது கொடுத்து கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அவர் மனக்குமைச்சலை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும். பிறகு ஒருநாள் அந்தப் பதற்றத்தில் இருந்து துணை மீண்ட பிறகு அந்தச் சம்பவம் பற்றி ஆலோசித்து, யார் மீது தவறு என்று துணைக்கு புரியும் படியாக கூற வேண்டும்.

அந்தச் சுழ்நிலையை எப்படி எதிர்கொண்டிருக்கலாம் என்று பேசலாம்.  இந்த ‘பிறகு’ பேசுவது ஆண், பெண் அன்பின் நெருக்கத்தை அதிகரிக்கும்.

8. சந்தர்ப்பம் கிடைக்கும்போது ஜோடியாக ஓர் இயற்கையை ரசித்து அமர்ந்து பேசிக்கொண்டிருக்கலாம். பெரிய மலையோ, பெரிய ஆறோ, பெரிய அணையோ, பெரிய நட்சத்திரக் கூட்டத்தை பார்த்தபடியோ இருக்கலாம். கடலைப் பார்த்து அமர்ந்து பேசுவது மிகச் சிறந்த விஷயம். ஒன்றாக அமர்ந்து இயற்கையை ரசிப்பது போன்று பிரியத்தை வளர்க்கு விஷயம் கிடையவே கிடையாது.  துணையோடு அடிக்கடி தனியாக கடற்கரைக்குச் சென்று பாருங்கள். மாற்றம் உணர்வீர்கள்.

9. அன்றாட வாழ்க்கையில் உங்கள் துணை தூங்குவதை ஒரளவுக்கு கண்காணித்துக்கொண்டே இருங்கள். அவர் சரிவரத் தூக்கமில்லாமல் அரைகுறையாகவோ, அல்லது உறங்காமலே இருக்கலாம். ஏதோ ஒரு வெறுமை அவர்கள் மனதில் இருக்கலாம். காலையில் நல்ல மூடில் இருக்கும்போது, 'ஏதாச்சும் வெறுமையான ஃபீல்ல இருக்கீங்களா?' என்று பேசலாம். கேட்டுவிட்டு துணை அது பற்றி பேசினால் கேட்டுக்கொள்ளுங்கள். உண்மையான காரணத்தை மறைத்து வேறு ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லலாம். அதையும் நம்புவதாகக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுவே துணைக்கு மிகுந்த மனநிம்மதியைக் கொடுக்கும். 'வார்த்தையால் விளக்க முடியாத நம் வெறுமையைக் கண்டு கவலைப்பட்டு அக்கறைப்பட ஒருத்தி இருக்கிறாள்' என்ற உணர்வே மிகுந்த பிரியத்தைக் கொடுக்கும்.

10. துணையின் இன்பமான பொழுதுபோக்கை எப்போதும் நக்கல் செய்யாதீர்கள். 'ஃபேஸ்புக்ல எழுதுறது ஒரு வேலையா? அதுக்கு நாலு பேர் சும்மானாலும் லைக் போடுவான்' என்று சொல்லிவிடாதீர்கள். 'மெஹா சீரியலில் என்ன இருக்கு? இவ்வளவு அறிவா பேசுற அதைப் போய் பாத்துகிட்டிருக்க' என்று சொல்லாதீர்கள். அவரவரது பொழுதுபோக்கு அவரவருக்கு பிடித்தமானதுதான். பிடித்த காரணத்தினாலேயே அவர்கள் அதில் ஈடுபடுகிறார்கள். 

குடும்ப வாழ்க்கையில், பொருளாதார ரீதியாக ஒரு திட்டமிடல் மனதுக்குள் ஒடிக்கொண்டே இருக்கும். அதேபோல, பரஸ்பரம் ஒருவரை ஒருவர் எப்படி ஈர்க்க வேண்டும் என்ற திட்டமிடலும் ஒடிக்கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு காலத்தில் பெண்ணை அடிமையாக வீட்டுக்குள்ளே வைத்திருந்த சமூகநிலை இருந்தது. பின்னர், ஆணைக் கண்காணிக்கும் சமூகநிலை இருந்தது. ஒழுக்கம் ஒழுக்கம் என்றதொரு வெற்றுக் கற்பிதம் சமூகத்தில் இருந்தது. இவற்றால் ஆண், பெண் திருமணம் செய்துகொண்டாலே, பிடித்திருக்கிறதோ பிடிக்கவில்லையோ பிரியத்தோடு இருப்பதாகக் காட்டிக்கொண்டார்கள்.

ஆனால் இக்காலத்தில் இந்த சமூகநிலைகள் அனைத்திலும் மாற்றம் நேர்ந்திருக்கிறது. பெண் வீட்டை விட்டு வெளியே வந்து சுதந்திரமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டாள். ஆணை சமூகம் கண்காணிப்பதில்லை. 

பாத்திமா நலீபா
உளவியல் எழுத்தாளர் ✍️


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.