♦பொதுத் தேர்தல் ஒன்றுதான், இனி வெளியேறும் வழி (way-out).

✨சமகால அரசியல் நகர்வுகள் குறித்த ஒரு அலசல்

(சிராஜ் மஷ்ஹூர்)

'அரகலயவின்' - மக்கள் போராட்டத்தின்- தந்திரோபாய பின்வாங்கல் (tactical withdrawal), இப்போதைய சூழலைப் பொறுத்தவரை அவசியம்தான். அதை காலப்பொருத்தமான நகர்வாகவே பார்க்க வேண்டும்.

அத்தோடு, ஆபத்தான நிகழ்ச்சி நிரல் கொண்ட சக்திகள், அரகலயவினுள் ஊடுருவுவதைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையும் இருந்தது.

'நாடு கொஞ்சம் மூச்சு வாங்க வேண்டும்- ரணிலுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்' என்ற அபிப்பிராயம் பரவலாக உள்ள நிலையில், இதை அனுசரித்துச் செல்வதே நடைமுறை யதார்த்தம். இதை நன்கு புரிந்துகொண்ட, அரகலய இளைஞர்- யுவதியருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஆயினும், இதனால் பெரிய மாற்றங்கள் எதுவும் சாத்தியமில்லை. ரணிலின் இந்த இடைக்கால ஆட்சி, கஷ்டங்களாலும் நெருக்கடிகளாலும் பலமுனை சவால்களாலும் சூழப்பட்டது. 

அது போகட்டும். இனி அடுத்து என்ன என்பதுதான் கேள்வி. பொதுத் தேர்தலை நோக்கிப் போவதுதான், இப்போதைக்கு இதிலிருந்து வெளியேறவுள்ள ஆகச்சிறந்த வழி (way-out) எனலாம்.

மொட்டுக் கட்சியின் அதிக இருப்புள்ள நாடாளுமன்றத்தை வைத்துக் கொண்டு, ரணிலால் பெரியளவில் முன்னகர முடியாதுள்ளது. அவர்களது தயவில் தங்கியிருப்பதால், பன்னாட்டு நிறுவனங்களின் நிதி ஆதரவு, பெருமளவுக்கு அவரது அரசாங்கத்திற்குக் கிடைக்காத இக்கட்டான நிலையே இதுவரை தொடர்கிறது.

மக்கள் ஆதரவை இழந்த அரசாங்கத்தை, பன்னாட்டு நிறுவனங்களும் எச்சரிக்கையோடுதான் அணுகுகின்றன. இதற்குப் பின்னே புவிசார் அரசியல் அழுத்தங்களும் நலன்களும் உள்ளன.

அதனால்தான் ஸ்திரமான அரசாங்கமொன்றை (Stable Government) நிறுவுவது பற்றிய கதைகள் மேலெழுகின்றன. அனைத்துக் கட்சி அரசாங்கம் என்ற பருப்புதான் இனி வேகும் என்ற நிலை.

நடைமுறை அரசியலை நகர்த்த, 

தனக்குச் சாதகமான மக்கள் பிரதிநிதிகள் வேண்டும் என ரணில் யோசிக்கிறார். இப்போதைக்கு அவருக்கு ஆதரவான நேரடி மக்கள் பிரதிநிதிகள் மிகவும் குறைவு. அவரது திரிசங்கு நிலை நன்கு புரிகிறது.

ரணிலைப் பொறுத்தவரை சிறந்த தெரிவு, மொட்டுக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களைத் கலைத்துவிட்டு புதிய தேர்தலை நடத்துவதுதான். அப்போதுதான் புதிய ஐ.தே.க உள்ளூராட்சி மன்றத்தினர் வருவர். இதுதான் ரணிலின் எதிர்பார்ப்பு.

ஏற்கனவே உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் முடிவடைந்து, ஒரு வருட நீடிப்பில்தான் அவை இருக்கின்றன. இதைக் கலைக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்குத்தான் உள்ளது. தினேஷ் குணவர்த்தனதான் அந்த அமைச்சை முன்னரும் கையில் வைத்திருந்தார். பிரதமரானதன் பின்னரும், அவரது பொறுப்பிலேயே அவ்வமைச்சு உள்ளது. இது கவனத்திற்குரியது.

உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டால், தமது உள்ளூர் மட்ட பலமும் அதிகாரமும் இழக்கப்பட்டு விடும் என, மொட்டுக் கட்சிக்காரர்கள் யோசிப்பது தெளிவாகத் தெரிகிறது. போஸ்டர் ஒட்டுவது போன்ற அடிமட்டப் பணிகளை முன்னெடுக்கும் கட்சித் தொண்டர் அணியொன்று இல்லாமல், கட்சியை முன்னகர்த்த முடியாது என்று அவர்கள் சரியாகவே கணித்து வைத்துள்ளனர். இதனால், உள்ளூராட்சி மன்றங்கள் இப்போதைக்கு கலைக்கப்படாத நிலையே தொடரும் போல் தெரிகிறது.

அதேபோல மாகாண ஆளுனர்களை ராஜினாமா செய்யுமாறு ரணில் கேட்டிருப்பதாகவும் கதைகள் அடிபடுகின்றன. ஜனாதிபதியின் நேரடி அதிகாரத்தின் கீழ்தான் ஆளுனர்கள் வருகின்றனர். மாகாண சபைகள் இல்லாத நிலையில், ஆளுனர்களின் ஒத்துழைப்பு ஜனாதிபதிக்கு மிகமிக அவசியம். ஆனால், ரணிலுக்கு சாதகமான ஆளுனர்கள் வருவதை, மொட்டுக்காரர்கள் இப்போதைக்கு விரும்பவில்லை என்றே தெரிகிறது. அதனால் ஆளுனர்களை ராஜினாமா செய்ய வேண்டாம் என மொட்டுத் தரப்பு கூறியுள்ளதாகவும் உள்வட்டார செய்திகள் உலவுகின்றன.

பின்னர் ஒரு சமரசம் ஏற்பட்டுள்தாகவும், ஐம்பதுக்கு ஐம்பது என்று உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவும் கதைகள் உள்ளன. அதாவது ரணில், மொட்டு தரப்பு ஒன்பது ஆளுனர்களையும், ஐந்துக்கு: நாலு என பரஸ்பரம் பிரித்துக் கொள்வது.

எது எப்படியோ அடுத்த ஆறு மாதங்களுக்கு, நாடு இப்படியான இழுபறியிலும் அதிகாரக் கயிறிழுப்பிலுமே நகரும். அதை நன்குணர்ந்ததால்தான், 6 மாதம் கடும் நெருக்கடி இருக்கும் என்று ரணில் ஆரூடம் கூறி வருகிறார்.

ஆறு மாதம் கடந்த பின், நாடாளுமன்றம் பதவிக்கு வந்து இரண்டரை வருடங்கள் கழிந்து விடும். அதன் பின்னர், அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குத்தான் உள்ளது. அதற்குத்தான் ரணில் 6 மாதக் கதை சொல்லி வருகிறார்.

அநேகமாக அடுத்த ஆண்டு மார்ச்சின் பின்னர் பொதுத் தேர்தல் ஒன்றை எதிர்பார்க்கலாம்.

புதிய பாராளுமன்றத் தேர்தல் ஒன்று வருமாயின், அதில் ரணிலின் ஐ.தே.க மற்றும் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன ஒன்றிணையும் வாய்ப்புகள் மிக அதிகம். சஜித் இதற்கு உடன்பட்டால் அவரது கட்சி ரணிலுடன் இணையும். உடன்படாவிட்டால் சஜித் கட்சி உடைக்கப்படும். 

புதிய நாடாளுமன்றத்தில் தன் பங்கை அதிகரிப்பதே ரணிலின் திட்டம். 

அடுத்த நாடாளுமன்றத்தில் அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் பலமும் அதிகரிக்கும். 

மொட்டு கட்சி மேலும் பலவீனமடையும். அதுவும் இரண்டாகப் பிளவுபட வாய்ப்புகள் அதிகம். சுதந்திரக் கட்சி பற்றி இப்போதே சொல்வது சிரமம். பெரும்பாலும் மொட்டின் பிளவுபட்ட அணியோடு அவர்கள் கைகோர்ப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

ஆக, பொதுத் தேர்தல்தான் இனி சாத்தியமான வழியாக இருக்கும். ரணிலுக்கு அதனால் நன்மை அதிகம். அவரது கையில் அதிகாரமும் இருப்பதால், அதற்கான வாய்ப்புகள்  அதிகளவில் உள்ளன.

புதிய நாடாளுமன்றத்தில், கள்வர் கூட்டத்தை மீண்டும் தெரிவு செய்யாமல், நேர்மையான- நாட்டின் மீது உண்மையான நேசமும் பற்றுறுதியும் கொண்டோரைத் தெரிவு செய்வது மக்களின் கைகளில்தான் தங்கியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.