றிப்தி அலி

கலைக்கப்பட்டுள்ள மேல் மாகாண சபையின் தவிசாளருக்கும் அவருடைய பிரத்தியேக உத்தியோகத்தர்களுக்கும் மாகாண சபையினால் மாதாந்தம் வழங்கப்படுகின்ற கொடுப்பனவு தொடர்பான முழு விபரத்தினையும் வழங்குமாறு தகவலறியும் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

மேல் மாகாண சபையின் பேரவைச் செயலகத்திற்கு இந்த உத்தரவு கடந்த புதன்கிழமை (10) ஆணைக்குழுவினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1987ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் 7ஆவது பிரிவில் "மாகாண சபை கலைக்கப்படும் போதெல்லாம், கலைத்தலின் பின்னர் சபையின் முதலாவது கூட்டத்துக்கு நேர்முன்னர் வரை தவிசாளர் தமது பதவியை வறிதாக்குதலாகாது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சரத்திற்கமைய, கடந்த பல வருடங்களாக கலைக்கப்பட்ட மாகாண சபைகளின் தவிசாளர்கள் தற்போது வரை பதவியில் உள்ளனர்.

இதன் காரணமாக நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும்; கலைக்கப்பட்டுள்ள மாகாண சபையின் தவிசாளர்களுக்கும் அவர்களுடைய பிரத்தியேக உத்தியோகத்தர்களுக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை அரசு செலவளிக்கின்றது.

இந்த நிதித் தொகை தொடர்பில் ஆராயும் நோக்கில் நாட்டிலுள்ள ஒன்பது மாகாண சபைகளினதும் பேரவைச் செயலகங்களிற்கு கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி தகவலறியும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதில் கலைக்கப்பட்ட மாகாண சபைகளின் தவிசாளர்களுக்கும் அவர்களுடைய பிரத்தியேக உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்படுகின்ற சம்பளம், எரிபொருள் கொடுப்பனவு, வாகன வசதி, தொலைபேசி கொடுப்பனவு தொடர்பான விபரங்கள் கோரப்பட்டிருந்தன.

இந்தத் தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு எட்டு மாகாண சபைகள் பதில் வழங்கிய நிலையில் மேல் மாகாண சபை மாத்திரம் கலைக்கப்பட்ட மாகாண சபையின் தவிசாளர் மற்றும் அவரது பிரத்தியேக உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுகின்ற சம்பள விபரங்களை வழங்க மறுத்து விட்டது.

"2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் சட்டத்தின் 5ஆவது பிரிவின் 1ஆவது உப பிரிவின் (அ) மற்றும் (ஓ) ஆகிய பிரிவின் கீழ் இந்த தகவல்களை வழங்க முடியாது" என மேல் மாகாண சபையின் பேரவைச் செயலகத்தின் தகவல் அதிகாரியும், நிர்வாக உத்தியோகத்தருமான எச்.எச்.ஏ.என். நெலும்மல்லியினால் கடந்த வருடம் நவம்பர் 16ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

"தகவலானது, பாரிய பகிரங்க அக்கறை அத்தகைய தகவலின் வெளிவிடுகையை நீதி முறைப்படுத்தினாலொழிய அல்லது சம்பந்தப்பட்ட ஆள் அத்தகைய வெளிவிடுகைக்கு எழுத்தில் சம்மதமளித்திருந்தாலொழிய, ஏதேனும் பகிரங்க தொழிற்பாடு அல்லது அக்கறைக்கு தொடர்பல்லாததாகவுள்ள அல்லது தனியாளின் அந்தரங்கத் தன்மையின் அனுமதிக்கப்படாத வரம்பு மீறலைச் செய்யக்கூடிய தனிப்பட்ட தகவலின் வெளிவிடுகையுடன் தொடர்புறுகின்றவிடத்து" தகவலறிவதற்கான உரிமை மறுக்கப்படலாம் என இச்சட்டத்தின் 5ஆவது பிரிவின் 1ஆவது உப பிரிவின் (அ)வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று, "அத்தகைய தகவலின் வெளிவிடுகையானது, பாராளுமன்றத்தின் அல்லது சட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டவாறாக மாகாண சபையொன்றின் சிறப்புரிமைகளின் மீறலாக உள்ளவிடத்து" தகவலறிவதற்கான உரிமை மறுக்கப்படலாம் குறித்த சட்டத்தின் 5 ஆவது பிரிவின் 1ஆவது உப பிரிவின் (ஓ)வில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த நிராகரிப்பு தொடர்பில் மேல் மாகாண சபையின் பேரவைச் செயலகத்தின் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியான பேரவைச் செயலாளர் யூ.வீ. ரோஹன ராஜபக்ஷவிடம் கடந்த வருடம் டிசம்பர் 02ஆம் திகதி மேன்முறையீடு செய்யப்பட்டது.

எனினும், மாகாண சபையின் பேரவைச் செயலாளரினால் கடந்த வருடம் டிசம்பர் 8ஆம் திகதி குறித்த மேன்முறையீடும் நிராகரிக்கப்பட்டது. இந்த நிரகரிப்பு தொடர்பில் கடந்த வருடம் டிசம்பர் 22ஆம் திகதி தகவலறியும் ஆணைக்குழுவில் மேன் முறையீடு மேற்கொள்ளப்பட்டது.  

குறித்த மேன் முறையீடு தொடர்பான விசாரணை கடந்த புதன்கிழமை (10) கொழும்பு – 07, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலுள்ள தகவலறியும் ஆணைக்குழுவில் நடைபெற்றது.

தகவறியும் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேயரத்ன தலைமையில் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹினி வல்கம், சட்டத்தரணி கிஷாலி பிண்டோ ஜயவர்த்த மற்றும் சட்டத்தரணி ஜகத் லியனாராச்சி ஆகியோர் முன்னிலையில் இந்த மேன்முறையீடு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தகவலறியும் சட்டத்தின் 5ஆவது பிரிவின் 1ஆவது உப பிரிவின் (அ) மற்றும் (ஓ) ஆகியற்றில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலறிவதற்கான உரிமையினை மறுப்பதற்கான சிறப்பு உரிமையினை பயன்படுத்தி மேல் மாகாண சபையின் தவிசாளருக்கும் அவருடைய பிரத்தியேக உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்படுகின்ற கொடுப்பனவு தொடர்பான விபரங்களை வழங்காதிருக்க மாகாண சபையின் பேரவைச் செயலகம் முயற்சிக்கின்ற விடயம் அவதானிக்கப்படுவதாக தகவலறியும் ஆணைக்குழு இதன்போது தெரிவித்தது.

அத்துடன்,  கோரப்பட்ட தகவல்களை வழங்கும் விடயத்தில் மேல் மாகாண சபையின் பேரவைச் செயலகம் செயற்பட்ட விதம் மிகவும் வருத்தத்தினை ஏற்படுத்துகின்றது எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டது.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மேற்குறிப்பிட்ட சரத்துக்களின் பிரகாரம் தகவல்களை வழங்காமல் நிராகரிப்பதற்கான எந்த அதிகாரமும் மேல் மாகாண சபையின் பேரவைச் செயலகத்திற்கில்லை எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியது.

இதனால், மேல் மாகாண சபையின் பேரவைச் செயலகத்தின் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியான சபைச் செயலாளரினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினை ஆணைக்குழு நிராகரிப்பதுடன் விண்ணப்பதாரியினால் வேண்டப்பட்ட தகவல்களை எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறும் ஆணைக்குழு உத்தரவிட்டது.  அத்துடன் குறித்த தகவலின் பிரதியை ஆணைக்குழுவிற்கும் வழங்குமாறு இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, மேற்குறிப்பிடப்பட்ட திகதிக்கு முன்னர் இத்தகவலை வழங்க மேல் மாகாண சபையின் பேரவைச் செயலகம் தவறும் பட்சத்தில் 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் சட்டத்தின் 39ஆவது பிரிவிற்கமைய நீதவான் நீதிமன்றின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஆணைக்குழு   தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


 


 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.