முஸ்லிம் சமூகத்தின் மீது கழுகுப் பார்வை

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கீம்

 கொழும்பு,கொள்ளுப்பிட்டியில் வார இறுதியில் (28) இடம் பெற்ற " இளம் தலைமைத்துவ ஆளுமை"என்ற  நூல் வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை 


(தொகுப்பு :எம்.என்.எம்.யஸீர் அறபாத் - ஓட்டமாவடி) 

ஜனநாயக வரலாற்றில் மிக மோசமான ஒரு கறைபடிந்த பக்கமாக இருக்கின்ற நிகழ்வான  மடவளை மண்ணின் இளைஞர்களுக்கு  அவர்கள் என்னுடைய அரசியலோடு தொடர்புபட்டிருந்த காரணத்தினால் நேர்ந்த அந்தப் படுகொலைச் சம்பவம் என்றுமே எங்களுடைய நினைவைவிட்டகலாத சம்பவமாகும்.

  அந்த சம்பவம் நடந்த பின்னணியில்,  இந்த நிகழ்விற்குத் தலைமை தாங்கும்  ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் கண்டி வீட்டில்  வன்முறையிலிருந்து தப்புவதற்காக  நான் தஞ்சமடை ந்திருந்தேன்.அது அப்படியான பயங்கரமானதொரு கால கட்டமாக  இருந்தது. 

சஹீட் எம் றிஸ்மியின் பங்களிப்பு மடவளையோடு சம்பந்தப்பட்ட என்னுடைய சொந்த சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையில் ஓர் அம்சமாக  இருந்தது. இன்று அவரது தலைமையிலான வை எம் எம் ஏ நிறுவனம்  நாடு தழுவிய கிளைகளைக் கொண்ட பாரந்துவிரிந்த அமைப்பாக நிறைய சமூகத் தொண்டுகளை மாத்திரமல்லாது, சமுதாய பிரச்சனைகளுக்கான ஆக்கபூர்வமான தீர்வுகளைக் கொண்டுவருவதற்கு சிவில்  அமைப்புகளையும்  அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைமைகளையும்  ஒன்றுசேர்த்து  பாரிய பங்களிப்பைச் செய்துவருகின்றது. 

அந்த இயக்கத்தின்  ஆரம்ப காலத்தில் என்னுடைய அன்புத் தந்தையார் என்.எம்.ஏ ,ரவூப் அதன்   உறுப்பினராக இருந்திருக்கிறார். மடவளை  வை எம் எம் ஏ  உடைய ஆரம்பகால பட்டியலில்  கூட்டங்களில் கலந்து கொண்டவர்களில்  அவரது பெயர்  செயலாளராக இடம் பெற்றிருக்கிறது. அது ஐம்பதுகளுக்கு முற்பட்ட காலம் என நினைக்கிறேன் .

எனவே, எனக்கும் ஏதோ ஒரு வகையில் இந்த இயக்கத்தோடு அப்படியான பூர்வீக தொடர்பு இருந்தாலும், இன்றும் அதன்   பங்களிப்பு ரிஸ்மி சஹீத்தின்  தலைமைத்துவ ஆளுமையின் கீழ் மகத்தானது.பல முக்கிய அம்சங்கள் சம்பந்தமான இந்த நூலை வாசிப்பதற்கு  இன்னும்  அவகாசம்  வாய்க்கவில்லை . அதன் உள்ளடக்கம் எப்படியிருந்தாலும் ,   இந்த நாட்டின் இளைஞர்களுடைய பங்களிப்பு மற்றும் அவர்களின் சமூக விழிப்புணர்ச்சி என்பனஇன்று சர்வதேசமயப்படுத்தப்பட்ட  விடயங்களாகிவிட்டன.

 அண்மைக்காலமாக நடந்து முடிந்திருக்கின்ற இந்த பெரிய சமூக எழுச்சியின் விளைவாக அதில் இளைஞர்கள்   எவ்வளவு ஆவேசமாக, ஆக்ரோஷமாக ஈடுபட்டார்கள் என்ற ஒரு விடயத்தில் பலர்  பார்வையாளராக இருந்திருக்கலாம், ஆனால் நிறையப் பேர் நேரடியாகப்போய் பங்கு கொள்ளுகிற ஒரு நிகழ்வாக அது மாறிவிட்டது. 

 அரசியல்வாதிகளாகிய எங்கள் எவருக்கும் அதில்  நெருக்கமான நேரடித் தொடர்புகள் எவையும் இருக்கவில்லை என பாராளுமன்றத்தில் கூட சொல்லியிருந்தேன், அவர்களும் அதை பெரிதாக விரும்பவுமில்லை, அதன் பிந்திய கட்டத்தில் அரசியல்வாதிகளுடன் தொடர்வுபட்டு அவர்களுடைய அனுசரணையைப் பெற்றுக் கொண்டார்கள், இருந்தாலும் இன்று நடப்பதை பார்க்கிற போது கவலையாகத்தான் இருக்கிறது. ஏனென்றால்  எதையும் ஒரு ஜனநாயக சமூகத்திற்குள் அதற்கான சட்டநடவடிக்கைகள் என்று வருகின்ற போது வரம்புமீறி அடக்குமுறையாகப்போனால் சட்டத்தின் ஆட்சி - Rule of Law என்ற என்ற விடயத்தைக் கேள்விக்குட்படுத்துவதாகிவிடும்.அவ்வாறான  சம்பவங்கள் மிகவும் வருத்தத்தைத் தருகிறன.. இது சம்பந்தமாக நிறைய நாங்கள் பத்திரிகைகளில் கண்டனங்களைப் பார்க்கிறோம் . சகல சமூகத்தவர் மத்தியிலும் அநேகர்   அதுபற்றிப் பேசுகிறார்கள் இந்த வன்முறை என்பதை கட்டுப்படுத்துவதை பொறுத்தவரையிலும் கூட சட்டத்தை அமுல்படுத்துவது என்பதும், சட்டத்தையும்,ஒழுங்கையும் நிலைநாட்டுவது என்பதும் இரண்டு முக்கியமான பிரச்சினை களாகும்.சட்டத்தை அமுல்படுத்துவது( Law Enforcement)  என்று ஒன்றிருக்கிறது அது ஒரு முக்கியமான விடயம்தான், ஒரு நாட்டில் மக்கள்  மத்தியில்  கட்டமைப்பைச் சரியாக வைத்துக் கொண்டிருப்பதற்கு சட்டத்தை அமுல்படுத்துவது ( Law enforcement) முக்கியமாகும்.அது குற்றங்களைத் தடுப்பதற்கான முக்கியமான செயல்முறையாகும். ஆனால்  , சட்டத்தையும்,ஒழுங்கையும் பேணுவது(Law and Order) என்பது மிகப் பெரிய சவாலுக்குரிய விடயமாகும்.  இந்த விவகாரத்தில்தான் ஒரு பெரிய அனர்த்தமே நடந்து முடிந்திருக்கிறது.  உடைமைச் சேதங்கள், பொருள் சேதங்கள்,உயிர்ச் சேதங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையே வீதியில் இழுத்துச் சென்று கொல்லப்படுகின்ற அளவிற்கு அந்த வன்முறை வெடித்துவிட்டது.

இந்த பின்னணியில் இவற்றையெல்லாம் ஒடுக்குவதற்கு பாவிக்கின்ற சட்டங்களில்  மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும்  என்ற ஒரு பரவலான கோரிக்கை இருந்து வருகிறது.

இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்ற விடயம் சம்பந்தமாக இன்று இருக்கின்ற மிகப் பெரிய பிரச்சினை அது துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்ற விவகாரம்தான். அது இன்று பரவலான விமர்சனங்களுக்கு மத்தியில்,   சர்வதேச ரீதியாகவும் அதுமாற்றியமைக்கப்படவேண்டும் கோரிக்கை வலுத்து வருகின்றது, 

 ஆனால், பயங்கரவாத தடைச் சட்டம்  இல்லாவிட்டால் தங்களுக்கு எவற்றையும் கட்டுப்படுத்தமுடியாது என்று குறிப்பாக பொலிஸாரும்,சட்டமா அதிபர் திணைக்களத்தினரும் கூறிவருகின்றனர். நாங்கள் அரசியல் மட்டத்தில் அதற்கான திருத்தங்களைக் கொண்டுவரப்போகின்ற போதெல்லாம் முட்டுக்கட்டை இடப்படுகின்றது. 'கடுமையான நடைமுறைகளை இதிலிருந்து அகற்றிவிடக்கூடாது. ஏன் என்றால் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு இது தேவை,பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கிவிடலாம் என்கின்றனர்.  பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தப்போய் பயங்கரவாதம் உருவாவதற்கு காரணமாகவும் இவ்வாறான சட்டங்கள் அமைந்துவிடுவதுமுண்டு. அது பற்றி அதிகம் கூறலாம். என்னைப் பொறுத்தமட்டில் அதனால் நிரபராதிகள் தண்டிக்கப்பட்டதும், குற்றம் செய்யாதவர்கள் கொலை செய்யப்பட்டதும்தான் நிறைய நடந்திருக்கின்றன.  அதே வேளை அது நிறைய ஊழல்களுக்கும் வழிவகுத்திருக்கிறது.அதுவும் சாதாரணமான -சாமான்யமான ஊழல்கள் அல்ல .அந்தச் சட்டத்தின் கீழ் ஆட்களை கைதுசெய்து பலவந்தமாக இலஞ்சம் பெறுகின்ற விடயங்களும் ஏராளமாக நடந்திருக்கின்றன.

இப்படியெல்லாம் இருக்கின்ற ஒரு சூழலில்தான் இவற்றையெல்லாம் ஒரு விமர்சனப் பார்வையோடு பார்க்க வேண்டியிருக்கிறது.ஏனென்றால் இந்த நாட்டில் சகல சமூகங்களுக்கு மத்தியிலும் பிரச்சனைகள் உருவாகிவிட்டன.

 கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரலில் நடந்த மோசமான நிகழ்வுகளின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீது  ஒரு கழுகுப் பார்வை இருந்து கொண்டேயிருக்கின்றது. இந்தப் பயங்கரவாதச் சட்டத்தை மீறி இப்போது ஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்தை மையப்படுத்திய  ஒரு வர்த்தமானியின் மூலம் தடைகளைக் கொண்டுவருகின்ற வகையில் சில அமைப்புகளைத் தடைசெய்கின்ற, தனிநபர்களை தடை செய்கின்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.இவை முழுக்க,முழுக்க சவாலுக்கு உட்படுத்தப்படவேண்டியவை.   

 அண்மையில் ஜனாதிபதி சட்டத்தரணி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.சுஹைர்  அதைப் பற்றி  ஒரு பெரிய விமர்சனத்தையும், கண்டனத்தையும் முன்வைத்திருந்தார்.   ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மற்றும் அவரது புதல்வர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசல் முஸ்தபா போன்றோர் கூட இது  சம்பந்தமாக வழக்குகள் பற்றிஆராய்ந்து வருகின்றனர்.இதை சவாலுக்கு உட்படுத்துவது சம்பந்தமாக,  ஏதோ ஒரு நோக்கத்திற்காக ஐக்கிய நாடுகள் சபை கொண்டுவந்த ஒரு பிரேரணையை அடிப்படையாகவைத்தும் அதனூடாகவிருக்கின்ற ஒரு சட்டத்தை அடிப்படையாக வைத்தும் இவ்வாறான அமைப்புகள் மற்றும்தனிநபர்களின் பெயர்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு, அவர்கள் மீது வரலாற்று ரீதியான பெரிய இழுக்கை ஏற்படுத்துகின்ற  விவகாரத்தில் எந்த பூர்வாங்க விசாரணையும் சரிவர நடைபெறாமலும்,அவர்களுக்கு அவ்வாறான தடையொன்றை ஏற்படுத்துவதற்கு எதிரான காரணங்களை முன்வைப்பதற்கான ஒரு வாய்ப்பைக் கொடுக்காமலும் அதைச் செய்வதென்பது மிகப் பெரிய படுபாதகமான ஒரு செயலாக இன்று பார்க்கப்படுகிறது.

அடுத்து வரும் நாட்களில் பாராளுமன்றத்திலும் இது சூடான விவாதமாக எங்களால் முன்வைக்கப்படலாம்.இருந்தாலும் இந்த விவகாரங்களை நாங்கள் ஆட்சியாளர்களோடு பேசி ,நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என்ற  அதேவேளை, நாட்டினுடைய இளைஞர்கள் மத்தியில் 

தோன்றியிருக்கின்ற  வன்முறைக் கலாசாரத்திற்கான காரணங்களைக் கண்டறிந்து,உரிய முறையில் அணுகப்பட வேண்டும்.அவர்களை ஜனநாயக நீரோட்டத்திற்குள் வைத்துக்கொண்டு, ஆர்பாட்டங்கள்,போராட்டங்கள் என்று வருகின்றபோது வரம்பு மீறிப் போகாமல் பார்த்துக் கொள்வதும் அவசியமாகும்.

அளவுக்கு மீறிய அடந்தேற்றமாக வும்,அடக்குமுறையாகவும் அது மாறிவிட்டால்  தொடர்ந்தும் இந்த நாட்டின் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவருகின்ற விடயமாக இருக்கமாட்டாது.  நியாயபூர்வமான காரணங்களை முன்வைத்து அது சம்பந்தமாகப் பேசவேண்டிய அவசியமிருக்கிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.