தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் நீண்ட நாட்களாக காணப்படும் வெற்றிடத்துக்கு ஏ.எம்.நஹியாவை நியமிப்பதற்கு பாராளுமன்ற பேரவை பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரை தொடர்பான தீர்மானம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. பாராளுமன்றப் பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று புதன்கிழமை (07) கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.
தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினராக முன்னர் செயற்பட்ட இவர், ஒய்வுபெற்ற இலங்கை நிர்வாக சேவை அதிகாரியுமாவார்.
பொதுநிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் எல்லை நிர்ணயக் குழுவிலும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் எல்லை நிர்ணயக் குழுவிலும் உறுப்பினராக பணியாற்றிய நஹியா, எல்லை நிர்ணய விவகாரங்களில் மிகுந்த அனுபவமுடையவர்.
அரச சேவையில் பணியாற்றிய காலத்தில் புனர்வாழ்வு பணிப்பாளர் நாயகமாகவும், மீனவர் வீடமைப்பு மற்றும் மீனவர் நலன் பணிப்பாளர் நாயகமாகவும், தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகராகவும், அதற்கு முதல் கொழும்பு ஸாஹிரா கல்லூரி உப அதிபராகவும், இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சின் தமிழ் அலுவல்கள் உதவிப் பணிப்பாளர் போன்ற பல முக்கிய பதவிகளை இவர் வகித்துள்ளார்.