⏩ வெளிநாட்டு இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து டொலர்களில் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான வசதிகள்....

⏩ டொலர் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு 10% தள்ளுபடி....

⏩ முறையான முறையில் வங்கிகள் மூலம் வெளிநாட்டுப் பணத்தை அனுப்பியவர்களுக்கு முன்னுரிமை....

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படும் நடுத்தர வருமான வீட்டுத் திட்டங்களில் டொலர்களைக் கொண்டு வீடுகளை வாங்குவோருக்கு 10% தள்ளுபடி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இந்த வீடுகளை டொலர்கள் மூலம் கொள்வனவு செய்வதற்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினைக்குத் தீர்வாக இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இரண்டு நடுத்தர வருமான வீட்டுத் தொகுதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. நிறைவடைந்த பொரளை ஓவல் வியூ வீடமைப்புத் திட்டம் 608 வீட்டுத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. அங்கொட லேக் ரெஸ்ட் திட்டம் 500 வீட்டுத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

தற்போது மேலும் 12 நடுத்தர வருமான வீட்டுத் திட்டங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட வீட்டுத் தேவை 3,667 வீடுகள் ஆகும். இந்த வீடுகளை இலங்கையர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்கள் கொள்வனவு செய்வதற்கு வசதியாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவ சபை அனுமதி வழங்கியுள்ளது. இந்த வீடுகளை டொலர்கள்மூலம் பெற்றுக்கொள்வதில் முறையான முறையில் வங்கிகள் ஊடாக வெளிநாட்டுப் பணத்தை அனுப்பிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் திட்டமிடப்பட்ட புதிய நடுத்தர வருமானத் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள போதிலும், அவற்றை விரைவில் மீள ஆரம்பிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார். கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் குறைந்த வசதி கொண்ட குடியேற்றத் திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்த மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திறைசேரிக்கு சுமை ஏற்படாமல் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.

ஆசிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கியின் கடன் உதவியுடன் 4,074 அடுக்குமாடி குடியிருப்புகளின் நிர்மாணப் பணிகள் தொடர்கிறது. சீனாவிடமிருந்து மானியமாக பெறப்பட்ட 552 மில்லியன் யுவான் தொகையைப் பயன்படுத்தி குறைந்த வருமானம் கொண்ட குடியிருப்புகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். இதன் கீழ் பேலியகொட, மொரட்டுவ, தெமட்டகொட, மஹரகம மற்றும் கொட்டாவ ஆகிய பகுதிகளில் 2000 வீட்டு அலகுகளுடன் கூடிய 05 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.


முனீரா அபூபக்கர்

2022.09.05

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.