பாடசாலை மாணவர்களுக்கு செலவிடப்படும் பகல் உணவுக்கான 60 ரூபாவை 150 ரூபா வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சபை முதல்வரும் கல்வியமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 

கல்வி அமைச்சை நான் பொறுப்பேற்கும் போது பாடசாலை மாணவர் ஒருவருக்கான சத்துணவுக்காக 30 ரூபாவே ஒதுக்கப்பட்டிருந்தது. நானே அதனை 60 ரூபாவாக அதிகரித்தேன். எவ்வாறெனினும், தற்போது முட்டையொன்று 60 ரூபாவுக்கு விற்பனை செய்யும் நிலையில் 60 ரூபா எந்த வகையிலும் போதாது. ஆகக் குறைந்தது 150 ரூபா அதற்காக செலவிடப்பட வேண்டும்.

உணவு தேவைப்படும் ஒரு மில்லியன் மாணவர்கள் உள்ள நிலையில், அது இன்னும் ஒரு மாதத்தில் ஒன்றரை மில்லியனாக அதிகரிக்கலாம். எனினும், மாணவர்களுக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளது.

சீன அரசாங்கம் எமக்கு பத்தாயிரம் தொன் அரிசியை வழங்கியுள்ளது. அதன் இரண்டாம் கட்ட அரிசியும் எமக்குக் கிடைத்துள்ளது. அத்துடன் அமெரிக்காவின் யூஎஸ் எய்ட் திட்டத்தின் மூலம் எமக்கு மஞ்சள், பருப்பு மற்றும் ரின் மீன் ஒரு தொகையும் கிடைத்துள்ளது. 

அத்துடன் ஒரு மாணவரின் உணவுக்காக 150 ரூபாய் வழங்குவதற்கு உதவுவதாக லயன்ஸ் கழகம் உறுதியளித்துள்ளது. அந்த வகையில் இந்த திட்டத்தை படிப்படியாக முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.