நாடு எதிர்நோக்கி இருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட பஸ்னாகொட நீர் வழங்கல் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் இம்முறை வருட வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அதற்கு தேவையான நிறுவனங்களுடன் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (19) பத்தரமுல்லை செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பஸ்னாகொட நீர் வழங்கல் திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

கம்பஹா மாவட்டத்தில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த நீர் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

தன்னிறைவு பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் மக்களின் நீர்த் தேவையை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எனவே பஸ்னாகொட நீர் திட்டத்தை உடனடியாக மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட ஏனைய அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவாங்கொட கூட்டு நீர் திட்டத்தின் கீழ் பஸ்னாகொட நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன், நீர்ப்பாசன அமைச்சின் வழிகாட்டலின் கீழ் நீர்ப்பாசன திணைக்களம் நீர்த்தேக்கத்தை நிர்மாணித்து வருகிறது.

நீர்த்தேக்கத்தின் பிரதான அணையானது அத்தனகலு ஓயாவின் கிளை நதியான பஸ்னாகொட ஓயாவின் குறுக்கே கரஸ்னாகல்ல கிராமத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதன் பிரதான அணை 130 மீட்டர் நீளம் கொண்டது. உயரம் 20 மீட்டர். பஸ்னாகொட நீர்த்தேக்கம் சுமார் க்50 மீற்றர் உயரம் கொண்ட இரண்டு வாயில்களைக் கொண்ட  ஒரு  வான் கதவையும் கொண்டுள்ளது.

இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைப்பு செயலாளர் பிரதீப் ரத்நாயக்க, கம்பஹா மாவட்ட ஆளுநர் டபிள்யூ. எஸ். சத்தியானந்தா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முனீரா அபூபக்கர்

2022.09.19

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.