2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது.

இடைக்கால பாதீடு, கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பாதீடு மீதான விவாதம், இன்றைய தினம் மூன்றாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது.

இதனிடையே, நேற்று முன்தினம் இடம்பெற்ற பாதீடு மீதான முதலாம் நாள் விவாதத்தின்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் டளஸ் அழகப்பெரும உள்ளிட்ட 13 பேர் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்து எதிர்த்தரப்பில் அமர்ந்து கொண்டனர்.

இதையடுத்து, பாராளுமன்றில் எதிர்த்தரப்பில் 109 பாராளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்துள்ளதாக,  பாராளுமன்ற நூலகப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

115 பேர் ஆளுந்தரப்பு ஆசனங்களில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், நேற்றுமுன்தினம் பாராளுமன்றில் கருத்து வெளியிட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இதுவரையில் எதிர்த்தரப்பில் 103 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில், இன்று மாலை விவாதம் நிறைவடைந்ததை அடுத்து, பாதீடு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.