அனுதாபச் செய்தியில் கொஸ்மோ


மாட்சிமை மிகு மகாராணி எலிசபெத்தின் மறைவு இந்த உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள அதேவேளை, தாம் பெரிதும் கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளதாக பிரித்தானியாவிலுள்ள இலங்கை முஸ்லிம் அமைப்புக்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மகாராணி எலிசபெத்தின் மறைவு குறித்து பிரித்தானியாவிலுள்ள இலங்கை முஸ்லிம் அமைப்புக்களின் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சிபான் நயீம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எங்களுடைய இரங்கலும் எண்ணங்களும் மன்னர் மற்றும் அவரது குடும்பத்துடனும் உள்ளன. மாட்சிமை மிகு மகாராணி அவரது ஆட்சிக் காலத்தில் தனது நாட்டு, பொதுநலவாய  மற்றும் உலகின் ஏனைய மக்களினதும் நலனுக்காக அர்ப்பணிப்பு சிந்தையுடனும் பாசத்துடனும் பாராட்டத்தக்க வகையிலும் செயற்பட்டார். தன்னைச் சுற்றி மாறிவரும் உலகிற்கு ஏற்ப தன்னை பண்படுத்திக் கொள்வதில்  அபார திறமை கொண்டவராகக் காணப்பட்டார். மாட்சிமைமிகு மகாராணி என்ற கற்பாறை மீதே இன்றைய நவீன பிரித்தானியா கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

மாட்சிமைமிகு மகாராணி எமது நாட்டிற்கும் அதற்கு அப்பாலும் நம்பிக்கை ஸ்திரத்தன்மை மற்றும் ஒற்றுமை போன்றவற்றை வளர்ப்பதில் ஒரு கலங்கரை விளக்காக இருந்து ஐக்கிய இராச்சியத்தை ஒரு பன்முக கலாசார நம்பிக்கைசார் சமூகமாக மாற்றினார்.

இங்கிலாந்தில் புதிதாக உருவாக்கப்பட்ட முஸ்லிம் சமூகங்களுடன் ஈடுபடும் முதலாவது பேரரசு அவருடையதே. 2002ஆம் ஆண்டு தனது 50ஆவது பெரு விழா கொண்டாட்டத்தின் போது இங்கிலாந்து பள்ளிவாசலுக்குச் சென்ற முதலாவது மன்னர் மாட்சிமைமிகு மகாராணி எலிசபெத் ஆவார்.

நாம் அனைவரும், எல்லா மதங்களைச் சார்ந்தவர்களும் சாராதவர்களும் மாட்சிமைமிகு மகாராணியின் மரணத்திங்கு துக்கம் அனுஷ்டிப்போம். ஆனால், பொதுச் சேவையின் பாரம்பரியத்தை நினைவில் வைத்து அவரது சாதனையைக் கொண்டாடுங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.