#மறக்க_முடியாத_செப்டம்பர்_16

இருபத்தொரு ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற ஒரு தினத்தில்தான் என் கவிதைகளுக்கு முதல் அங்கீகாரம் கிடைத்தது.

அன்று உள்ளூரிலே கண்டுகொள்ளப்படாத என் கவிதைகள் இன்று நாடுகள்தாண்டி, எல்லைக்கோடுகள்தாண்டி உலக வீதியில் உலாவருவதற்கு அந்த நிகழ்வே காரணமாக அமைந்தது.

2001/9/16 ஆம் திகதி இலங்கை முஸ்லீம்களின் பெருந்தலைவர், கலாநிதி  மர்ஹூம் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்களின்  முதலாவது நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட தேசிய மட்ட கவிதை போட்டியில் பாடசாலை மட்டத்தில் எனக்கு முதலிடம் கிடைத்தது. 

அதற்கான விருதினை அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கரங்களால் கொழும்பு பண்டாராநாயக்கா மாநாட்டு மண்டப அரங்கில்  பெற்றுக்கொண்டேன். இந்த நிகழ்வே என் இலக்கிய பயணத்தை தன்னம்பிக்கையோடு தொடக்கி வைத்தது எனலாம்.

பொத்துவிலில் இருந்து கொழும்பு சென்று அந்த விருதினை வாங்குவதற்கு பணம் இல்லாத காரணத்தினால் நான் பட்ட அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

விழா ஏற்பாட்டு குழு தலைவராக இருந்த மறைந்த எழுத்தாளர், பாராளுமன்ற உறுப்பினர் மரூதூர் கனி அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த விருதினை அனுப்பி வைக்க முடியாதா? எனக்கேட்டபோது எனது அறியாமை நினைத்து ஆத்திரத்தில் திட்டியது என் கண்முன் வந்து போகிறது.

சிரேஸ்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் எனது அம்மாவின் தம்பி, எனது மாமா
தாஸீம் அவர்கள் கடனாக வழங்கிய 1000 ரூபாய்தான் என் பயணத்தை தொடக்கி வைத்தது. அவரை இன்றளவும் நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன். அத்தோடு என்னை கொழும்புக்கு அழைத்துச்சென்ற ஹக்கீம் ஆசிரியர், எனது கவிதை ஜெயிக்கு முன்பே ஜெயிக்கும் என்று கட்டியம் கூறிய நண்பன், தற்போது ஆசியராக பணிபுரியும் முஸம்மில் ஆகியோரையும் அன்போடு நினைவுகூறுகிறேன்.

பல்வேறு காரணங்களால் புறக்கணிக்கப்பட்ட நான் இந்த நிகழ்வின்பின்   கண்டவை அனைத்தும் வெற்றிகளே. 

முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை. எத்தனை சோதனைகள், தடைகள் வந்தபோதும் அதனை தகர்த்தெறிந்து நான் முன்னகர்ந்திருக்கிறேன்.

எதுவேண்டுமானாலும் உங்கள் வளர்ச்சியை தடுக்கலாம் கவலைப்படாதீர் மனதில் உறுதியிருந்திருந்தால்  இறைவன் துணையோடு
நினைத்ததை ஜெயிக்கலாம்.

படம் : தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவிலிலிருந்து எனது தீவிர ரசிகர் இன்று வழங்கிய அன்பு பரிசு..

பாடலாசிரியர் அஸ்மின்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.