Asheik M.M.A.BISTHAMY
(Naleemi) 
16/9/2022

ஆளுமைகளை  தேடுவது அலசுவது அறிமுகம் செய்வது அலாதியான உத்வேகத்தை தரக்கூடியது. 

திறமையும் ஆற்றலும் இருந்தும் ஏதோ ஒருசில காரணத்தால் எதுவும் செய்யாதிருக்கும் பலருக்குள்
எழுதவும் வாசிக்கவும் மொழி பெயர்க்கவும் நேர மொதுக்கி 
தன்னை ஒழுங்கமைத்துள்ள
ஒரு சிலருள் இவரும் ஒருவர். 

தற்பொழுது வயது நாற்பதுகளை நெருங்கியும் அடைந்தும் தாண்டியுமுள்ள கைதேர்ந்த வாசகர்கள் பலர் தொண்ணூறுகளில் அல்லது அதற்கு முன்னர் அதிகம் வாசித்தவர்கள் தான்.

தொண்ணூறு களின் ஆரம்பத்தில் கரும்பாய் இனித்த விஞ்ஞான சஞ்சிகை அரும்பு தந்த வாசிப்பு சுவை தான் இன்றும் அந்த வாசிப்பு நீள்வதற்கு காரணமெனில் அதில் பிழையிருக்காது.

அப்போது அறிவுபூர்வமான
அலசலுக்கு அசலான தீனி போட்ட பிரபல விஞ்ஞான கல்விச் சஞ்சிகை அதுமட்டும்தான் என்றும் சொல்லலாம்

அபூர்வமான அறிவியல் தகவல்கள், 
துணுக்குகள் என
ஏராளமான விடயங்களை ஒன்றுவிடாமல் வாசித்து பயன் கண்டோம்.

 மாணவர்களாக இருந்த எமது கண்களை அகலத் திறந்து மலரச் செய்தது அரும்பு தான்.

அறிமுகத்தை வேண்டி நிற்காத அபூர்வ அரிய ஆளுமை தான் ஆசிரியர் ஹாபிஸ் இஸ்ஸதீன் அவர்கள்.

 குறும்புத்தனம் புரியும் வயதில் கையில் அரும்பு சஞ்சிகையுடன் திரிந்து  வாசிப்பை அள்ளிப் பருகி தாகம் தீர்த்துக்கொண்டு பெருமையாக இருந்த வேளையில் வாசிப்பை  வெறும் தாகமாக மட்டும் சுருக்காமல் பசியாகவும் ஆக்கி அதனுடன் பிண்ணிப் பிணைந்து எம்மை வாசிப்பின் பக்கம் ஈர்த்து இழுத்து அதன் ஆழ அகலங்களை எல்லாம் காண வைத்த பெருமை அவரையே சாரும்

ஆசிரியர்களுக்கு மட்டுமன்றி அதிபர்களுக்கும் கல்வித் துறையினருக்கும் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும்
இளைஞர்களுக்கும் அவரது ஆதர்சம் எப்போதும் ஆகர்சனம் தந்து கொண்டே இருக்கும்.

மனிதர்களை எடை  போடவும் அளவிடவும் மட்டிடவும் அவர்கள் வாழ்ந்த சூழல், அப்போது இருந்த சமூக, அரசியல், கலாசார, தொழில்நுட்ப, அறிவியல் நிலைமை, கிடைத்த வாய்ப்புகள், வசதிகள்,  பட்ட கஷ்டங்கள் போன்றன முக்கியம்.  

அரச பாடசாலை நியமனம் பெற்ற ஆசானாக இருந்து இத்தனை அகன்ற தளத்தில்  வாசிப்பு, தேடல், எழுத்து, மொழிபெயர்ப்பு என்று இன்று வரை நீள்வது என்பது
பெருத்த சாதனை. அது சிலருக்குமட்டுமே வாய்க்கும். அப்படி ஒருவரை இங்கு தேடுவது அரிதிலும் அரிது.

 அப்படிப்பட்ட உயிர்த்துடிப்புள்ள முன்மாதிரி மூத்த விஞ்ஞான பாட ஆசிரியர் தான் எங்கள் எல்லோரது அன்பையும் வென்ற ஹாபிஸ் இஸ்ஸதீன்  Sir.

திடீரென அவர் குறித்து எழுத எனக்கு உத்வேகம் வந்தமை அவரது  கிட்டிய சிங்கள மொழிபெயர்ப்பு குறித்தான  අත දරුවා (மொழிபெயர்ப்பு)   தகவலை பார்த்தது தான். சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் சிலதை சிங்களத்தில் மொழிபெயர்த்து நூலாக்கி எதிர்வரும்
BMICH சர்வதேச புத்தக கண்காட்சியில் வெளியிட உள்ளமை தான் அவர் மீது திடீரென இப்படி ஓர் ஈர்ப்பு மீளவும் ஏற்பட காரணமானது.

இலங்கையில் கடந்த பல வருடங்களாக இடம்பெற்று வரும் பௌத்த - இஸ்லாமிய முறுகல், அல்லது முஸ்லிம் பௌத்த மோதல்களை அரசியல் ரீதியாக அணுகி தீர்வு காண்பதை விடவும் இலக்கியத்தினூடாக
தீர்வு காண முனைவது வேறு பல வாயில்கள் திறந்து தரும். இலக்கியம் சார் படைப்புகளை மொழிபெயர்த்து வாசிக்கவும் கலந்துரையாடவும் விடுவதன் ஊடாக இதனை பரவலாக சாத்தியப்படுத்தலாம் எனும் எனும் நிலைப்பாட்டில் நான் உள்ளேன்.

சகோதர மொழி பிரச்சாரத்தை விடவும் சகோதர மொழி இலக்கிய உரையாடல் தாக்கம் மிக்கது. 

அவர் எழுதிய சொந்த ஆக்கங்களாக நூல்களாக பலதையும் குறிப்பிடலாம். 

அறிவியல் சார் சஞ்சிகை எனும் வகையில்  1. அரும்பு - பொது அறிவுச் சஞ்சிகை (1-44) 

நூல்கள் எனும் வகையறாவில்   நோய்கள் 

 நினைவில் நிறைந்தவை

  மகளிர் சுகாதாரப் பிரச்சினைகள்

  අත දරුවා (மொழிபெயர்ப்பு) 

இவை தவிர 
மொழிபெயர்ப்புக்கள்: (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு)

பெற்றார் பிள்ளை உறவுகள்
ஹிஷாம் அத்தாலிப் அப்துல் ஹமீத் ஸுலைமான் உமர் அத்தாலிப்

தமிழுக்கும் தமிழுலகிற்கும்
Parenting துறையில் இது ஒரு பொக்கிஷம் என்று சிலாகிக்கலாம்

முஸ்லிம் இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வழிகாட்டி - ஹிஷாம் அல்தாலிப்

இளைஞர் வழிகாட்டல் மற்றும் வலுவூட்டலில் இது மைல்க்கல் என்று தான் சொல்ல வேண்டும். 

 முஸ்லிம் சிந்தை - ஹஸ்ஸான் ஹத்ஹூத்

  இரு கடல்களும் சந்திக்கும் போது - உம்மு முஹம்மத் 

எளிதிலும் எளிது - நfப்லா ஸலாஹுத்தீன்

தனது 
19 வயதில் அரச ஆசிரியராக நியமனம் பெற்று, விஞ்ஞான ஆசிரியராக, தென்மாகாண விஞ்ஞான ஆசிரிய ஆலோசகராக, அழுத்கம ஆசிரியர் கலாசாலையில் விஞ்ஞான விரிவுரையாளராக, இலங்கை கல்வி நிர்வாக சேவையில் பாடசாலை அதிபராக இருந்து 41 வயதில் ஓய்வு பெற்றும் அது வரையும்  பதவியில் உயர்ந்தும் தேடலில் சிறந்தும்  முன்னேறி சமூக தளத்தில் இருந்து விலகாமல் இயங்கி வருகிறார். 

தொடர்ந்தும் அதன் இருப்புடன் இசைவாக்கம் பெற்று எழுதி வருகிறார்.

அவரது மும்மொழி பாண்டித்தியம் அலாதியானது
ஆங்கில மொழி மூலம் பொதுக் கல்வி பெற்று  தமிழ் மொழி மூலம் ஆசிரியர் பயிற்சி பெற்று சிங்கள மொழி மூலம் B. Ed பட்டப் படிப்பை தொடர்ந்து அதனை நிறைவு செய்யாத நிலை இருப்பினும் மும்மொழித் தளங்களிலும் பாண்டித்தியத்தை வெளிப்படுத்துகிறார்.

ஆசிரியரின் ஆக்கபூர்வ வரலாற்றுப்பணியை மட்டிட உலகத்தரம் வாய்ந்த இந்த இரண்டு தடித்த கனதியான நூல்களே(மொழிபெயர்ப்பு) போதும். 

உண்மையில் இது தேசிய பங்களிப்பாக மட்டும் சுருங்காது
சர்வதேச தரம் வாய்ந்த நூலொன்றை மொழிபெயர்த்து
சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளார் என்றே கூற வேண்டும். 

அவரது தனிப்பட்ட எழுத்துகளை வாசிக்கையிலும்
அதிகமான மனிதர்களை புத்திஜீவிகளை
சம்பாதித்துள்ளார். 

தனது மகனும் சர்வதேச தரம் வாய்ந்த நிலையை அடைந்த நிலையில் சாதனை புரிந்து உலகையே அவர்களின் பக்கம் தலைநிமிர்ந்து பார்க்க வைத்துள்ளார். 

இத்தகைய ஆளுமைகளை சமுகம் இனங்கண்டு பயன்பெற வேண்டும். அத்தகைய வரலாற்று பணிகளை நோக்கி நகர வேண்டும்

அவரை அறிமுகம் செய்யும் போது பெரும்புகழைத் தேடித்தந்த

அரும்பின் பின்னாலுள்ள ஒப்பற்ற தியாகமும் அர்ப்பணமும் அலாதியானவை.

அதுகுறித்து மட்டுமே ஒரு நீள் கட்டுரை வரையலாம்.

அரும்பின் மூலம் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் என பலரும் நிச்சயம் பலனும் பயனும் பெற்றிருப்பர்.

ஒரு மனிதனின் ஆளுமையை உலகில் அடையாளப்படுத்துவது
அவரவர் பணிகளும் அதன் பாரமும் தான்.
வாழுங்காலத்திலே
பயன்தரும் கல்வியை புத்தகமாக
விட்டுச்செல்லும்
ஆசானுக்கு வாழ்த்துக்கள்.

பணிகள் சிறக்கட்டும்
சிந்தனைகள்
வானளாவ சிறகு முளைத்துப் பறக்கட்டும்

விஞ்ஞானத்தில்
மொழியில்
எழுத்தில்
கலை இலக்கியத்தில் அதீத ஆர்வமுள்ள ஆசிரியர் விஞ்ஞான புனைவுகளையும்
இனிவரும் காலங்களில் 
தந்தால் அது மகத்தான பணியாக அமையும் 

அல்லாஹ் எம்மையும் நற்கருமம் புரிவோர் கூட்டத்தில் இணைப்பானாக....

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.