பாடசாலை மாணவியை தும்புத்தடியால் கடுமையான முறையில் தாக்கிய அதிபர், மத்திய மாகாண ஆளுநரின் கட்டளையின் பிரகாரம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மாணவியின் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்ட கொட்டகல-பத்தளை போகாவத்த சிங்கள மகா வித்தியாலயத்தின் அதிபர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், நுவரெலியான கல்விக்காரியாலயத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

அந்த பாடசாலையில் 10 ஆம் வகுப்பில் பயிலும் மாணவியின் மீது கடந்த 29ஆம் திகதியன்று தும்புத்தடியால் தாக்குதல் நடத்தியதாக அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதன் பின்னர், மத்திய மாகாண ஆளுநரினால் மேற்கண்டவாறு பணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மத்திய மாகாண கல்வியமைச்சரின் செயலாளருக்கும் ஆளுநரினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி, டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

எதிர்வரும் 5ஆம் திகதி கொண்டாடப்படவிருக்கும் சர்வதேச ஆசிரியர் தி​னத்தை முன்னிட்டு ஒவ்வொரு மாணவர்களிடமும் 300 ரூபாய் அறவிடப்பட்டுள்ளது. அதனை செலுத்த தவறிய தன்னுடைய சகோதரனை அந்த அதிபர் தூசனத்தால் திட்டியுள்ளார்.

அதனை பொறுத்துக்கொள்ள முடியாத சகோதரியான மாணவி,  தட்டிக்கேட்டதை அடுத்தே, தும்புத்தடியால் அம்மாணவியை அந்த அதிபர் பதம் பார்த்துள்ளார்.

அதிபரின் இந்த தாக்குதல்களுக்கு ஊடகங்களின் ஊடாக கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tamil mirror

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.