(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

2023 ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தக விநியோகத்துக்காக 39.5 மில்லியன் பாடப் புத்தங்களை அச்சிட வேண்டும். பாடசாலை மாணவர்களுக்கான சீருடை உற்பத்திக்கான ஆரம்பகட்ட நடவடிக்கை முழுமைப் பெற்றுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதமளவில் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் திங்கட்கிழமை (03) பாராளுமன்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்களின் போது எதிர்த்தரப்பின் உறுப்பினர் புத்திக பத்திரன முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 2023ஆம் ஆண்டுக்காக 39.5 மில்லியன் பாடப் புத்தகங்கள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றில் 45 சதவீத பாடப் புத்தகங்களை இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் கடதாசி மற்றும் மூலப்பொருள் இறக்குமதி ஊடாக அரசாங்க அச்சக திணைக்களத்தின் ஊடாக அச்சிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டு, அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மிகுதி 55 சதவீதமான புத்தகங்களை அச்சிடுவதற்கு தேசிய பெறுகை ஊடாக திறந்த மனுகோரல் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய இன்னும் குறுகிய காலத்திற்குள் பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு, துரிதமாக விநியோகிக்கப்படும்.

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகத்துக்காக ஆரம்பகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீனாவிடமிருந்து பொதி செய்யப்பட்ட வகையில் 70 சதவீதமான சீருடைகளை பெற்றுக் கொள்ள இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகுதி 30 சதவீதமான சீறுடைகளை தேசிய உற்பத்தி செய்ய 1900 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆகவே சீனாவிடமிருந்து 70 சதவீதமளவும், தேசிய மட்டத்தில் 30 சதவீதமளவும் சீருடையை உற்பத்தி செய்யும் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதமளவில் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை விநியோகிக்கப்படும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.