நாடாளுமன்ற பொது நிதிக்குழுவின் தலைவராக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா, தமது அதிகாரங்களை மீறிச்செயற்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றில் முறையிடப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்கொய்ல் இந்த முறைப்பாட்டை இன்று நாடாளுமன்ற சபையில் முன்வைத்தார்.

அதிகாரிகளை விசாரணை செய்யும்போதும், நடைமுறைகளை பின்பற்றும்போதும் அவர், அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டார் என்று அவர் குற்றம் சுமத்தினார்.

இதன்போது அரசாங்க மற்றும் எதிர்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு மத்தியில் கடுமையான வாதவிவாதங்கள் இடம்பெற்றன.

இந்த முறைப்பாட்டுக்கு பதிலளிக்க ஹர்ச டி சில்வா முயன்றபோதும், சபாநாயகர் அதற்கு இடமளிக்கவில்லை.

தமது கருத்தை நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவிடம் முன்வைக்குமாறு சபாநாயகர் அவரிடம் கூறினார்.

இதன்போது ஹர்ச டி சில்வாவுக்கு ஆதரவாக பல உறுப்பினர்களும் தமது கருத்துக்களை முன்வைக்க, சபையில் குழப்பநிலை ஏற்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமது கருத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்படுமானால், அதனை அவர்கள், சிறப்புரிமை குழுவிலேயே முன்வைக்க வேண்டும். அதனை நாடாளுமன்ற சபைக்கு கொண்டு வர அவசியமில்லை என்று குறிப்பிட்டார்.

இதனையடுத்து கருத்துரைத்த, ஜேவிபியின் தலைவர் அனுர திசாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறல் விடயங்கள், சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்டே பின்னர், சபையில் வாசிக்கப்படுகின்றன.

எனினும் அந்த சிறப்புரிமை பிரச்சினையை சபையில் முன்வைக்க இடமளிக்கும் சபாநாயகர், அதற்கு பதிலளிக்கும் உரிமையை ஹர்ச டி சில்வாவுக்கு வழங்காமை ஏற்கமுடியாதது என்று குறிப்பிட்டார்.

எனவே நாடாளுமன்ற சபையில் முன்வைக்கக்கூடிய சிறப்புரிமை பிரச்சினை எது என்பதை சபாநாயகரே தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதன்பின்னர் கருத்துரைத்த ஹர்ச டி சில்வா, கோப், மற்றும் கோப்பா குழுக்கள் இயங்காத நிலையில், அமைச்சர் கஞ்சன விஜயசேகர கேட்டுக்கொண்டமைக்கு அமையவே தாம் செயற்பட்டதாகவும், இதற்கு முன்னதாக தாம், பொது நிதிக்குழுவின் தலைவருக்குரிய அதிகாரங்கள் குறித்து சபாநாயகரின் முழுமையான ஆலோசனையை பெற்றதாகவும் குறிப்பிட்டார்.

தமிழன்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.