அடிக்கடி நிகழும் வெள்ளத்தில் இருந்து கடுவெல நகரைப் பாதுகாக்க முறையான வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டுமென கடுவெல நகரசபை பிரதேச அபிவிருத்தி திட்டம் தயாரிப்பது தொடர்பில் நேற்று (18) இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்மொழியப்பட்டது.

மேலும் கடுவெல நகரத்தை பொதுமக்களுக்கு மிகவும் பாதுகாப்பான நவீன நகரமாக அபிவிருத்தி செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

கடுவெல மாநகர சபைக்கு உட்பட்ட நகர அபிவிருத்தித் திட்டத்தை (2023-2033) தயாரிப்பதற்கான முன்மொழிவுகள் மற்றும் யோசனைகளைப் பெறுவதற்கான கலந்துரையாடல் நேற்று (18)கடுவெல மாநகர சபையின் மேயர் புத்திக ஜயவிலால் தலைமையில் நகர சபையில் இடம்பெற்றது.

அந்த பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் மற்றும் பிரதேச பொதுமக்களை உள்ளடக்கி இந்த அபிவிருத்தி திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.

கடுவெல நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புராதன பாரம்பரியத்தைப் பாதுகாத்தபடி விவசாயம், மீன்பிடி, பொருளாதாரம், சுற்றாடல், உட்கட்டமைப்பு, போக்குவரத்து, சுகாதாரம், சுற்றுலா, கல்வி, சிறு மற்றும் நடுத்தர வர்த்தகம் போன்ற துறைகளில் அடுத்த 10 வருடங்களில் கடுவெல மாநகர சபை எல்லைக்குள் ஏற்படுத்தப்பட வேண்டிய அபிவிருத்திகள் பற்றிப்  பங்கேற்பாளர்கள் கருத்து தெரிவித்தார்கள்.

அந்தப் பகுதி மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில், தற்போதுள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்த புதிய வேலைத்திட்டம் தயாரிப்பது குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அப்பகுதியில் சிறிய கால்நடை பண்ணைகள் தொடங்கவும் முன்மொழியப்பட்டது.

இக்கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் (திட்டமிடல் மற்றும் மூலோபாய) பிரியாணி நவரத்ன, கடுவெல மாநகர சபை மாநகர ஆணையாளர் தில்ருக்ஷி கமகே, கடுவெல பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி இன்ஸ்பெக்டர் கான் வீரசிங்க மற்றும் கடுவெல மாநகர சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.