இலங்கையின் தகவல் தொழில்நுட்பத் திறன் கொண்ட இளைஞர்கள் எதிர்காலத்தில் ருமேனியாவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் இணைவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என இலங்கைக்கான ருமேனிய தூதுவர் விக்டர் சியுஷ்டியா தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (07) அலரிமாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த போதே இலங்கைக்கான ருமேனிய தூதுவர் இதனைத் தெரிவித்தார்.

பல்தேசிய நிறுவனங்கள் மற்றும் ருமேனிய நிறுவனங்களில் தகவல் தொழிநுட்ப நிபுணர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைகள் இருக்கும் என்றார்.

உயர்கல்வித் துறையில் ஒத்துழைப்பைப் பற்றி விவாதிப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் ஒரு பரஸ்பர விஜயத்தின் கீழ், இலங்கை கல்வியாளர்கள் குழு விரைவில் ருமேனியாவுக்குச் செல்லவுள்ளதாக தூதுவர் சியுஷ்டியா தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிப்பதற்கு இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் குணவர்தன மற்றும் ருமேனிய தூதுவர் கலந்துரையாடியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் ருமேனியா இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்த பிரதமர், இலங்கைக்கு வழங்கப்பட்ட ருமேனிய ரயில் பெட்டிகள் மற்றும் தண்டவாளங்கள் குறித்து விசேடமாக நன்றி தெரிவித்தார்.

இலங்கையுடன் இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பதற்காக தமது நாடு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடவுள்ளதாகவும் இதன் மூலம் வர்த்தகச் செயற்பாடுகள் சுமூகமாக அமையும் எனவும் தூதுவர் சியுஷ்டியா தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.