எந்த அரசாஙகம் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (31) தெரிவித்தார்.

அத்துடன் அடுத்த 20-30 வருடங்கள் பற்றி சிந்தித்து இப்போதே செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

உலக நகர தினத்தை முன்னிட்டு கோட்டே கொடுபெம்ம ஈரநில பூங்காவை இன்று (31)  திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உலக நகர தினத்தை முன்னிட்டு, துவிச்சக்கர வண்டியில் வேலைக்குச் செல்லும் வேலைத்திட்டமொன்று நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தலைமையில் இன்று காலை பெலவத்தை புத்ததாச விளையாட்டரங்கிற்கு அருகில் ஆரம்பமானது.

பின்னர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே தலைமையில் பத்தரமுல்லை, செத்சிறிபாய வளாகத்தில் களுவர மற்றும் கரந்த மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

கோட்டே கொட்டுபெம்ம ஈரநிலப் பூங்கா நவம்பர் 2018 இல், நகர அபிவிருத்தி அதிகாரசபையால் உலக வங்கியின் உதவியுடன் இந்த ஈரநிலப் பூங்காவை நிர்மாணித்துள்ளதுடன், இதற்காக கிட்டத்தட்ட 400 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

கொட்டுபெம்ம சதுப்பு நில பூங்காவின் மொத்த பரப்பளவு 14 ஹெக்டெயர் ஆகும். இது பெத்தகான ஈரநில பூங்காவின் விரிவாக்கமாகும். இங்கு பட்டாம்பூச்சிகள், டிராகன்ஃபிளைஸ், பல்வேறு மீன்கள், பறவைகள் மற்றும் மீன் பிடிப் பூனைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களைக்  காணலாம்.

இந்த சதுப்பு நில பூங்கா தினமும் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும், இங்கு பெரியவர்களுக்கான டிக்கெட் கட்டணம் 100 ரூபாய் மற்றும் குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணம் 50 ரூபாயாகும்.

முதல் பயணச்சீட்டை வாங்கிக்கொண்டு ஈரநில பூங்காவிற்குள் பிரவேசித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பின்னர் ஈரநில பூங்காவை அவதானிக்கும் விஜயத்தை மேற்கொண்டார்.

உலக நகர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் மேலும் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது:

"கோட்டே, கொட்டுபெம்ம ஈர நிலப் பூங்கா

இயந்திரங்கள் இன்றி மனித உழைப்பை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் சதுப்பு நில பூங்கா உருவாக்கப்பட்டது. சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பில்லாத  இந்தப் பூங்கா எதிர்காலத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பல்கலைகழக மாணவர்களின் படிப்புக்கு உதவியாக அமையும்.எனவே இது மிகவும் முக்கியமான பெறுமதி வாய்ந்த திட்டமாகும். இதற்கு உலக வங்கி நிதி வழங்கியுள்ளது. 

நமது நாடு பொருளாதார, சமூக, அரசியல் நெருக்கடியை சந்தித்து வரும் சூழ்நிலையில் உலக நகரங்கள் தினத்தை கொண்டாடி வருகிறோம்.அதனால் இந்த நிகழ்வை மிக எளிமையாக ஏற்பாடு செய்தோம்.ஆனால் இது விலைமதிப்பற்ற மற்றும் பெறுமதி வாய்ந்த திட்டமாகும். இத்திட்டமானது. இது கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும்.  ஆதலால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் , அமைச்சர்கள் மாறினாலும் மக்களுக்குப் பயன்படும் இது போன்ற திட்டங்களை நிறுத்தப்படக் கூடாது என நினைக்கிறேன். இந்தத் திட்டத்தைத் தொடங்கிய எனக்கு முன் இருந்த அமைச்சர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த காலங்களில் கொழும்பு மீத்தொட்டமுல்ல குப்பை மேடு இடிந்து விழுந்து பல உயிர்களை இழந்ததுடன், பல சுற்றாடல் பிரச்சினைகளும் எழுந்தன.நகரங்கள் சரியாக திட்டமிடப்படாததால் தான் இதுபோன்ற அவலங்கள் ஏற்படுகின்றன.  முறையாக நகர அமைப்பை திட்டமிடுவதன் மூலம் இதுபோன்ற அவலங்களை தடுக்க முடியும்.

தற்போது உலகில் கிராமப்புறங்கள் குறைந்து நகர்ப்புறங்கள் அதிகரித்து வருகின்றன. நிபுணர்களின் கூற்றுப்படி, 2050 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வார்கள். அதற்கு ஏற்ப நகரத்தை தயார்படுத்துவது நமது பொறுப்பு.அடுத்த 20-30 ஆண்டுகளைப் பற்றிச் சிந்தித்து அவசரமாக இதற்கான வேலைத்திட்டத்தை அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு உருவாக்க வேண்டும்.எதிர்காலத்தில் பல நகர திட்டங்களை வர்த்தமானி மூலம் வெளியிட தயாராகி வருகிறோம்.அதன்படி கொழும்பு மாத்திரமல்ல ஏனைய நகரங்களையும் திட்டமிட்ட வகையில் அபிவிருத்தி செய்ய முடியும்.

இவ்வாறான பணிகளில் பல்வேறு நபர்களிடமிருந்து பல அழுத்தங்கள் காணப்படுவதாகவும், முக்கிய விடயங்களில் நான் ஒருபோதும் அரசியல் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை எனவும், எனவே தமது அமைச்சின் அதிகாரிகள் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் முக்கிய விடயங்களில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர பின்வருமாறு தெரிவித்தார்.

‘நகர அபிவிருத்தி அதிகாரசபையானது உள்ளூராட்சி அமைப்புகளுடன் இணைந்து செயற்படுகிறது, அடிமட்டத்தில் நகர வசதிகளை நிர்வகிக்கும் பொறுப்பு மாகாண அரசாங்கங்களிடமே உள்ளது. மற்றும் தேவையான ஒருங்கிணைப்பு செயற்பாடுகள் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படுகின்றன.

நமது நாட்டின் 20-25 சதவீத மக்கள் நகர்ப்புறங்களில் வசிப்பதால், எதிர்காலத்தில் இந்நிலை மேலும் அதிகரிக்கும்.எதிர்கால நகரத் திட்டத்தில் இதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.அப்போதுதான், கொழும்பின் நிர்வாகப் பகுதியில் கட்டப்படும் கட்டடங்களுக்கு ஓரளவு நிவாரணம் பெற முடியும்.

நகர அபிவிருத்தியில் பெத்தகான சதுப்பு நிலம், கொலன்னாவ சதுப்பு நிலம், தியசரு  உயன போன்ற சதுப்பு நிலங்களை பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு வாழக்கூடிய சூழலை உருவாக்குவோம் என நம்புகின்றோம். பெத்தகான சதுப்பு நிலத்தை திறப்பது மிகச் சிறிய விடயம். ஆனால் இது விலை மதிப்பற்றது. அதை பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்களின் பொறுப்பு.

இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பின் (IUCN) இலங்கைப் பிரதிநிதி கலாநிதி ஆனந்த மல்லவதந்திரி அவர்கள் இங்கு சிறப்புரையாற்றினா்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் பிரசன்ன சில்வா, உலக வங்கியின் நகர விசேட  நிபுணரான தலைதா ஈ யுவோனோ, கொழும்பு மாநகரப் பகுதி நகர அபிவிருத்தித் திட்டத்தின் பணிப்பாளர் துஷாரி ஆந்திராஹன்னதி மற்றும நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவங்களின் தலைவர்கள், ஏனைய உயர் அதிகாரிகள்; நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அலுவலர்கள் இதில் கலந்துகொண்டனர்.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.